கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கருத்துரிமைக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் !

இந்துத்துவவாதிகள்,கருத்துரிமைக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் ஆபத்தான அராஜகப் போக்கை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் !

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் பாஜக அமர்ந்த பின்பு பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் ஒரே நோக்கோடு பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது, பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி உரிமை வேலைவாய்ப்புரிமை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமை என ஒவ்வொன்றாக பறித்து வருகிறது.

அந்தவகையில் மிக முக்கியமாக கருத்துரிமைக்கு எதிராக இந்துத்துவவாதிகளின் கடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A (h) வழியாக அடிப்படை கடமையாகக் கூறியுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஆய்வு செய்யும் மனப்பான்மையை வளர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் இயக்கவாதிகள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் கடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுப்பது, சிறையில் அடைப்பது, தாக்குதல்கள் நடத்துவது என தங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவவாதிகள் தடையின்றி அரங்கேற்றி வருகிறார்கள்.

நேரடித் தாக்குதல்களில் ஈடுபடும் இந்துத்துவவாதிகள் மீதும், நீதிமன்றங்களை மிக இழிவாகப் பொது இடங்களில் பேசும் சங் பரிவார அமைப்பினர் மீதும், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவுபடுத்தி பகிரங்கமாக பேசும் பாஜக, இந்துத்துவவாதிகள் மீதும் இந்த அரசுகள் எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் அவலமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளையும் அவற்றை செய்தவர்கள் யார் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

தற்பொழுது தமிழ்நாட்டில் கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் நடத்திய, அதில் பேசிய, தொழிநுட்ப பணிசெய்தத் தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களின் மீது 153A எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்கள் செய்த குற்றம் என்ன ?
அவர்கள் குற்றச் சதி எதிலும் ஈடுபடவில்லை. அவர்களிடம் குற்ற நோக்கமும். இல்லை; பிரிவு 153 Aவின் படி இரு பிரிவினருக்கு இடையே பகைமையை வளர்த்தல் என்பதுதான் வழக்கு. அரசியல் சட்டப்படி அவர்களும் இந்துக்கள் ஆகத்தான் இருக்கும் பொழுது இந்தப் பிரிவு எப்படி இவர்களுக்குப் பொருந்தும்?

இதற்கு முன்பு கூட இதுபோல பலர் மீது வழக்குகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள். நடிகை குஷ்பு, ஓவியர் எம்.எஃப் உசேன் போன்றோர் மீதும் இப்படித்தான் வழக்குகள் தொடரப்பட்டது. இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம், அனைவருக்கும் தங்கள் கருத்துகளை, விமரிசனங்களையும் முன்வைக்க உரிமை உண்டு எனக்கூறி அவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்து தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இவ்வாறு கருத்துரிமைக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கியிருப்பது தமிழக அரசுக்கு நன்கு தெரிந்திருந்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக தமிழகக் காவல்துறை இதுபோன்ற வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

இது கைது செய்து சிறையில் அடைக்கும் அளவிற்கான குற்றமோ வழக்கோ இல்லை; ஆனால் அச்சுறுத்தும் நோக்கோடு தமிழகக் காவல்துறை இதுபோன்ற வழக்குகளை இந்துத்துவவாதிகளின் அழுத்தம் காரணமாகத்தான் பதிவு செய்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் பேசியதை விட ஆபாசமான கதைகள் இந்து மதப் புராண,இதிகாசங்களில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக வால்மீகி இராமாயணம் எனும் இந்து இதிகாச நூல். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதிலுள்ள இராமனின் பிறப்புக் கதையை படித்தாலே மான உணர்வுள்ளோர், உண்மை பக்தியுள்ளோர் தூக்கிலிட்டு சாகலாமா என்று சிந்திக்க வேண்டியதாகக் கூட இருக்கும்.
ஐயப்பன் பிறப்பு, லிங்கபுராணம் என ஏராளமான ஆபாச கதைகள் இந்துமத புராண இதிகாசங்களில் விரவிக் கிடக்கின்றன.
பெற்ற மகளையே வல்லுறவு கொண்ட பிரம்மன்,பின் தன் மகனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்ததாக சொல்லும் காது கூசும் ஆபாச பிரம்ம புராணத்தை
இந்துத்துவவாதிகள் இல்லை என்று மறுக்க முடியுமா ?
இதையெல்லாம் சொன்னால் இவர்கள் என்ன ஆவார்கள் என்று தெரியவில்லை.

இந்துத்துவ வாதிகளுக்கு ஒரு ஆலோசனை சொல்கிறோம். ஒன்று நாகரீகமற்ற மக்களாய் ஆரியர் இருந்த காலத்தில் எழுதிய இவற்றை இப்போது நாங்கள் ஏற்பது இல்லை என்றாவது சொல்லுங்கள்; அல்லது நாங்கள் இப்படித்தான் எழுதி வைத்திருப்போம்; இந்துக்கள் யாரும் இவற்றைப் படிக்கக் கூடாது என அந்தக்காலத்தில் சொன்னதுபோல் சொல்லியாவது விடுங்கள்.

தற்போது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த நிகழ்வுகளுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடர்புபடுத்தி மக்கள் மத்தியில் பொய்யான, தவறான வெறுப்பு பிரச்சாரத்தை செய்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கி, தேர்தலில் தங்களுக்கும் தங்கள் கூட்டணிக்கும் சாதகமாக மாற்ற மிகக் கேவலமான உள்நோக்கத்தோடு இந்துத்துவவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதுபோலவே வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாகவே காவல்துறையே தீர்ப்பு வழங்குவதைப் போல கறுப்பர் கூட்டம் வலைதளத்தை தடைசெய்யுமாறு யூடியூப் நிர்வாகத்துக்கு எழுதியுள்ளார்கள்.அவ்வலைதளத்தில் உள்ள அனைத்துக் காணொளிகளையும் தான்தோன்றித் தனமாக,சட்ட விரோதமாக நீக்கியும் இருக்கிறார்கள்.வழக்கு தொடர்பான காணொளியை கறுப்பர் கூட்ட நிர்வாகிகளே நீக்கிவிட்டார்கள்.ஆனால் காவல்துறையோ பல்வேறு சமூக, அரச்யல், சுற்றுச்சூழல் குறித்த 500க்கும் மேற்பட்ட காணொளிகளையும் நீக்குவது என்ன நியாயம்? இந்த ஆணவப்போக்கு,இந்த நாடு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வியையே அனைவர் மனதிலும் எழுப்புகிறது.

ஆக,
இந்துத்துவவாதிகளின் இந்த கருத்துரிமைக்கு எதிரான போக்கு, தேர்தல் நேர லாப நோக்கை மனதில் கொண்டு உண்மை பேசும் ஊடகங்கவியலாளர்களைக் குறிவைப்பது, இந்துத்துவ வாதிகளின் அழுத்தங்களுக்கு தமிழக அரசும் காவல்துறையும் அடிபணிந்து பொய் வழக்குகளைப் புனைந்து கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும், இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகவும் இந்துத்துவவாதிகளால் வளர்ந்து வரும் இந்த ஆபத்தான போக்கை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு களம் காண வேண்டுமென்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
21.07.2020

You may also like...