இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 8

காட்சி – 8

இடம் : கிட்கிந்தையில் மலையும், காடும் அடர்ந்த ருஷ்யமுக பர்வதத்தின் ஒரு பகுதி.

பாத்திரங்கள் : சுக்ரீவனும், அனுமானும்.

சுக்ரீவன் : இனிமேலும் நான் அரசனாக முடியும் என்று நீ நினைக்கிறாயா? அனும!

அனு : ஏன் முடியாது சுக்ரீவா? சாதுர்யமும் சமயோசிதமும் நிறைந்த இந்த அனுமான் உன் அருகில் இருக்கும் போது, நீயேன் சாம்ராஜ்ய அதிபதியாக முடியாது?

சுக் : *என்ன இருந்தாலும் என் அண்ணனுக்கு நான் அவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கக் கூடாது. அவனைக் குகைக்குள்ளே விட்டு, பாறையால் மூடி விட்டு, இறந்து விட்டதாக ஊரை ஏமாற்றி அவன் மனைவியைக் கைது செய்து அரசையும் கைப்பற்றிக் கொண்டேனே அது பெரிய துரோகமல்லவா? (* *கி.கா. 10-ம் சருக்கம் 11-28 )

அனு : துரோகம், பழி, பாவம் – இவைகளையெல்லாம் பார்த்தால், பலரும் புகழ பேரரசன் ஆக முடியுமா?

சுக் : அதற்காக….?

அனு : சதியும் சூழ்ச்சியும்தான் நமக்கு சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும் என்கிறேன்.

சுக் : அப்படியானால்….?

அனு : உன்னை அடித்து விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறானே உன் அண்ணன் வாலி, அவனை ஒழிக்கவேண்டும் முதலில்…..

சுக் : முடியுமா நம்மால்?

அனு : ஏன் முடியாது?

சுக் : அவன் மகா பலசாலி! அவனை எதிர் நின்று தாக்க இன்னும் எவனுமே பிறக்கவில்லையே இவ்வுலகில்….

அனு : அப்பொழுது மறைந்து நின்று கொல்லுவோம்!

சுக் : அது மாபாதகம்!

அனு : பாதகம் பார்த்தால் பதவி வராது அப்பனே!

சுக் : அவனை ஒழிக்கக்கூடாது; என் உடன் பிறந்தவன்…

அனு : அப்போது நீ உருப்படவே முடியாது!

சுக் : இதுதான் உன் முடிவோ?

அனு : என் முடிவுமட்டுமல்ல; ஆராய்ந்து பார்த்தால் நீயும் அந்த முடிவுக்குத்தான் வருவாய் – வரவேண்டும்.

சுக் : இருந்தாலும் அவசரப்பட்டு அப்படி நான் செய்வதற்கில்லை. அவன் என் அண்ணன். .

அனு : நீ அப்படிச் செய்யவேண்டாம், வேறு வழியிருந்தால்…?

சுக் : இருந்தால் யோசிக்கலாம்.

*[இப்போது ராமனும் லட்சுமணனும் குவித்த கரங்களோடு அங்கே வருகின்றனர்.) * கி.கா. 4-ம் சருக்க ம் 20-24

சுக் : யார் இவர்கள்?

அனு . யாரோ ஆரியர்கள் போல் இருக்கிறது. இரு, விசாரிப்போம்.

(எழுந்து வந்து) யார் நீங்கள்?

லட்சு : நாங்கள் அயோத்தி… தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்! அவர் (ராமனைக் காட்டி) ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, என் பெயர் லட்சுமணன்.

அனு : ஆகா! ராமச்சந்திரப் பிரபுவா வந்திருக்கிறார்! வாருங்கள், வாருங்கள். (ராமனிடம் சுக்ரீவனைக் காட்டி.) இவர்தான் இந்த நாட்டு மன்னர் சுக்ரீவ சக்கரவர்த்தி. நான் அவரது அமைச்சன். என் பெயர் அனுமான்.

[ராமனும் லட்சுமணனும் சுக்ரீவனை வணங்கி நிற்கின்றனர்.)

