குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு
டெல்லியின் ஷாயின்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் – குடியுரிமை தேசியப் பதிவேடு – குடியுரிமை மக்கள் தொகைப் பதிவு சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்ணன் ரவுண்டானா பகுதியில் 10 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்கள். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பொறுப் பாளர்கள் ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்கள். ஆண்களைவிட இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பங்கேற்பது இந்தப் போராட்டத்தின் தனிச் சிறப்பாகும். காவல்துறை அமைதியாகப் போராடிய மக்கள் மீது திடீரென தடியடி நடத்தி வன்முறையால் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது. அதற்குப் பிறகுதான் போராட்டம் குறித்த செய்தியை ஊடகங்களே வெளியிடத் தொடங்கின. தடியடிக்குப் பிறகு போராட்டம் தமிழ்நாடு முழுதும் மேலும் விரிவடைந்தது. வண்ணாரப்பேட்டை போராட்டக் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியது. போராட்டத்தைத் தடை செய்ய ‘சங்கிகள்’ நீதிமன்றத்தை அணுகினர். போராடும் உரிமையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் போக்குவரத்துக்கு இடையூறின்றி போராட்டம் நடத்த அறிவுறுத்தியது. போராட்டக் குழுவினரே போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்கள் போக்குவரத்தை கட்டுப்பாடாக ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
பிப். 23 அன்று மாலை போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வண்ணாரப்பேட்டைக்கு சென்றனர். பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், போராட்டத்தின் நியாயங்களை விளக்கிப் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரைகளடங்கிய நூல்களை தோழர்கள் விற்பனை செய்தனர். சில மணி நேரங்களிலேயே கொண்டு சென்ற அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன.
நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 27022020 இதழ்