இராமாயண நாடகம் – தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை
முதற் பதிப்புக்கு
தந்தை பெரியார் அவர்களின் மதிப்புரை
தோழர் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய இராமாயண நாடகம் என்னும் இப் புத்தகத்திற்கு என்னை ஒரு மதிப்புரை எழுதித் தரும்படி கேட்டார்.
எனக்குள்ள பல நெருக்கடியும் அவசரமுமான வேலைகளுக்கிடையில் இப் புத்தகம் முழுவதையும் தொடர்ச்சியாகப் படித்துப் பார்க்க நேரம் இல்லாததால் மேற்போக்காகவும், அங்குமிங்குமாகவும் பல பக்கங்களைப் படித்தேன்; அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், இப்போது நாட்டில் பார்ப்பனர்களும் புலவர்களும் இராமாயணத்தைப் பற்றிச் செய்து வரும் இராமாயணப் பிரச்சாரம், எவ்வித பொறுப்பும் கவலையும் இல்லாமல் மக்களுக்கு இராமாயணம் பற்றி இருந்து வரும் பக்தியையும் மூட நம்பிக்கையையும் அவர்கள் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு, தங்கள் இஷ்டப்படி இராம பக்தி பெருகவும் மூட நம்பிக்கை வளரவும் பார்ப்பன உயர்வுக்கு ஏற்பவும் தக்கவண்ணம் பிரச்சாரம் செய்து வருவதைக் கண்டு வேதனைப்பட்டு, பாமர மக்கள் இடையில் இருக்கும் மூட பக்தியையும் இராமாயண சம்பந்தமான மூடநம்பிக்கையையும் எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்கிற உணர்ச்சிமீது, இராமாயணப் புத்தகத்தை நன்றாகப் படித்து அறிந்து அவற்றின் உண்மைகளையும், மற்றும் இராமாயணக் கதைப் போக்கிலிருந்து நியாயமாக பகுத்தறிவுக்கு ஏற்ப கருதப்பட வேண்டிய சில கருத்துக்களை தனக்கு நேர் என்று தோன்றியபடி விளக்கியும் எழுதி இருக்கிறார் என்றே கருதுகிறேன்.
பொதுவாகவே நாட்டில் உலவும் இராமாயணங்கள் ஒன்றல்ல, பல. அவற்றில் எது சரி என்று நம்மால் கண்டு பிடிக்க முடியாதபடி, ராமாயணம் நம்மால் புரிந்து இன்றபடியால் அதன் இருப்பதோடு, மொழி அமலங்கள் தமிழ் மொழியில் இல்லாமல் நம்மால் கொள்ளவே முடியாதபடி வடமொழியில் இருக்கின்றபடியால் உண்மையை நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதோடு மொழி பெயர்ப்புகள் பலவற்றை பார்த்தவரையில், அவைகள் ஒன்றுக்கொன்று பெரும் மாற்றமாகவும் கூட்டியும் குறைத்துப் பெரும் முரண்களோடும் இருந்து வருகின்றன.
இராமாயணத்தை நமது மக்கள் அறிந்திருக்கிற தன்மை என்னவென்றால் இராமாயணம் கடவுள் கதை. இராமன் கடவுள். அவன் மனைவி கடவுள். இவர்களை வணங்கினால் மோட்சம் கிடைக்கும். பாபம் ஒழியும். இராமாயணம் படித்தால் நினைக்க பலன் கூடும். துன்பங்கள் ஒழியும் என்பன போன்றவைகளேயாகும். இந்தக் கருத்துக் கொள்ளவும் உணரவும் காரணம், மக்கள் உண்மையான அதாவது வால்மீகி என்பவரால் எழுதப்பட்ட இராமாயணம் என்பதைப் படிக்க முடியாமல் போனதுடன், அதில் உள்ளது என்ன என்பதை சரியானபடி அறியவும் முடியாமல் போனதேயாகும்.