லட்சு : *சுக்ரீவ சக்கரவர்த்தி! (*கி.கா. 5-ம் சருக்க ம் 1-7) மனைவியையும் நாட்டையும் இழந்து நாடோடியாக, வேறு கதியின்றித் தவிக்கும் என் அண்ணன் ராமச்சந்திரன் தங்களை அடைக்கலம் புகுந்திருக்கிறார். அவரையும் அடியேனையும் தாங்கள் ஆதரிக்க வேண்டும்.

சுக் : அப்படியே செய்வோம், அமருங்கள்.

ராமன் : சக்ரவர்த்தி! தங்கள் கருணைக்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம். என் மனைவி சீதை பேரழகி….

லட்சு : கர்மம்; கர்மம்.

ராமன் : மகா பதிவிரதை, உத்தமி; ஒரு கணமும் என்னை விட்டுப் பிரியாதவள். அவளை இராவணன் தூக்கிக் கொண்டு போய்விட்டான். நான் சதா அவள் நினைவாகவே வாடி வதங்கி உருகிப் போய்விட்டேன். நீங்கள் தான் அவளை மீட்டு எனக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் பாதாரவிந்தங்களைத் தவிர எங்களுக்கு வேறு கதி கிடையாது சக்ரவர்த்தீ….

(எழுந்து காலில் விழுகிறான். சுக்ரீவன் எழுந்து அவனைத் தூக்கி உட்கார வைத்து]

சுக் : *ஆரிய? (* கி.கா. 7-ம் சருக்கம் 1-14 ) கவலைப்படாதே. இன்று முதல் நாம் இருவரும் நண்பர்கள். . உன் மனைவியை மீட்க என்னலான எல்லா உதவிகளையும் செய்கிறேன்.

ராமன் : ஆ, சீதா! இனிமே நீ கிடைச்சுடுவே. சீதா, சீதா!

அனு : உங்கள் நட்பு வெகு பொருத்தம். இருவரும் நாட்டைவிட்ட விரட்டப்பட்டவர்கள்; இருவரும் மனைவியைப் பறிகொடுத்தவர்கள்.

ராமன் : ஆ ! அப்படியா? பொருத்தம், வெகு பொருத்தம்.

லட்சு : மன்னவா! உங்கள் அரசைக் கவர்ந்து வாழ்பவனை இப்போதே ஒழித்துவிட்டால் என்ன?

சுக் : அவர் என் அண்ணன்.

ராமன் : இருந்தால் என்ன? நீங்கள் எங்கள் நண்பர்.

சுக் : அவரை எதிர்த்து நிற்க எவராலும் முடியாதே! (* கி.கா. 11-ம் சருக்கம் 69-81)

ராமன் : எதிர்த்து நிற்பதா? எதற்கு அந்த வேலை?

லட்சு : அப்படிப் போர் செய்வது எங்கள் பழக்கமே இல்லையே!

சுக் : பிறகு!

ராமன் : ஒளிந்து நின்று கொல்வதே உயர்ந்த வீரனுக்கு அழகு.

சுக் : அது எங்கள் மரபுக்கு இழுக்கு…..

ராமன் : எங்களுக்கு அதுவே வழக்கு!

[இப்போது சுக்ரீவன் முகத்தைச் சுளிக்கிறான்.)

அனு : மன்னவ! நீங்கள் எதற்காக தயங்குகிறீர்கள்? நமக்கு வேண்டியது அரசு; ஒழிய வேண்டியது வாலி; அவன் எப்படி ஒழிந்தால் நமக்கு என்ன?

சுக் : உம், என்ன இருந்தாலும்….

அனு : யோசிக்க வேண்டாம், ராமமூர்த்தி மகா பலசாலி…

ராமன் : (மெதுவாக) ஊரெல்லாம் அப்படித்தான் சொல்லுது; ஆனால் சீதை ஒருத்திதான் அதை ஒத்துக்க மாட்டேங்கிறா….

அனு : இவர் வாலியைக் கொன்று நமக்கு ஆட்சியை மீட்டுத் தருவார்.

சுக் : தர்மத்துக்கு விரோதமாகவா?

