இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 9

காட்சி – 9

இடம் : சுக்ரீவன் கொலுமண்டபம்.

பாத்திரங்கள் : அங்கதன், அனுமான், ராமன், லட்சுமணன், மற்றும் பலர்.

[கிட்கிந்தையில் சுக்ரீவனுக்கு முடிசூட்டப்பட்ட சில காலத்திற்குப் பிறகு ஒரு நாள் சுக்ரீவன் கொலுவிருக்கிறான். அங்கதனும் அனுமானும் அருகில் இருக்கின்றனர்; ராமனும் லட்சுமணனும் உட்கார்ந்திருக்கின்றனர்.)

ராமன் : சுக்ரீவ! உன் ஆசை, நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது; இனி நீ எனக்கு சீதையை மீட்டுத் தரவேண்டும்.

லட்சு : சீதையை ராவணன் எங்கு சிறையிட்டிருக்கிறான் என்பதை முதலில் கண்டறிந்தாக வேண்டும்.

அனு : பிரபு, நேற்று இந்த நகை மூட்டையைத் தெற்கே உள்ள குன்றின் அடிவாரத்தில் நமது வீரர்கள் கண்டெடுத்து வந்தனர். இவைகள் ஒரு வேளை பிராட்டியாருடைய நகைகளாக இருந்தாலும் இருக்கலாம்.

[ராமனும் லட்சுமணனும் ஆவலோடு அந்த நகை மூட்டையை வாங்கிப் பிரிக்கின்றனர்.)

ராமன் : *சீதா! அய்யோ ! இவைகள் உன் நகைகள் போலவே இருக்கின்றதே. தம்பி லட்சுமணா! இவைகளைப் பார். இவைகள் உன் அண்ணியின் நகைகள் தானா பார்! (* கி.கா. 6-ம் சருக்கம் 19-22 )

 

லட்சு : (அவைகளைப் பார்த்துவிட்டு) ஆமா அண்ணா! இவைகள் அண்ணியாருடையதே. இது கழுத்துச் சரம், இது இடையணி, இது மார்வடம், இது அரையணி.

சுக்ரீ : ஆகா! அனும! அண்ணியின் அந்தரங்க நகைகளைக் தம்பி எவ்வளவு கவனமாகப் பார்த்து வைத்திருக்கி.. பார்த்தாயா?

அனு : இளையாழ்வாருக்கு சீதாதேவியிடம் உள்ள பக்தி தான் என்னே !

ராமன் : தம்பீ! நீ சொன்னபடி இந்த நகைகளைப் பார்க்கும் போது இந்த நகைகள் என் கண்களுக்குப் புலப்படவில்லை; இவைகள் அணியப்பட்டிருந்த என் சீதையின் அங்கங்கள்தான் தோன்றுகின்றன. அய்யோ , சீதா, சீதா!

அனு : பிரபூ! கவலைப்படாதீர்கள்… விரைவில் அம்மையாரைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சேர்க்கிறோம்.

சுக்ரீ : ராமா, கவலைப்படாதே! எனது வீரர்களை மூன்று திசைகளுக்கும் முன்னரே அனுப்பியுள்ளேன். அனுமானை இன்று தென் திசைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். நீ சீதையைப் பற்றிய அடையாளங்களை விவரமாகச் சொல்.

ராமன் : மன்னவா! உங்கள் பேரன்புக்குச் சிறியவர்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். (அனுமானைப் பார்த்து) அனுமா, தெற்கே போகிறாயா?

அனு : ஆமாம் பிரபுவே… இராவணனது இலங்கைக் கோட்டை அங்குதான் இருக்கிறது.

ராமன் : அங்கு ஒரு வேளை என் சீதையை நீ காணலாம் அல்லவா?

அனு : காணலாம்…

ராமன் : சீதை எப்படி இருப்பாள் என்று உனக்குத் தெரியுமா?

அனு : தெரியாதே….

