இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 7

காட்சி -7

இடம் : மதங்கவனத்திலே ஒரு பகுதி

பாத்திரங்கள் : ராமன், லட்சுமணன்.

[ராமன் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறான்; லட்சுமணன் ஒரு மான் குட்டியைக் கொன்று தூக்கி வருகிறான்.)

ராமன் : சீதா; சிங்காரப் பெட்டகமே! சிந்தை நிறை அமுதே! என் உயிர் பறிக்கும் ஓவியமே! உன்னை எங்கேயடீ கண்டு தேடுவேன்… சீதா!

லட்சு : (தலையில் அடித்துக்கொண்டு) அண்ணா! கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டே நீ?

ராமன் : லட்சுமணா! என் சீதையை இராவணன் இந்நேரம் என்ன பண்றானோ தெரியலையேடா! சீதா! உன் ராமன் காட்டிலே இப்படிக் கதறுகிறேனே, இது உன் காதிலே விழலையா? சீதா, சீதா….

(குதிக்கிறான்]

லட்சு : சீதா! சீதா!! சீதா!! அவள் எக்கேடு கெட்டால் என்ன? எவன் தூக்கிக்கிட்டுப் போனால்தான் என்ன? அவள் செத்தால்கூட என்ன அண்ணா ! அப்படி மோசம் வந்துவிடும் உனக்கு? அவள் போனால் அயோத்தியிலே பேரழகி *பிரபாவதி இருக்கா; (*சமண ராமாயணம் ஆதாரம்) ரதியை நிகர்த்த ரதினிபா காத்துக்கிடக்கிறாள்; சிங்கார ‘ ஸ்ரீதாமாவும், சுதாமாவும் உன் சிந்தையில் இடம்பெறத் துடித்துக் கிடக்கிறார்கள்!….

ராமன் : போடா மடையா! யார் இருந்தாலும் சீதையில்லாமல் எனக்குப் புத்தி எதிலேயும் ஓடாதடா! அடி என்பனம்பழ மார்பழகி! பச்சரிசிப் பல்லழகி – உன்னை என்மனம் எப்படியடீ மறக்கும்!…

(தூரத்தில் பழங்கள் பொறுக்கிக் கொண்டிருந்த “சபரி” என்ற பெண்ணைப் பார்த்துவிட்டு]

அதோ! சீதை, சீதை… [என்று சொல்லியபடி ஓடுகிறான். லட்சுமணன் பின் தொடருகிறான்.]

ராமன் : சீதா! ஏன் சீதா இப்படி பேசாம இருக்கே? சீதே உனக்குக் கோபம் ஆகாதடீ… உன் ராமப் பிரபு நீ இல்லாமல் இத்தனை நாளும் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டேன் தெரியுமா?

சபரி : அய்யா ! நான் சீதையல்ல; என் பெயர் சபரி. நான் ஒரு தமிழ் மறையவரின் பெண். கனிகள் பொறுக்க வந்திருக்கிறேன்.

ராமன் : சீதை! நீ பேரையுமா மாத்தி வச்சுக்கிட்டே? இராவணப் பயல் உன் புத்தியையும் கெடுத்துட்டானே! என்னை அடையாளம் தெரியலை உனக்கு? வில்லுடைத்துக் கரம் பிடித்த வீரனை அதுக்குள்ளே மறந்துட்டியே சீதே! உன்னை விட்டுப் பிரிந்தது முதல் காமன் என்னைச் சுட்டெரிக்கிறானே! குளிரோடையே! கொஞ்சும் மொழியே! என் கொடுமையைத் தணிக்க வா! அந்த வக்கில்லாத காமனை எதிர்த்துப் போரிடுவோம் வா! உன்னைக் கண்டதும் ஓடி ஒளிந்து விடுவான் அந்தப் பேடி! வா, உள்ளே வா! ஓவியமே, ஒன்றாகுவோம் வா! உம்பருலகு செல்வோம் வா.

என்று சபரியின் கையைப் பிடித்து இழுத்தும் கொண்டு குடிசைக்குள் புகுகிறான்.)

சபரி : அய்யோ ! என்னை விட்டுவிடேன்…

ராமன் : மாட்டேன் சீதா! மாட்டேன்!

சபரி : நான் சீதையுமில்லே ஒன்னுமில்லே; உனக்குப் போதை!

ராமன் : அப்ப கொஞ்சம் பொறு; என்னைவிட என் தம்பிக்கு சீதையை நல்லா அடையாளம் தெரியும் அவனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்றேன்.

சபரி : மானங்கெட்டவனே மரியாதையா போகமாட்டே?

ராமன் : ஏய், உங்கிட்டே என்னடி பேச்சு?

[எட்டிப் பிடித்து அணைக்கிறான்.)

சபரி : அய்யோ ! அய்யோ !….

(குடிசைக்குள் இருவரும் கட்டிப் புரளுவதைப் பார்த்த லட்சுமணன் ஓடி வருகிறான். அதற்குள் ராமன் முகத்தை “உர்” என்று வைத்துக் கொண்டு வெளியே வருகிறான். லட்சுமணன் திகைத்து உள்ளே போய்ப் பார்க்கிறான். தன் [அங்கே சபரி இறந்து போய்க் கிடப்பதைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து.)

லட்சு : அய்யோ அண்ணா ! இது என்ன அநியாயம்? அவள் யாரோ ஒரு அசுரப்பெண். அவளைக்கொன்று விட்டாயே?

ராமன் : நான் கொல்லலேடா; அவளாதான் செத்துப் போயிட்டா!