அனு : நமக்கு அதர்மம். அவர்களுக்கு அது தர்மம்…. அதிலே நாம் ஏன் தலையிட வேண்டும்… (ராமனிடம்) சரி பிரபு நீங்கள்தான் அந்த வாலியைக் கொன்று எங்கள் ஆட்சியை மீட்டுத் தரவேண்டும்.

ராமன் : மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள முடியும் என்னால்; வாலி வரவேண்டுமே அங்கே!

[அனுமன் சற்று யோசித்து]

அனு : *உம், சரி, சுக்ரீவா! (* கி.கா. 11-ம் சருக்கம் 49-58 ) நீங்கள் இன்றிரவே புறப்பட்டு தங்கள் தமையனிடம் போய் மல்யுத்தத்துக்கு அழையுங்கள்; அவர் உடனே நிராயுதபாணியாக வருவார். அப்படி இப்படி ஆட்டம் காட்டி ராமப்பிரபு ஒளிந்து கொண்டிருக்கும் மரத்தடிக்கு அழைத்து வந்துவிடுங்கள். பிறகு அவர் கவனித்துக் கொள்வார்.

ராமன் : ஓ… ஆமா! நல்ல இருட்டிலே அழைத்து வந்து விடுங்கள்…. அப்புறம் பாருங்கள் என் திறமையை!

 

 

காட்சி – 8 (அ)

இடம் : ஒரு பெரும் மரத்தடியில்

பாத்திரங்கள் : ராமன், லட்சுமணன், அனுமான் சுக்ரீவன், வாலி.

*[ராமன், லட்சுமணன், அனுமான் மூவரும் ஒளிந்து நிற்க சுக்ரீவன் மட்டும் போய் வாலியை வலுச்சண்டைக்கு இழுத்து வருகிறான். வாலி ஆங்காரமாக சுக்ரீவனை விரட்டிக்கொண்டு வருகிறான்.) * கி.கா. 15-ம் சருக்க ம் 5-30

வாலி : துரோகி! மறுபடியுமா வந்துவிட்டாய்…. உன்னை என்ன செய்கிறேன் பார்…. !

(வாலியும் சுக்ரீவனும் கட்டிப் புரளுகிறார்கள். வாலியின் உருவத்தையும், வலிமையையும் பார்த்து ஒளிந்து நின்ற ராமன் நடுங்குகிறான்…. உடனே அனுமான் ராமனிடம்]

அனு : பிரபு! உம் பாணத்தை விடுங்கள், நீங்கள் தாமதித்தால் சுக்ரீவனைக் கொன்றுவிடுவான் அந்தக் கொடியவன்.

ராமன் : *உம்… இன்னும் முதுகைச் சரியாகக் காட்ட மாட்டேங்கிறானே. (* கி.கா. 12-ம் சருக்கம் 16-22) ஏன் அனுமா, ஒன்னு பண்ணேன். நீ போய் அவன் முதுகைத் திருப்பிப் புடிச்சுக்கோ, உடனே நான் பாணத்தை விட்டுடறேன்.

அனு : நாசமாப் போச்சு… உம்….

[இப்போது வாலி சுக்ரீவனை செம்மையாக அடித்து உதைத்துப் போட்டு விட்டு]

வாலி : துரோகி! வலுச்சண்டைக்கா வருகிறாய்! உடன் பிறந்துவிட்ட பாவத்துக்காக இம்முறை உன்னை உயிரோடு விட்டுப் போகிறேன்… மீண்டும் வந்தாய்… அக்கணமே மாண்டாய்! வருகிறேன்….

(என்று கூறிவிட்டுப் போகிறான் தாள முடியாத வேதனையுடன் சுக்ரீவன் மெல்ல எழுந்து ராமன் இலக்குவன் அனுமன் ஆகியவர்கள் ஒளிந்து நிற்கும் மரத்தின் அருகில் வந்து]

சுக்ரீவன் : ராமப்பிரபு… நான் என்ன தவறு இழைத்தேன் என்னை ஏன் இப்படிக் கைவிட்டு விட்டீர்கள்… அய்யோ வலி தாங்கவில்லையே… உயிர் போகிறதே… அம்மா!

