தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன்

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன்.

வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
11-5-2020

 

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன்.

பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள்.

செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை நடத்தி வைத்த தோழர் ஈஸ்வரனை கடத்திச் செல்கிறார்கள். மற்றொரு இடத்தில் இருந்து பாதுகாப்பு கருதி உக்கம்பருத்திக்காடு என்ற ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மணமக்கள் செல்வனையும் இளமதியையும் தடுத்துப் பிடித்து இளமதி யை மட்டும் அவர்களோடு தங்கள் ஊரான பவானி குருப்பநாயக்கன் பாளையத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் மணமகன் செல்வனை அங்கிருந்து 7, 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருங்கல்லூர் என்ற ஊரில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியைத் திறந்து அதற்குள் ஏற்கனவே கடத்திச் செல்லப்பட்ட ஈஸ்வரனையும் செல்வனையும் அடைத்து வைக்கிறார்கள்.

செய்தி அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை மீட்டு கொளத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு காவல்துறையினர் அங்கு சென்றபோது அங்கு இருந்த ஈரோடு மாவட்ட ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் வேலுச்சாமி என்பவர் அமைச்சர் கருப்பண்ணன் அழைப்பதாக சொல்லி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் கைபேசியை அளித்துள்ளார். ஆனால் காவல்துறை கண்காணிப்பாளர் அந்த சமயத்தில் அமைச்சருடன் பேசவில்லை. காப்பாற்றப்பட்ட இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விடுகிறார்கள். காவல்துறை துணை கண்காணிப்பாளர் மட்டும் அங்கேயே இருந்துள்ளார். ஒருவேளை அப்போது அமைச்சருடன் பேசி இருக்கலாம் என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது.

தங்கள் ஊரான பவானியில் இருந்து ஏறத்தாழ 55, 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் உள்ளூர் ஆட்களின் துணையில்லாமல் அடைத்து வைத்திருக்க முடியும் என்பதையோ, குறிப்பிடப்பட்ட வேலுச்சாமிக்கு தொடர்பு இல்லாமல் இருக்குமேயானால் தனது ஊரிலிருந்து 60, 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊரில் குற்ற நிகழ்வு நடந்தபோது அங்கு இருப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.
மேலும் செல்வனைக் கடத்திய உடன் “அண்ணா நாங்கள் அவனை தூக்கி விட்டோம்” என்ற செய்தியை வைஸ் சேர்மன் இடம் சொன்னதாக அவர்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும் அதே நபரிடம் இருந்து இவர்கள் இருவரையும் ஆற்றோரத்தில் கொண்டு செல்லுங்கள்; அடித்து ஆற்றில் விடுவோம் என்று அறிவுறுத்தல் வந்ததாகவும் அவர்களுக்குள் பேசியுள்ளார் கள். சிறிது நேரத்தில் அதே வைஸ் சேர்மன் அழைத்து பெண்ணின் தரப்பினரையும் மற்றும் சிலரையும் காவல்துறை கைது செய்துவிட்டது; எனவே அவர்களை கருங்கல்லூர் கொண்டு செல்லுங்கள் என்றும் பேசியிருக்கிறார். அந்த செய்தி உடனே கடத்திச் செல்லப்பட்ட வாகனத்திலிருந்து செல்வன் முன்னிலையிலேயே அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அந்த வேலுச்சாமியையோ, உள்ளூரைச் சேர்ந்த செல்வம் இடத்தில் இருந்து பணம் பதினையாயிரம் அவருடைய கைபேசியும் பிடுங்கிக்கொண்டு பின்னர் வீரப்பன் என்று காவல்துறையினரால் சொல்லப்பட்ட அந்த நபரையோ இதுவரை கைது செய்யவில்லை.

குற்றம் நடந்த இரண்டு வாரம் கழித்து 23 3 2020 அன்று அடையாள அணிவகுப்புக்காக சம்மனை வந்து பெற்றுக் கொள்ளச் சொல்லி மேட்டூர் துணைக் கண்காணிப்பாளர் சொன்னதால், அங்கு சென்று செல்வன், ஈஸ்வரன் இருவரும் கையெழுத்திட்டு சம்மனை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்போதும் எந்த குற்ற நிகழ்வைப் பற்றி எந்த விசாரணையையும் துணைக் கண்காணிப்பாளர் செல்வனிடம் மேற்கொள்ளவும் இல்லை.

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிற 8 பேரும் இதற்கு முன்னரே இரண்டு முறை, தங்கள் பிணைக்கான விண்ணப்பங்களை கொடுத்து அவை மறுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 24 -5- 2020 பிணைக்காக விண்ணப்பித்திருந்த போது, அதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் செல்வனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதுவும் பிணை விண்ணப்பத்தின் நகல் இல்லாமல் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு கொடுத்தால்தான் தன்னால் உரிய வகையில் அதற்கு மறுப்பு கொடுக்க முடியும் என்பதையும் ஏற்கனவே நீதிமன்றத்தில் மனுவாகக் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்று 11 5 2200 அவர்களில் முதல் குற்றவாளியான குருமூர்த்தியின் பிணை விண்ணப்பம் விசாரிக்கப்பட உள்ளதாக விண்ணப்பத்தின் நகல் இல்லாமலே புகார் செய்த செல்வனுக்கு 10 5 2020 நேற்று நண்பகல் ஒரு மணி அளவில் தான் இன்று சேலத்தில் நடக்க இருக்கிற விசாரணையை பற்றிய அழைப்பாணையை மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் காவலர் வழியாக அனுப்பி ஒப்புதல் பெற்றிருக்கிறார்.

புகார் அளித்து இரண்டு மாதங்கள் கடந்த பின்னாலும் இதுவரை புகார்தாரரிடம் எவ்வித விசாரணையும் செய்யாமலும். ஒரு எட்டு பேரைத் தவிர வேறு எவரையும் கைது செய்யாமலும் அவர்கள் எளிதில் பிணையில் செல்வதற்கு ஒத்துழைப்பது போல நடந்து கொண்டிருக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளும் காவல்துறையும் ஒருவேளை அமைச்சரின் தலையீடு என்ற காரணத்தால் அக்கறையற்று செயல்படுகிறார்கள் என்ற ஐயம் எங்கள் மனதிலும் எழுந்திருக்கிறது.

இதை அனைத்தையும் உள்துறைப் பொறுப்பையும் தன்னிடம் வைத்துஙகொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களும், காவல் துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மனதில் கொண்டு குற்ற விசாரணையை உரிய முறையில் விசாரித்தும், கைது செய்யப்படாமல் உள்ளவவர்களையும் உடனடியாக கைது செய்து நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அந்த மணமக்களை பிரிக்க நினைப்பதும் ஜாதி ரீதியாக கேவலமாகப் பேசி அடித்து உதைத்து, அதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டு இருந்தும், இப்படி அக்கறையற்ற போக்கில் நடந்து கொள்ளுகிற விசாரணை அதிகாரி மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்பதையும் இந்த வாய்ப்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
11-5-2020

You may also like...