இதனால் ஏற்பட்ட மூடபக்தியும் மூடநம்பிக்கையும், மக்களை நீண்ட நாட்களாக முட்டாள்களாக ஆக்கிவருவதும், இந்நாட்டுப் பெருவாரியான பழங்குடி மக்கள், சமுதாயத்தில் தாழ்ந்த நான்காவது ஐந்தாவது சாதி மக்களாகவும், அதன் பயனாக கல்வி இல்லாமலும் மான உணர்ச்சி இல்லாமலும் இருக்க வேண்டியதாகவும் ஆகிவிட்டபடியால், இந்த நிலையை ஒழிக்க வேண்டுமென்று கருதுகிறவர்கள் அதற்காக வேண்டியாவது, இந்த இராமாயண உண்மைகளை அறிய வேண்டி ஆசைப்பட்டு மேற்கண்ட பல மொழி பெயர்ப்பு இராமாயணங்களையும் கவனமாகப் படிக்க வேண்டிய அவசியமேற்பட்டு விட்டது.
அந்த இராமாயண மொழிபெயர்ப்புகள் என்பவைகள் பெரிதும் பார்ப்பனர்களாலும், பார்ப்பனீய உணர்ச்சி உள்ளவர்களாலும், இந்துக்கள் என்பவர்களாலும் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதாலும், இவைகள் மேலே கூறியபடி ஒன்றுக்கொன்று மாற்றமாகவும் முரணாகவும் இருப்பது மாத்திரமல்லாமல், அவர்கள் அதில் உள்ள உண்மைகளை மறைத்து எவ்வளவோ ஜாக்கிரதையாக மொழி பெயர்த்து இருந்தாலும், அவற்றில் ஏராளமான ஆபாசங்களும் ஒழுக்க ஈனங்களும் மனிதத் தன்மைக்கே ஏற்றதல்லாததுமான சேதிகளும் நடப்புகளும் கொண்ட வாக்கியங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட விஷயங்கள் வெறுங்கதை என்பவைகளில் காணப்பட்டால் அதைப்பற்றி யாரும் அதிகக் கவலை கொள்ள மாட்டார்கள்.
ஆனால் கடவுள் அவதாரம் – கடவுள் நடத்தை – மக்கள் பக்தி செலுத்த வேண்டிய, பின்பற்ற வேண்டிய விஷயம் என்ற தன்மையில் பிரச்சாரம் செய்து மக்களிடையில் புகுத்தப்பட செய்யப்பட்டதென்ற கதையில் இருப்பதால், இவைகளின் தன்மைகளைக் கண்டுபிடித்து, அது மாத்திரமில்லாமல் மக்களுக்கு இவைகளை எடுத்துச் சொல்லி மக்களின் மடமையைத் திருத்த வேண்டும் என்கிற அவசியம் தோன்றி இருக்கிறது.
அந்த நோக்கத்துடன் தோழர் தங்கராசு அவர்களால் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட புத்தகமானதால் இதில் அநேகமாக நான் பார்த்தவரையில் வால்மீகி இராமாயணத்தின் பல மொழிபெயர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டும் மற்றும் அவைகளில் உள்ள வாக்கியங்களில் பொதிந்துள்ள கருத்துக்களை தாம் கருதுகிறபடி எடுத்துக்காட்டியும் அவர் எழுதி இருக்கிறார் என்பதாக அறிகிறேன்.
ஏதாவது சிறு மாற்றங்கள் இருந்தாலும் இருக்கலாம் என்பதாகவும் கருதுகிறேன்.
நமது நாட்டில் இராமாயணம் மாத்திரமல்லாமல் எத்தனையோ புராணங்கள், இதிகாசங்கள் என்பவைகளிலும் இப்படியே ஏராளமான ஆபாசங்களும் ஒழுக்க ஈனங்களும் இதில் தோழர் தங்கராசு அவர்கள் எழுதி இருப்பதற்கு மேலாகவே மலிந்து கிடப்பதுடன் இவைகளுக்கு மூலம் என்று சொல்லத்தக்க வேத சாஸ்திரங்கள் என்பவைகளிலும் அப்படியே காணப்படுகின்றன.