ராமன் : *அய்யோ! (* கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் நாடவிட்ட படலம் 37 * வாராழிக் கலசக் கொங்கை )

* வாராழிக் கலசக் கொங்கை

வஞ்சிபோல் மருங்கு லாளன்

தாராழிக் கலைசார் அல்குல்

தடங்கடற்கு உவமை தக்கோய்

பாராழி பிடரில் தங்கும்

பாந்தளும் பணிவென் றோங்கும்

ஓராழித் தேரும் கண்ட

உனக்கு நான் உரைப்ப தென்னோ.

(க.ரா.கி.கா. நாடவிட்ட படலம் 43 )

செப்பென்பன் கலசம் என்பன்

செவ்விள நீரும் தேர்வன்

துப்பொன்று திரள் சூதென்பன்

சொல்லுவன் தும்பிக் கொம்பை

தப்பின்றி பகலின் வந்த

சக்கர வாகம் என்பன்

ஒப்பொன்றும் உலகில் காணேன்

பல. நினைத்து உலைவன் இன்னும்.

அவள் பெருமையை நான் எப்படி சொல்வேன் அனும! கட்டிலிலிட்டுக் காணவேண்டிய கனக மணிப் பதுமையாயிற்றே அவள் – கருப்பஞ்சாறு அவள் உதட்டுநீர் – முக்கனியிலும் காணமாட்டாய் அனும, அவள் கட்டியணைத்துத் தரும் முத்தத்தின் சுவையை – எழிலின் உறைவிடமடா அவள் இடைகள்; செப்பையும், கலசத்தையும், செவ்விள நீரையும் உவமை சொல்ல முடியா மார்பகம்! மாருதி மறந்து விடாதே, அவள்தான் என் மனைவி – இந்தா இந்தக் கணையாழியைக் கொடு; கண்ணீர் வெள்ளத்திலே கரைகாணாது தவிக்கிறேன் என்று சொல். காட்டிலும் கட்டிலிலும், ஆற்றின் கரையிலும் அருவியின் ஓரத்திலும் அவள் எனக்கு அளித்த இன்பத்தையெல்லாம் நினைவு படுத்தியதாகச் .. இவைகளில் ஒன்றையும் மறந்து விடாதே – இதை கவனமாகச் சொல். பஞ்சவடிவேயிலே ஒரு நாள் . மடியிலே தலைவைத்து நான்படுத்துத் தூங்கும் போது; என் சீதையின் மீது மோகங்கொண்ட இந்திரனின் மகன் சயங்க என்பான் காக்கை உருக்கொண்டு அவள் மார்பகங்களை சுவைத்தானாம். உடனே இரத்தம் பெருகிற்றாம். அந்த நிலையில் கூட என் பத்தினி சீதை காக்கையையும் விரட்டவில்லை என்னையும் எழுப்பவில்லை மாருதி; அய்யோ அவளன்றோ பத்தினி… இதை மறக்காமல் சொன்னதாகச் சொல் அரக்கர் கோனின் மாளிகையிலே அவள் எப்படி வாழ்கிறாள் என்பதைக் கண்டுவா. நீ வரும் வரையில் எனக்கு உறக்கம் பிடிக்காது, உணவு செரிக்காது; மதுவையும் தொடேன், மாமிசத்தையும் புசியேன்; விரைவில் போய்வா மாருதி; போய் வா…!

அனு : எப்படியும் அம்மையாரைக் கண்டு வருகிறேன் பிரபு… ஆனால் உங்கள் அடையாளப்படி ஆராய்ச்சி செய்வதுதான் சற்று கடினம். இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன். விரைவிலே அவர்களை கண்டு திரும்புகிறேன். கவலையை ஒழித்து இருங்கள்.

சுக்ரீ : நீ வந்துதான் மற்றக் காரியங்களை கவனிக்க வேண்டும். விரைவில் வா மாருதி.

ராமன் : சீதையைக் காணாது திரும்ப வராதே. இன்னும் ஒரு மண்டலத்தில் நீ வராவிட்டால் நான் மாண்டு போவேன். கைகேயியின் எண்ணமும் நிறைவேறிவிடும். சீதா….

அனு : கலங்காதீர்கள் பிரபு! எப்படியும் நான் அம்மையாரைக் கண்டு திரும்புகிறேன். ராம்! ராம்!!!

[அனுமான் சபையைவிட்டு வெளியேகிறான்.)

You may also like...