ஜனநாயகமா? பார்ப்பன நாயகமா? குற்றவாளிகளுக்குச் சுதந்திரம்; இயக்கவாதிகளுக்குச் சிறை கீற்று நந்தன்
சாதி செல்வாக்கு, பண பலம் உள்ளவர்களை காவல் துறை அவ்வளவு எளிதாகக் கைது செய்துவிடாது. அப்படியானவர்கள் மீது வழக்குப் பதிவு செயவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். போராட்டச் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து, மக்கள் கவனம் பெற்ற பிறகு ஏற்படும் அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி தொடர்புடையவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்யும் – அதுவும் எளிதில் ஜாமீன், விடுதலை கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவுகளில். இதுதான் சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது, இப்போது மாணவி பாத்திமா தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்கிலும் இதுதான் நடந்து வருகிறது.
கேரள மாணவி பாத்திமா தனது தற்கொலைக்குக் காரணம் அய்.அய்.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தும், இதுவரை சுதர்சன் பத்மனாபன் கைது செய்யப்படவிலை. இந்தியாவில் பார்ப்பனர்களை அவ்வளவு எளிதாகக் கைது செய்யவோ, தண்டித்து விடவோ முடியாது. அதிகார மட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கும் பார்ப்பனர்கள் அதை அவ்வளவு எளிதாக அனுமதித்து விட மாட்டார்கள். தொடர்ச்சியான மக்கள் திரள் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் மூலமாகவே அதை சாத்தியமாக்க முடியும்.
அப்படியான ஒரு போராட்டத்தை ஈரோட்டில் 29.11.2019 அன்று நடத்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் கண.குறிஞ்சி, ‘நீரோடை’ தலைவர் நிலவன், காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட தோழர்கள் திட்டமிட்டிருந்தனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, 29.11.2019 அதிகாலை 3 மணி அளவில் மேற்குறிப்பிட்ட தோழர்கள் மூவரையும் ஈரோடு காவல் துறை கைது செய்திருக்கிறது.
பாத்திமாவின் தற்கொலைக்குக் காரணமான சுதர்சன் கைது செய்யப்படவில்லை. ஆனால், கைது செய்யச் சொல்லி போராட்டம் நடத்த விருந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். ஜனநாயகம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்.
இப்படி ஜனநாயக விரோதமான கைது நடவடிக்கைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல.
பிப்ரவரி 16, 2016ம் தேதி, அரசுப் பணிகளில் 3ரூ இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருந்த மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர்.
டிசம்பர் 11, 2017ம் தேதி, நன்னிலத்தில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்களை சந்திக்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் செயராமன், அவருடைய மனைவி சித்ரா, அவரின் ஆதரவாளர்கள் அருள்நேசன், பிரிதிவிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2019, ஜனவரி மாதம் கோட்டையை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிட்டு, சென்னை வரவிருந்த ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் களும், அரசு ஊழியர்களும் பல்வேறு சுங்கச் சாவடிகளில் வைத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில் 02.10.19 அன்று தேசிய கல்விக் கொள்கையின் நகல் கிழிப்புப் போராட்டத்தை நடத்தவிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கூடுவதற்குக்கூட நேரம் வழங்கப்படா மல் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர்.
மக்களுக்கு நலம் பயக்கும் எந்தச் செயலையும் ஆளும் வர்க்கம் தானாக செய்வதில்லை. கோரிக்கைகள் வைத்தால் அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்றிச் சொல்லிப் போராடுபவர்களை கைது செய்வதில் மட்டும் அவ்வளவு வேகம் காட்டுகிறது.
