தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்
பெருமதிப்பிற்குரியீர்,
வணக்கம்!
தமிழக அரசும், குடிமை சமூகமும்- பாதுகாப்பு அரண்.
இன்றைய நிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், அவசர நிலை என்ற காலகட்டத்தை கடந்து, நிரந்தரமான தீர்வுக்கு ஒரு தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா மற்றும் முக்கியமாக தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுநாள்வரையில் இந்த இயக்கம் அரசின் சட்ட திட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகத்தின் கெடுபிடி கட்டாயங்களுடன் நடந்தேறுகிறது. நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும், தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற முழு நேர உழைப்பின் மூலமாகவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழக அரசின் பாராட்டுக்குரிய முனைப்பும், அரசு ஊழியர்களின் கடமையும், தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களின் சீரிய பணியும் சிறப்பாக இருப்பினும், நாம் எதிர் கொண்டிருக்கும் கொரானா தொற்று நோய் சவாலுக்கு நீண்டகால, நிரந்தர தீர்வாக இவை அமையாது.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன:
முதலாவதாக, பெருமளவிற்கு மக்கள் ஏதோ கட்டாய நிலைக்கு உட்பட்டு ஒதுங்கி இருப்பதாலும், முழுமையான ஒத்துழைப்பைத் தருவதில் நடைமுறை சிரமங்கள் இருப்பதாலும் சரியான இலக்கினை எட்ட முடியவில்லை, எட்டுவதும் கடினம்.
இரண்டாவதாக, அரசு இத்தகைய தடுப்புப் பணியை தனி இயந்திரமாக செயல்பட்டுத் தடுத்து வெற்றி பெற முடியும் எனக் கருதுவதும், சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம்மட்டும் சமூக இடைவெளிக்கு மக்களைக் கொண்டுவந்துவிட முடியும் என்று எண்ணுவதும் நிரந்தரத் தீர்விற்கு வழியாகாது.
அரசு குடிமை சமூகத்தோடு இணைந்து செயல்படத் தயங்குவதும், அதற்குத் தேவையான முன்னெடுப்புகளைக் கொண்டு வராததும், குடிமைச் சமூகத்தை விலக்கியே இந்த கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைககளில் வெற்றி பெற முடியும் என்று எண்ணுவதும்தான் நோய்ப்பரவல் தொடர்வதற்கான காரணங்களாகும்.
கொரோனா தொற்று நோயினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருவதாலும், ஊரடங்கு, கால வரையறையின்றி தொடரும் சூழல் இருப்பதாலும், அ ரசும் – குடிமைச் சமூகமும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளை இணைந்து தேட வேண்டிய கட்டாயத்திற்குள் நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
குடிமைச் சமூகத்தையும் அரசு கட்டமைப்பையும் இணைத்து கிராமங்கள் வாரியாக துவங்கி சிறுநகரங்கள், பெருநகரங்கள் மற்றும் மாநகரங்களில் வார்டு ரீதியாக மாணவர்கள்-இளைஞர்கள் , தன்னார்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, அரசு கட்டமைப்புடன் ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு அரண் அமைப்பது தக்க பலனைத் தரும்.
குடிமைச் சமூகத்தின் மூலமாக அரசின் திட்டங்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், உணவு , மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், இந்த பாதுகாப்பு அரண் இணைப்புப் பாலமாகவும் , வழித்தடமாகவும் அமையுமென்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இத்தகைய அவசர காலகட்டத்தில்தான் அரசும், குடிமைச் சமூகமும் இணைந்து பணிபுரிய வேண்டிய அவசரமும், அவசியமும் போர்க்கால அடிப்படையில் தேவைப்படுகின்றது. இதனால் அரசாங்கத்திற்கும் குடிமை சமூகத்திற்குமான நல்லதொரு புரிதலும், அரசு திட்டங்களை மக்கள் கடைபிடிப்பதில் முழுமையான ஈடுபாடும் ஏற்படும்.
அரசு ஊழியர்களின் சீரிய பணியும், தூய்மை மற்றும் மருத்துவ பணியாளர்களின் ஈடுயிணையற்ற உழைப்பும் நம் நாட்டு மக்களின் நலம் காத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால் இத்தகைய இணைப்பு அவசியம் தேவை.
இதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும்,
இணைந்து அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வர வேண்டுமென மாணவர், இளைஞர் சமூகத்தையும் அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
இந்த நகலுடன் மற்றொரு பணிவான வேண்டுகோளையும் தமிழக மக்களுக்கு முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்தக் கருத்தினை ஏற்று கொள்பவர்களும்…..
மேலும் , தமிழ்நாட்டை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றிட உழைக்கத் தயாராக இருப்பவர்களும்……..
கீழ்க்காணும் பெயர்களோடு தங்கள் பெயர்களையும் இணைத்துக்கொண்டு அனைவருக்கும் இப்பதிவினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி…………
இங்ஙணம்:
1)பேரா. மணிவண்ணன் , சென்னை பல்கலைகழகம்.
2) அருட்பணியாளர் சு. ஆன்றனி கிளாரட்,
குமரி மாவட்டம்.