ராமன் : வருந்தாதே சுக்ரீவ! நீயும் உனது அண்ணன் வாலியும் உருவ அமைப்பில் ஒரே மாதிரியாக இருக்கவே… நீங்கள் இருவரும் கட்டிப் புரண்டு மற்போர் செய்யும் போது யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை… இந்தா… (மாலையொன்றைக் கையில் கொடுத்து) இதனை உன் கழுத்தில் அணிந்து கொண்டு மீண்டும் அவனோடு போர் புரி…ம்

[சுக்ரீவன் மாலையை வாங்கி அணிந்து கொண்டு]

சுக்ரீவன் : இம்முறை கைவிடமாட்டீர்களே…

லட்சு : கண்டிப்பாக கைவிடமாட்டார்… தைரியமாகப் போ… துணிவே துணை…!

[சுக்ரீவன் வேகமாக ஓடிச்சென்ற வாலியைப் பின்புறமாகத் தாக்குகிறான். எதிர்பாராத இந்த தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியுற்ற வாலி மீண்டும் ஆவேசமாக போரிடுகிறான்.) (மற்போரில் ஒரு கட்டத்தில்) (வாலி சுக்ரீவனைக் கீழே தள்ளி அவன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு கழுத்தைப் பிடிக்கிறான். அப்போது அனுமார் தூண்டவே ராமன் ஒரு பாணத்தை விடுகிறான். அது வாலியின் முதுகிலே பாய்கிறது. உடனே அவன் வெகுண்டு எழுகிறான் ராமன் பயந்து நடுங்கியபடியே நிற்பதைப் பார்த்து விடுகிறான்.)

வாலி : (அம்பை உருவியபடி) அய்யோ ! யாரடா அவன்! இதென்ன அநியாயம்… நாட்டிலே இல்லாத புது வழக்கம்; ஒளிந்து நின்று அம்பு விட்டவன் யாரடா?

(எழுந்திருக்க முயன்று தடுமாறியபடியே கீழே சாய்கிறான். உடனே தைரியமடைந்த ராமன் ஓடி வந்து]

ராமன் : நான்தான் தசரத புத்ரன், ராமன், உன்னைக் கொல்வதற்காக அம்பு எய்தவன் நான்தான்.

வாலி : *ராமன்… தசரதன் மைந்தன் அந்தப் பேடி நீதானா? (* கி.கா. 17-ம் சருக்க ம் 31-40) பெண்டாட்டியையும் நாட்டையும் இழந்து காட்டிலே அலையும் கூறுகெட்ட கொடியவனே! ஒரு கெடுதியும் செய்யாத என்னை ஏனடா கொல்லத் துணிந்தாய்? –

ராமன் : உன்னைக் கொல்வதாக சுக்ரீவனுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன் அதனால்….

வாலி : நீ யாரடா நாயே, எனது நாட்டிலே வந்து என்னைக் கொன்று விடுவதாக ஒருவனுக்கு வாக்குக் கொடுக்க?

ராமன் : நான் – அயோத்தியின் மன்னன்.

வாலி : உன் அதிகாரத்தை அங்கல்லவாடா காட்டவேண்டும்? அதற்குக்கூட உனக்கு இப்போது தகுதியில்லையே; ஆட்சி பரதனிடமல்லவா இருக்கிறது?

ராமன் : நீ கொடியவன்; எப்படியும் கொல்லப்பட வேண்டியவன்…

வாலி : பேடியே பிதற்றாதே! தம்பிக்குச் சேரவேண்டிய ஆட்சியைக் கைப்பற்ற தகப்பனுடன் சேர்ந்து திட்டம் போட்ட சதிகாரா! உன்னைவிடவா நான் கொடியவன்? தகப்பன் ஆண்ட நாடு தம்பிக்குப் போய்விட்டதைக் கண்டு, தகாத வேலை செய்தேனும்; தமிழர் நாட்டைக் கைப்பற்ற வந்திருக்கும் தறுதலையே; உன்னை விடவாடா நான் கொடியவன்?

ராமன் : நீ உன் தம்பி மனைவியைக் கவர்ந்து கொண்டிருக்கிறாய், அது பாபம்….

வாலி : ஆரியச் சிறுவா! அது உங்கள் மரபு அண்ணன் மனைவிமீது தம்பி கண் வைத்திருப்பது.