ஜனநாயக வழியிலான அகிம்சைப் போராட்டங்கள் உண்மையில் முதலாளித்துவ அரசுகளுக்கு ஒரு Safety Valve தான். ‘அமைதி வழியிலான போராட்டங்களை அனுமதித்தால், அவர்கள் கொஞ்ச நேரம் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவிட்டு கலைந்து விடுவார்கள்’ என்றுதான் உலகில் உள்ள பெரும்பாலான அரசுகள் அத்தகைய போராட்டங்களை அனுமதிக்கின்றன. உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு மாநாடுகளில் கூட, அந்த அரங்கங்களுக்கு எதிரே கருப்புக் கொடி போராட்டமும், ‘Go Back’ போராட்டங்களும் நடப்பதை நாம் பார்த்திருக் கிறோம். ஏன், பல நாடுகளில் இத்தகைய போராட்டங்களுக்கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களும் உண்டு – டெல்லி ஜந்தர் மந்திர், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை போல…
இத்தகைய நடைமுறைகளுக்கு எதிராகத்தான் தமிழக காவல் துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிகளவு போராட்டங்கள் நடைபெறும் தமிழ் நாட்டை தனது இரும்புப் பிடிக்குள் வைத்து, இதை ஒரு Police State ஆக மாற்றும் எத்தனிப்பு தமிழக காவல் துறையின் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகத் தென்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல் துறையின் இந்தப் போக்கில் மாற்றமில்லை.
போராடும் மக்களைவிட, மக்களை அரசியல்படுத்தும் இயக்கவாதிகள்தான் காவல் துறையின் முதல் இலக்காகி வருகிறார்கள். முன்வரிசைத் தோழர்களைக் கைது செய்து விட்டால், போராட்டங்களை முடக்கி விடலாம் என்று காவல் துறையினர் கருதுகிறார்கள். இந்த முன்வரிசைத் தோழர்கள் இல்லையென்றால், விரக்தியில், கோபத்தில் இருக்கும் மக்கள் வன்முறைப் பாதையில் இறங்கும் வாய்ப்பு உள்ளது என்பதை காவல் துறையினர் உணர்வதில்லை. அதேபோல், அனைத்து அரசியலையும் கற்றுத் தேர்ந்த இயக்கவாதிகளை அமைதி வழியில் போராடுவதற்கும் அனுமதி மறுத்தால், அவர்கள் பிறகு எந்த வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி யிருக்கும் என்பதையும் காவல் துறையோ, அரசோ உணர்ந்தாகத் தெரியவில்லை.
இத்தகைய பாசிச கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகளையே மக்கள் மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுப்பதால், ஆளும் வர்க்கம் தன்னைத் திருத்திக் கொள்ளவதற்கான எந்த ஒரு கட்டாயமும் ஏற்படுவதில்லை.
ஓர் அரசை தனது கடமையைச் செய்ய வைப்பதற்குக்கூட மக்கள் போராட வேண்டி யிருக்கும் என்றாலே, அது மோசமான அரசுதான். ஆனால், அப்படிப் போராடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், அது எவ்வளவு மோசமான அரசு?
இந்த நாட்டில் ஜனநாயகம் துளிகூட எஞ்சியிருக்கவில்லை என்பதைத்தான், கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், சுப.உதய குமாரன், பாடகர் கோவன், திருமுருகன் காந்தி, வளர்மதி, பேராசிரியர் செயராமன், நந்தினி, கண.குறிஞ்சி என நீளும் கைது நடவடிக்கைகள் காட்டுகின்றன. நீதிமன்றங்கள் பல முறை கண்டித்தும், காவல் துறையின் இப்போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
இயக்கவாதிகள் ஒரு கூட்டமைப்பாக இயங்குவதும், ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டாலும் கூட்டமைப்புத் தோழர்கள் திட்டமிட்டபடி போராட்டங்களை நடத்திக் காட்டுவதும், அரசியல் அடக்குமுறைகள் குறித்து மக்களிடையே தொடர்ச்சியான பரப்புரைகளில் ஈடுபடுவதும் உள்ளிட்ட எதிர் நடவடிக்கைகள் மட்டுமே பாசிச அதிகாரத்தின் பிடியில் இருந்து நம் மக்களை விடுவிக்கும்.
பெரியார் முழக்கம் 12122019 இதழ்