கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி
கழக செயலவைக் கூட்டத்தில் பேசிய கழகப் பொறுப்பாளர்கள், 2020ஆம் ஆண்டில் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்தனர்.
திராவிடர் விடுதலைக் கழக செயலவை, சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28, 2019 அன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தென்சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் மயிலை சுகுமார், கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களைக் கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் கடந்தகால செயல்பாடுகள் – பெரியாரியலை எதிர்நோக்கும் ஆபத்துகள், கழக அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து தலைமைக் குழுவில் நடந்த விவாதங்கள், கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ குறித்த வரவு செலவு கணக்குகளை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து கழகத் தோழர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
கருத்துகளைத் தெரிவித்த தோழர்கள் : அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்), தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, ராஜீ (வடசென்னை மாவட்ட செயலாளர்) ஆகியோர் உரையைத் தொடர்ந்து இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், இணையதளத்தின் வழியாக எளிமையாக படிக்கக்கூடிய பெரியார், அம்தே;கர் தொகுப்புகள், குடிஅரசு தொகுப்புகள், கழக நிகழ்வுகள் குறித்த பதிவுகள், இணையதளத்தில் மின்னஞ்சல் நூல்களாக ஏற்றப்பட்ட கழக வெளியீடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ பதிவுகள், ‘அமேசான் கிண்டில்’ வழியாக தரவிறக்கம் செய்து படிக்க பதிவேற்றப்பட்ட நூல்கள், பெரியார் செயலி (ஆப்ஸ்) அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து திரைக்காட்சிகள் வழியாக விரிவாக விளக்கினார்.
பிற்பகல் 2.30 மணிக்கு அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. 3.30 மணிக்கு மீண்டும் செயலவை கூடியது. தெள்ளமுது (காஞ்சிபுரம்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), இளையரசன் (விழுப்புரம்), மதன்குமார் (கடலூர்), டேவிட் (சேலம் கிழக்கு), மேட்டூர் கோவிந்தராஜ் (சேலம் மேற்கு), முகில்ராசு (திருப்பூர்), சங்கீதா (திருப்பூர்), வேணுகோபாhல் (ஈரோடு), கிருஷ்ணமூர்த்தி (ஈரோடு தெற்கு), மா.பா.மணிகண்டன் (மதுரை), வெள்ளியங்கிரி (கோவை), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்), நிர்மல் குமார் (கோவை), சாமிநாதன் (நாமக்கல்), சந்தோஷ்குமார் (தர்மபுரி), பாரி (தஞ்சை), சென்னிமலை செல்வராஜ் (ஈரோடு), தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், கோபி. இராம இளங்கோவன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.
குடிஅரசு வழக்கு, பேச்சாளர்களுக்கு, களப்பணியாளர்களுக்கு, பயிற்சிகள், கழக ஏடுகள் வளர்ச்சி, கழகத் தோழர்களை மாவட்டந்தோறும் சந்திக்கும் திட்டம் குறித்து விரிவாகப் பேசினார். மயிலை சுகுமார் நன்றி கூற 7 மணியளவில் செயலவை நிறைவடைந்தது. கழகச் செயல்பாடுகளை வரும் ஆண்டில் தீவிரமாக்க தோழர்கள் உறுதி அளித்தனர்.
பெரியார் முழக்கம் 02012020 இதழ்