தமிழ்நாடு விழா – கொடி

தமிழ் நாட்டுக் கொடி வென்றிருக்கிறது !

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழ் நாட்டுக் கொடியை ஒட்டுமொத்த தமிழர்களும் அங்கீகரிப்பதற்கு முன் மத்திய உளவுத்துறையும், தமிழகக் காவல்துறையும் அங்கீகரித்து இருக்கின்றன.

தமிழ்நாட்டுக் கொடி என இக் கொடியை ஏற்றுவது தமிழர்களுக்குத் தன்னுரிமை உணர்வையும், இனப் பற்றையும், ஓர்மையையும் கொடுத்துவிடும் என்று இந்த அரசுகள் அச்சப்படுகின்றன.
அதனால் தான் நேற்று 30.10.2020 மாலை வரை அமைதியாக இருந்த தமிழகக் காவல்துறை தனித் தனியாக
இரவோடு இரவாக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தோழர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொருவரின் பெயரிலேயே தடை உத்தரவை வழங்கியிருக்கிறது. அதில் அவர்கள் தேசத்துரோகச் சட்டம் ஆன 124 ஏ பாய்ச்சப்படும் என அச்சுறுத்தியும் இருக்கிறார்கள். இதிலிருந்து நாம் நன்கு உணர்ந்து கொள்வது தமிழ் நாட்டுக் கொடியை பெரியாரிய உணர்வாளர்கள்,
மக்கள் மத்தியில் எளிமையாய் கொண்டு போய் சேர்த்து விடும் வலிமை உடையவர்கள் என்று காவல்துறை நன்கு உணர்ந்திருக்கிறது போலும்.

தமிழ்நாட்டுக் கொடி என்று இதற்கு முன்பு சிலர் கொடிகளை வடிவமைத்தார்கள். அந்தக் கொடிக்கு இதுவரை தமிழ்நாட்டில் எங்கும் தடை விதிக்கப்பட்டது இல்லை; அந்தக் கொடிகள் குறித்து விமர்சனம் செய்வது இப்போது சரியல்ல என்றாலும், அரசும் உளவுத் துறையும், காவல் துறையும் அச்சப்படும் அளவிற்கு தமிழ் நாட்டுக் கொடி ஒன்று உருவாகி இருப்பதைத் தான், தமிழர்களின் உரிமைக்கான ஒரு கொடி என்று நாங்கள் கருதுகிறோம்.

ஒரு கொடி ஏற்றுவதற்கே இவ்வளவு தடைகளை இரவு முழுவதும் காவல்துறை பணிசெய்து உத்தரவை வழங்குகிறது என்றால் இந்த அரசு யாருக்கான அரசு ?
மாநில முதலமைச்சர், தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவதற்கு நேற்று வாழ்த்து தெரிவித்த நிலையில் இரவு, நள்ளிரவு இப்படி காவல்துறை உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது என்றால் தமிழக காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

கொடி ஏற்றும் நிகழ்வை காவல்துறையை கொண்டு தேசத்துரோக சட்டத்தின்கீழ் கைது செய்வோம் என்று மிரட்டி பணிய வைத்து விட முடியும் என்று இந்த அரசு நம்புகிறது. ஒருவேளை கொடியேற்றும் நிகழ்வு தற்போது அரசின் ஒடுக்குமுறை காரணமாக சற்று பின்னடைவை சந்தித்து இருந்தாலும், தமிழர்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும் இந்தக்கொடியை ஏந்த வைப்போம்!
அப்போது அனைத்து தமிழர்களையும் உங்களால் தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியுமா? என்று நாம் கேட்போம்! அந்த காலத்தை விரைவில் நாங்கள் உருவாக்குவோம்!

தமிழர்களின் உணர்வுக்கான தமிழ்நாட்டின் தன்னுரிமைகான பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் பணி இன்னும் வீரியம் கொண்டு எழுச்சியுடன் பயணிக்கும்.

காவல்துறை ஒடுக்குமுறைகளைக் கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். தமிழ்நாட்டு கொடி தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும் பட்டொளி வீசி பறக்கும் காலத்தை விரைவில் உருவாக்குவோம்.

இந்திய ஒன்றியத்தில் இப்பொழுது வேறு எந்த ஒரு மாநிலத்திலும் மாநிலக் கொடிகள் என தனி கொடிகள் ஏற்றப்பட்டாமமேலேயே இருக்கிறதா? ஆந்திரா,கர்நாடகா,காஷ்மீர் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கொடிகளை மாநில அரசுகளே அங்கீகரித்து மக்கள் மன்றத்தில் பரவலாக கட்சி பாகுபாடின்றி ஏற்றி விழாக்களை முன்னெடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? இந்திய ஒன்றியம் தமிழர்களை அந்நியர்களாய் பார்க்கிறதா ? என்று நாங்கள் கேட்கிறோம். தமிழக அரசும் காவல்துறையும் பிற மாநிலங்களை பார்த்தாவது இதுபோன்ற ஒடுக்குமுறைகளைக் கைவிட்டு மக்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

கொடி குறித்து விமர்சனம் செய்த சில தோழர்கள் இனியாவது கொடியின் வலிமை குறித்தும், வேறு கொடிகளுக்கு இல்லாத அங்கீகாரம் இக் கொடிக்கு கிடைத்திருப்பது குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கருத்து முரண் கொண்டு பெரியாரிய உணர்வாளர்க்ள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள தமிழ் நாட்டுக் கொடியை ஏற்காமல் வெளியில் நிற்கும் தமிழர்களின் உரிமை பேசும் அமைப்புகள் இக்கொடியை அங்கீகரித்து இந்த ஒரு நிகழ்வில் மட்டுமாவது எங்களோடு கரம் கோர்த்து தமிழ்நாட்டின் தன்னுரிமைக்கு வலு சேர்க்க வேண்டும் என்று இந்த நேரத்தில் அழைக்கிறோம் வாருங்கள்! இணைந்து நிற்போம்!

தமிழர் அமைப்புகள் இன்னும் விரிவாகக் கூடி உருவாக்கும் வேறு ஒரு பொதுக் கொடியையோ, அல்லது அரசு அனைத்து கட்சிகளையும் கலந்து அறிவிக்கும் ஒரு பொதுக் கொடியையோ ஏற்கவும் அணியமாய் இருப்போம்!

நமக்குத் தேவை எல்லா தமிழர்களையும் இணைக்கும் ஒரு பொதுக் கொடிதான்! தமிழர்களின் இழந்துவிட்ட உரிமைகளைமீட்க, இருக்கும் உரிமைகளைக் காக்க, பெறவேண்டிய உரிமைகளை பெற கட்சி, அமைப்பு, சமயம், ஜாதி எல்லைகளைத் தாண்டி ஒன்றிணைய வேண்டிய கட்டாயம், எப்போதையும் விட இப்போது அதிகம் உள்ளது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

தமிழர்களின் தன்னுரிமையை வென்றெடுப்போம் !
இனிவரும் காலத்தில்
தமிழ் நாட்டுக் கொடியை தமிழ்நாட்டுத் தெருக்களில் பட்டொளி வீசி பறக்க விடுவோம் !
வாருங்கள் !

– *திராவிடர் விடுதலைக் கழகம்.*
01.11.2020

You may also like...