(லட்சுமணன் விழிக்கிறான்.)

உங்கள் வேதங்களில்தான் ஒரு பத்தினி தனக்குப் பிள்ளையில்லாவிடில் தனது கணவனோடு பிறந்தவர்களுடன் கூடிப் பிள்ளை பெறலாமென்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம். என் *மனைவியைத்தான் எனது தம்பி சிறை செய்தான். அவளை மீட்டு நான் வாழ்ந்தேன். எனது தம்பி * மனைவி ஊரிலே சௌகரியமாகத்தான் இருக்கிறாள். அவளை நான் ஒன்றும் செய்து விடவில்லையடா! (* வாலியின் மனைவி “தாரை” * சுக்ரீவன் மனைவி “ருமை”.)

ராமன் : எனக்கு சீதை வேண்டும்; அதற்கு சுக்ரீவன் உதவி தேவை. அதற்காக உன்னைக் கொன்றேன்.

வாலி : * கோழையே உன் மனைவியை மீட்க இன்னொருவன் உதவி உனக்குத் தேவை என்றால் என்னிடம் வந்திருந்தால் நான் செய்திருப்பேனேடா அந்த வேலையை…. அதை விட்டு… (* கி.கா. 17-ம் சருக்கம் 41-52)

ராம : நான் முதலில் சுக்ரீவனைத்தான் சந்தித்தேன். இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டோம். அதன்படியே….

வாலி : மரத்துக்குப் பின்னாலே மறைந்து நின்ற அம்பு விட்டாய் இல்லையா! மடையா; நீ ஒரு வீரன்தானே! ஏண்டா மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாய்?

ராம : அது எங்கள் மரபு. எங்களுக்கு வேண்டியது, எதிரி எப்படியாவது ஒழிய வேண்டியதுதான்.

 

வாலி : அப்படியானால் உங்களுக்கும் மிருகங்களுக்கும் வேலை இல்லைபோலும்.

ராமன் : எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள். நீ என் மிருகமென்றால் அதை உன்னைத் தவிர எவன் ஒப்பமாட்டான். ஆனால் நாங்கள் நினைத்தால் உன்னை மட்டுமல்ல, உன் கூட்டத்தையே மிருகமாக்கிக் காட்ட முடி உலகத்தின் முன்னர்.

வாலி : ஏண்டா முடியாது உங்களால்?

[சுக்ரீவனையும் அனுமானையும் காட்டி.) இம்மாதிரி துரோகிகள் உங்களுக்குக் கிடைக்கும் போது ஏன் முடியாது? துரோகிகளே! அற்பப் பதவி ஆசைக்காக அன்னியன் காலடிபடாத நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்! உங்கள் செய்கை தமிழகத்துக்கே தலையிறக்கத்தைத் தந்துவிட்டதேடா தறுதலைகளே! அடே சுக்ரீவா! சகோதரத் துரோகி! அன்னியனை விட்டு, உன் உடன் பிறந்தானைக் கொன்று விட்டா நீ நாடாள வேண்டும்? நன்றி கெட்டவனே! உன்னைப் பார்ப்பது கூடக் கொடுமை. துரோகிகளே! மாற்றானுக்கு மண்டியிட்ட நீங்களும் உங்கள் கூட்டமும் உருப்படவா போகிறது? தமிழகமே! ஏனோ இந்தத் தறுதலைகளை நீ பெற்றாய். வீரர்களைப் பெற்ற உன் வயிறு இந்த வீணர்களை ஏன் தாங்கிற்றோ? அந்தோ அநியாயமாக ஆரியத்துக்கு அடிமைப்படப் போகிறாயே! நேர்மையை, வஞ்சம் மறைந்து நின்று கொன்று விட்டதே! அய்யோ! அம்மா! அங்கதா.

(உயிர் பிரிகிறது) [அங்கதனும் வாலியின் மனைவி தாரையும் சடலத்தின் மீது விழுந்து அழுகிறார்கள்.) [சுக்ரீவனும் அனுமானும் துயரம் தாங்காது சிலைகளாகி விடுகின்றனர்.]

You may also like...