தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் திருத்தப்பட்ட விதியைத் திரும்பப் பெறுக!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள்  திருத்தி அமைத்தது. இந்தத் திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது.

இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39 இடங்களைப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர்.

அதுபோலவே  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் பறிக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

– பள்ளிபாளையம் மாநாட்டுத் தீர்மானம்

பெரியார் முழக்கம் 26092019 இதழ்

You may also like...