லட்சு : உன் சீதைப் பைத்தியம் இப்படிக் கொலையிலே ஆரம்பிச்சுட்டுதே! இப்ப யாராவது வந்தா என்ன பண்ணுவே? அதோ யாரோ முனிவர்கள் வருகிறார்களே.

[மதங்க முனியும் மற்றும் பலரும் வருகிறார்கள்.)

ராமன் : லட்சுமணா… பயப்படாதே! அவாள்”லாம் நம்பளவாதாண்டா! அவா வந்ததும் என்னைப் பற்றிக் கொஞ்சம் எடுத்துச் சொல்.

[முனிவர்கள் அருகில் வந்ததும்]

லட்சு : வாருங்கள் முனிவர்களே! இவர்தான் ஸ்ரீமந் ராமச்சந்திரபிரபு! தசரதர் மைந்தர் நம்ப சக்ரவர்த்தித் திருமகன். நான் லட்சுமணன்… அவன் தம்பி!

மதங் : ஆகா அப்படியா! ஆரியர் தலைவா! பாக்கியம், பாக்கியம்; தங்களைப் பார்க்க பெரும்பேறு பெற்றோம்.

ராமன் : என்ன ரிஷிகளே வேலைகள் எல்லாம் ஒழுங்கா நடக்குதா?

மதங் : என்ன, தேவரீர் இப்படிக் கேட்டுட்டீர்கள்? அடியேங்கள் எங்களால் முடிந்தவரை அசுரக் கூட்டத்தின் கலை, நாகரீகம், பழக்கம் அத்தனையும் நிர்மூலம் பண்ணிண்டுவர்றோம்…

ராமன் : பலே! பேஷ்… பேஷ்! மதங் : எங்கே சீதாபிராட்டியாரைக் காணோமே….

ராமன் : (அழுது கொண்பே அவளை இராவணன் தூக்கிக் கொண்டு போய்விட்டான்…..

லட்சு : அன்னையை மீட்பதற்காகவே இப்போது நாங்கள் புறப்பட்டிருக்கிறோம்!

மதங் : ஆ! அப்படியா? அந்த அசுரப்பதருக்கு என்னத் திமிர்…”

[ஒரு முனிவன் உள்ளே பார்த்து விட்டு]

முனி : ஆ! இது என்ன, சபரி இறந்து கிடக்கிறாளே; பிரபு இது எப்படி நேர்ந்தது? சற்று முன்புதானே அவளை உயிரோடு பார்த்தோம்?

ராமன் : ஆ…! (விழிக்கிறான்)

லட்சு : ராமப்பிரபுவை சேவித்ததும் அந்த அம்மையார் மோட்சமடைந்து விட்டார்கள்.

ராமன் : ஆ! ஆமா ஆமா! அவள் எனது பக்தை. போன ஜென்மத்திலேயே வரங்கேட்டா… நான் இந்த ஜென்மத்திலே இப்படி இப்படி ஆகும்னு அப்பவே சொன்னேன். அது அப்படி அப்படியே ஆய்விட்டது. என்ன லட்சுமணா?

லட்சு : ஆமாம் ஆமாம்!

மதங் : ஆகா! சபரியின் பெருமையே பெருமை!

ஒரு முனிவர் : இந்தப் பெரும்பேறு அடைய என்ன பாக்கியம் செய்திருக்கிறாள் அந்தப் பெண். ஆகா!

2-வது முனி : ஆகா பிரபு! தங்கள் கிருபாகடாட்சம் இருந்தவாறுதான் என்னே!

ராமன் : இப்படியே எழுதி வையுங்க யெல்லாத்தையும்.

மதங் : வேறு வேலை எங்களுக்கு; உங்கள் லீலா விநோதங்களை அப்படியே உலகுக்கு அறிவிக்கிறோம் அண்ணலே!

லட்சு : சரி, இப்ப சீதாபிராட்டியை மீட்க ஒரு மார்க்கமும் காணவில்லையே முனிவர்களே.

ராமன் : ஆமாம்! முனிவர்களே, இப்ப சீதா எனக்கு மிக அவசரமாகத் தேவையாயிருக்கிறாளே!

மதங் : இராவணன் மகா பலசாலி. பெரும் வீரன். நீங்கள் தனிமையில் அவனை ஒன்றும் செய்ய முடியாது. இதோ இந்த மலையைத் தாண்டிப் போனால் ஒரு காடும் குன்றுகளும் இருக்கின்றன. அங்கே போவீர்களானால் இந்த கிட்கிந்தாபுரி மன்னன் வாலியால் விரட்டப்பட்டு ஒளிந்து கொண்டிருக்கும் வாலியின் தம்பி சுக்ரீவனையும், அவனது நண்பன் அனுமானையும் சந்திக்கலாம். அனுமான் நமது பக்தன். நமக்காக எதையும் செய்யக் காத்திருப்பவன் அவன் உதவியைப் பெற்று, சுக்ரீவனிடம் நீங்கள் அடைக்கலம் புகுந்தால் சீதையை மீட்க அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். இப்பொழுதே புறப்படுங்கள்.

ராமன் : லட்சுமணா, புறப்படு புறப்படு. இப்போதே போவோம். சீதை, சீதா…..

லட்சு : நாங்கள் போய் வருகிறோம் முனிவர்களே.

மதங் : ஆகா; ஸ்ரீமந் ராமச்சந்திரமூர்த்திக்கு ஜே!

[இருவரும் மலைக் குன்றுகளை நோக்கிப் போகிறார்கள்.)

You may also like...