‘நள்ளிரவு நாடகங்கள்’
குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர் பதவிகளுக்கான அதிகாரங்களை அப்பட்டமாக முறைகேடாகப் பயன்படுத்தி முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கிறது, நடுவண் ஆட்சி.
மகாராஷ்டிராவில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் சிவசேனையிடம் நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு முதல்வர் பதவியைத் தன் வசமே வைத்துக் கொள்ள பா.ஜ.க. செய்த முயற்சியை சிவசேனை ஏற்கவில்லை. பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தார்கள். சிவசேனை தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடந்தன. திடீரென்று தேசியவாத காங்கிரசிலிருந்த சரத்பவார் அண்ணன் மகன் அஜித் பவாருடன் பேரம் பேசி அவர் மூலமாக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பா.ஜ.க. ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் முயற்சித்தது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்க தயாரான நிலையில் நள்ளிரவில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவுகளைத் தட்டி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் கட்டளைக்கு பணிந்தார் குடியரசுத் தலைவர். விடியற்காலை பா.ஜ.க. முதல்வராக பட்னாவிசும், துணைத் தலைவராக அஜித் பவாரும் பதவியேற்க ஆளுநர் அழைத்தார். போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பதைப்பற்றிகூட ஆளுநர் கருதிப் பார்க்கவில்லை.
குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறைகள் புறந்தள்ளப்பட்டு விட்டன. அமைச்சரவையைக் கூட்டாமலேயே அவசரமான நிலையில் முடிவெடுக்கக்கூடிய
12 விதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். நள்ளிரவுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி விடியற்காலை பா.ஜ.க. அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்பது அவ்வளவு அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையா?
அஜித் பவார் மீது கூட்டுறவு வங்கியில் ஊழல் செய்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அஜித்பவாரை சிறைக்குள் தள்ளுவோம் என்று தேர்தல் பரப்புரை செய்த பா.ஜ.க., அவரையே துணை முதல்வராக்க பதவி வெறியில் துடித்தது. மூன்று நாள் மட்டுமே நீடித்த பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
உச்சநீதிமன்றம் விதித்த ‘கெடு’வுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க குதிரை பேரம் படியாத நிலையில் பட்னாவிஸ் பதவியிலிருந்து ஓட்டம் பிடித்தார். அஜித் பவார் தவறை உணர்ந்து மீண்டும் தேசியவாத காங்கிரசுக்குத் திரும்பினார்.
“ஜனநாயக மதிப்பீடுகளைக் காப்பாற்றவும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்கும் குதிரை பேரத்தைத் தடுக்கவும் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது” என்று உச்சநீதி மன்றமே கூறியது.
அமித்ஷா, மோடி இரட்டையர்கள் ‘சாணக்கியர்கள்’, ‘வானத்தை வில்லாக வளைப்பவர்கள்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட பிம்பங்கள் உடைந்து சுக்குநூறாகிக் கிடக்கின்றன. உச்சநீதிமன்றமே இவர்களின் நேர்மைக்கு சான்றிதழைக் கொடுத்திருக்கிறது. ‘தங்களுக்கு ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்கள்’ என்று பா.ஜ.க. தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘ஆவணத்தைப்’ பார்த்து நீதிபதி குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை பா.ஜ.க. ஆட்சி அமைக்க ஆதரவளித்தோர் வருகைப் பதிவேட்டை பட்டியலாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுதான் நீதிபதியின் சிரிப்புக்கான காரணம்.
இப்போது காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் சிவசேனைக் கட்சியின் உத்தவ் தாக்கரே முதல்வராகி யிருக்கிறார். குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் ‘மதச் சார்பின்மை’ கொள்கையை ஏற்று செயல்பட சிவசேனை முன்வந்திருக்கிறது. ‘இந்துத்துவா’ கொள்கையில் அக்கட்சி சமரசம் செய்து கொண்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும். இட ஒதுக்கீடு கொள்கையை உறுதியாக செயல்படுத்துவதும் தனியார் துறையில் 80 சதவீத வேலை வாய்ப்புகளை மராட்டிய மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதும் குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் பாராட்டத்தக்க முக்கிய அம்சங்கள். சிவசேனை-பா.ஜ.க. இணைந்து மகாராஷ்டிராவை மதவெறி பூமியாக மாற்றிவந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட முரண், ‘மதவெறி’க்கு கடிவாளம் போட்டிருக்கிறது. இனி அடுத்த நிகழ்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 05122019 இதழ்