டிசம். 22 கோவையில் நீலச் சட்டைப் பேரணி: தோழர்களே, தயாராவீர்!
பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு டிசம்பர் 22இல் கோவையில் நீலச்சட்டைப் பேரணிக்கும் ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி நடத்தி பெரும் வெற்றி பெற்றோம். தொடர்ந்து தமிழ்நாடு ‘காவி’கள் மண் அல்ல என்பதை உணர்த்தவே நீலச்சட்டைப் பேரணி!
திருச்சிப் பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததைப் போல் – அந்த எண்ணிக்கையையும் மிஞ்சக் கூடிய அளவில் நீல சட்டைப் பேரணிக்கு திரண்டு வரவேண்டும்!
ஜாதி எதிர்ப்பு – மதவெறி எதிர்ப்புக்கு அம்பேத்கரும்-பெரியாரும் நமக்கு இரு கண்கள்; அவர்கள் தான் நமக்கு வழிகாட்டிகள்; பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்ற புரட்சியாளர் அம்பேத்கர், தனது அறிவு ஆற்றல் சட்டப் புலமையால் சமூக நீதி என்ற இடஒதுக்கீடு தத்துவத்தை சட்டத்தின் வழியாக நிலைநிறுத்தினார்.
பட்டியல் இனப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்கு சட்டத்தின் கதவுகளைத் திறந்து விட்டவரும் அம்பேத்கர் தான்!
மதவாத – பார்ப்பனியம், அம்பேத்கர் பெரியாருக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிக் காட்ட முயலுகின்றன. அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளர் என்று சித்தரிக்க வரலாற்றைத் திரிக்கிறார்கள்.
வடநாட்டில் ஜாதி – தீண்டாமை வெறி தாண்டவமாடும் நிலையில் ஒப்பீட்டளவில் தமிழகம் ஓரளவு முன்னேறி நிற்பதற்கு அடித்தளமிட்டது அம்பேத்கர்-பெரியாரியல் சிந்தனைகள்தான். இன்னும் நாம் ஜாதி ஒழிப்புக் களத்தில் வெகுதூரம் பயணிக்க வேண்டிய நிலையில் பார்ப்பனிய மதவாதம் தமிழ்நாட்டை குறி வைக்கிறது. அதை முறியடிக்க உறுதியேற்போம்!
நீலச் சட்டைப் பேரணி – இந்துத்துவ எதிர்ப்புப் பேரணி!
ஜாதியை எதிர்ப்போர் – ஒன்று திரளும் பேரணி!
சமூக விடுதலைக்கான எழுச்சிப் பேரணி!
கழகத் தோழர்களே; கோவை நோக்கித் திரண்டு வாரீர்!
கோவையை ‘நீல’ நிறமாக்குவோம்!
பெரியார் முழக்கம் 21112019 இதழ்