ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு !
திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

மக்கள் பணியில் உயிர்நீத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் அளித்துள்ள இரங்கல் செய்தி :

திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர்.
பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான்.
இந்த மரணம் அவருக்கும் அவர் சார்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்று நிச்சயமாக நாம் சொல்ல முடியும்.

இவரது தந்தை ஜெயராமன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலூக்கமிக்க தொண்டராகப் பணியாற்றி வந்தவர். தியாகராய நகரில் பழக்கடை நடத்தி வந்தார். 1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை கொண்டு வந்து திமுகவினரை மிசாவின் கீழ் கைது செய்த போது இவரது தந்தையும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையிலே வாடியவர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியாவிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொரானோவிற்காக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்ற ஒரு மக்கள் தொண்டாற்றும் பணியில் ஈடுபட்டு அதன் காரணமாக உயிர் இழந்திருக்கிறார் என்ற பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஜெ.அன்பழகன் அவர்களுக்கும் கிடைத்து இருக்கிறது.
ஆனாலும் செயலூக்கமிக்க ஒரு தோழரை திராவிட முன்னேற்றக் கழகம் இழந்து நிற்கிறது.திமுகவினருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

– தோழர் விடுதலை ராஜேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
10.06.2020

You may also like...