இராவணன் உருவத்தைப்போலச் செய்து தீயிட்டுக் கொளுத்துகிறார்கள், வடநாட்டார் ஆனால் இராமனை வெறுக்கின்ற லட்சக்கணக்கான தமிழர்கள் இராமன் உருவத்தைக் கொளுத்தவில்லை.
தோழர் திருவாரூர் கே. தங்கராசு அவர்கள் எழுதியுள்ள இந்த இராமாயண நாடகம். பெரும்பாலும் மூலச்சரக்கில் முதல் சரக்கான வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது. நாடகச்சுவை கருதி ஏதோ இரண்டொரு இடங்களில் நாடகாசிரியரின் கைச்சரக்கும் கலந்திருக்கலாம். வரலாற்று ஆசிரியர்களுக்குத்தான் இந்த உரிமை கிடையாது; கற்பனைக் கதையைக் கையாளுபவர்களுக்கு இந்த உரிமை உண்டு. இது நிற்க,
இராமாயணக் கதை கற்பனை யென்றால், தேவர்கள் ரிஷிகள், அரக்கர்கள், குரங்குகள் என்றெல்லாம் இக்கதையில் வருபவையும் கற்பனைதானோ என்று கேட்கலாம்.
தேவர்கள் ரிஷிகள் என்போர் இந்நாட்டில் குடியேறிய ஆரியர்; அரக்கர், குரங்குகள் என்போர் இந்நாட்டின் சொந்த மக்களான திராவிடர். இந்த இரு சாரார்களுக்கும் இடையே நடந்து வந்து சச்சரவுகளையும் பூசல்களையும் குறிப்பதே இராமாயணக் கதை, இந்த உண்மையை வெள்ளையர், ஆரியர், வடநாட்டார், திராவிடர் ஆகிய எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொண்டு எழுதி வைத்திருக்கின்றனர்.
“மத நம்பிக்கை ஒருபுறமிக்க, இராமாயணம் உவமைக் கதையுமல்ல: சரித்திரமுமல்ல; முழுவதும் கற்பனையையே அடிப்படையாகக் கொண்ட கவிதை”
என்ற சரித்திரப் பேராசிரியரான திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் (இந்திய சரித்திரம் – பக்கம் 34) எழுதியுள்ளார்.
பொதுவாக திராவிடப் பழங்குடி மக்களாகிய நாம், நான் மேலே காட்டியதுபோல இந்த வேத சாஸ்திர புராண இதிகாசங்கள்: இவைகளில் காட்டப்பட்ட கடவுள்கள் என்பவைகளாலேயே, நாம் கீழ் மக்களாக நான்காம், ஐந்தாம் ஜாதி மக்களாக, ஆக்கப்பட்டு இருப்பதால் இவைகள் யாவற்றையும், தோழர் தங்கராசு அவர்களைப் போலவே, ஒவ்வொருவராலும் நன்றாய் ஆராய்வது மாத்திரமல்லாது எல்லாத் தமிழ் மக்களும் அறியும்படியாக புத்தக ரூபமாய் வெளியிடவும் முன்வர வேண்டும் என்பதுடன், சொற்பொழிவின் மூலம் மக்கள் அறியும்படி செய்யவேண்டும் என்பதும் எனது மாபெரும் ஆசை ஆகும்.
இந்த ஆசை ஒரு அளவாவது வெற்றிபெற தோழர் தங்கராசு அவர்கள் முன்வந்து இப்புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதற்கு நான் அவரை மனமாரப் பாராட்டுவதுடன், பொதுமக்கள் யாவரும் இப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பலன் அடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை 19-11-54
ஈ.வெ. ராமசாமி