பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலிப்பட்டு கிராமத்தில் சமூக விரோதிகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலை கண்டித்து பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், அறநெறி மக்கள் கட்சி, விதை நெல் இலக்கிய கூடம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பெரியாரை அவதூறு செய்யும் நோக்கத்தோடு ‘துக்ளக்’ இதழ் விழாவில் பேசிய ரஜினிகாந்துக்கு எதிராகவும், கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரியார் சிலைகளை சேதப்படுத்தும் பயங்கரவாத சக்திகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை கட்டமைக்கும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நிகழ்வுக்கு பெரியார் பெருந்தொண்டர் ஐயா அரு. நல்லதம்பி தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழகப் பேச்சாளர் அப்துல் மஜீத், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர் ஆறு. நீலகண்டன், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் நீலகண்டன், வை.சிதம்பரம், திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்கள் சித.திருவேங்கடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர் வ.ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஆர்எஸ் வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சேக் இப்ராம்ஷா, அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர் ஆயர் ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
பெரியார் முழக்கம் 20022020 இதழ்