கடவுளுக்கு மருத்துவ ‘செக்-அப்’
உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கோயில்களிலுள்ள கடவுள்களுக்கு ‘ஷொட்டர்கள்’ போடப்பட்டுள்ளதாம். அர்ச்சனை மந்திரங்கள் ஷொட்டர்களுடன் உள்ள கடவுள்களுக்கு நடக்கிறதாம். கோடை காலத்தில் குளிர் சாதன வசதிகளை செய்ததாகவும், காற்று மாசுபாடு இருந்த காலத்தில் அதைத் தடுக்கும் கவசங்கள் அணிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கடவுள் சிலைகளுக்கு உயிர் இருப்பதால் இந்த பாதுகாப்புகள் தேவைப்படுகிறது என்று ஒரு வேத பண்டிதர் சமாதானம் கூறுகிறார். கடவுளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அனைத்து உயிர்களையும் படைத்ததாக இவர்கள் கூறும் கடவுளின் உயிர், மனித உயிர்களைப் போன்றதுதானா என்று பகுத்தறிவாளர்கள் கேட்கவே செய்வார்கள். மனிதன் கடவுளை தன்னைப் போலவே கருதி தனது பண்புகளை கடவுள் மீது திணித்து விட்டான், ஜாதி உட்பட! எனவேதான் கடவுள் மனிதனின் கற்பனை என்று பகுத்தறிவாளர்கள் கூறுகிறார்கள்.
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அச்சத்தின் காரணமாக கடவுள் என்ற கற்பனையை உருவாக்கிக் கொண் டான் என்பதால் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். இது ஏதோ கடவுள் நம்பிக்கையாளர்களைப் புண்படுத் துவதாக புலம்புகிறார்கள். மனிதர்களைப் போலவே கடவுளுக்கும் உயிர் இருக்கிறது என்று பேசும் புரோகிதர்கள், இனி ஒவ்வொரு கடவுளுக்கும் புரோகிதர்களைத் தவிர கூடுதலாக செலவு பற்றி கவலைப்படாமல் மருத்துவ ஆலோசகர்களையும் நியமித்து கடவுளின் உடல்நலனைக் கண்காணித்து வரலாம். அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளிலும் சேர்க்கலாம். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் கடவுளர்களைக் கொண்டு வரலாம் என்பது அடியேனின் யோசனை.
உ.பி.யில் முதல்வராக இருக்கும் ஆதித்ய நாத் என்ற காவிச் சாமியார் அம்மாநில மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆன்மிக வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு முன்பு கடவுள்களுக்கு அதே மருத்துவர் களைக் கொண்டு மருத்துவ சேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்வது நல்லதுதானே.
பெரியார் முழக்கம் 16012020 இதழ்