“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு
கவுண்டர் ஜாதிப் பெண்ணோடு பழகினார் என்பதற்காக கோகுல் ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜ் என்பவர், ‘வாட்ஸ் அப்’ வழியாக மீண்டும் ஒரு வெறிப் பேச்சை பேசியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு முறை இதேபோல் பேசியிருக்கிறார்.
ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று அவர் பேசிய இரண்டாவது பேச்சு, 37 நிமிடம் நீடிக்கிறது. கவுண்டர் ஜாதியைச் சார்ந்த இளைஞர்கள், அரசியல் கட்சிகளைக் கடந்து, ஒரே அணியாகத் திரள வேண்டும் என்றும், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தொடங்குமாறும் அவர் கூறியுள்ளதோடு காவல்துறை அதிகாரி களையும் கடுமையாக எச்சரிக்கை செய்கிறார். ‘நான் வெளியே வந்து உங்கள் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்’ என்றும் சவால் விட்டுள்ளார்.
“நமது பெண்டு பிள்ளைகள் கவுரவத்தையும், நமது ஜாதிக்கான பழம் பெருமையையும் காப்பாற்ற வேண்டும்; நமது சமூகத்தின் ஒற்றுமையை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு சீர்குலைக்க முயற்சிக்கின்றன; நாம் சட்டமன்ற உறுப்பினராகி ஒன்றும் நடக்கப் போவது இல்லை; ஒரு எம்.எல்.ஏ. போய் கிழிச்சது போதும்; நமது ஒட்டு மொத்த ஜாதியும் ஒரே குடையின் கீழ் திரள வேண்டும்; நமக்கு அரசியல் வேண்டாம்; ஒரே சமூகமாக நாம் திரளவேண்டும் என்பதே நமது தாரக மந்திரம். கவுண்டர் சமுதாயத்துக்கு எங்கே, ஒரு பிரச்னை என்றாலும் உடனே அந்த கிராமத்தில் போய் நிற்க வேண்டும். நமது சமுதாயத்தை வைத்து வளர்ந்து எம்.எல்.ஏ.வான தனியரசை எச்சரிக்கிறேன், நீ செய்த மோசடிகள், கோடி கோடியாக அடித்த கொள்ளைகள் அத்தனையும் எனக்குத் தெரியும்; நான் வெளியே வந்த பிறகு, உன்னை சிறைக்கு அனுப்புவதுதான் எனது வேலை; நீ என்ன பெரிய மாவீரனா? சமுதாயத்தைப் பயன்படுத்தி வளர்ந்த நீ, ஜாதியின் ஆணி வேரைப் பிடுங்க நினைக்கிறாய்; அது நடக்காது. பேசாமல், ஒதுக்கிக்கொள் (தனியரசு நடத்திய அமைப்பிலிருந்து வெளியேறி புதிய அமைப்பை உருவாக்கியவர் தான் இந்த யுவராஜ்).
நாம் மற்ற ஜாதிக்காரர்களுக்கு எதிரிகள் அல்ல; அதே நேரத்தில் நமக்கென்று பாரம்பர்யப் பெருமைகள் உண்டு. ஒரு கவுண்டர் இறந்து விட்டால், அதற்கான சாங்கியம் சடங்குகளை செய்வதற்கு அந்தந்த ஜாதிக்காரர்கள்தான் வரவேண்டும். எனவே நாம் மற்ற ஜாதிக்காரர்களிடம் சுமூகமாக இருக்கவே விரும்புகிறோம். நமது சமுதாயம்தான் அனைவரையும் அரவணைக்கிற சமுதாயம். நாம் மற்றவர்களுக்கு படியளந்த ஜாதி இப்போது பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறோம். திருமாவளவன் என்ன செய்தார்? கோகுல்ராஜ் கொலைக்காக கண்ணீர் வடிக்கும் அவர், அந்த குடும்பத்துக்கு இலட்சம் இலட்சமாக அள்ளிக் கொடுத்து விட்டாரா?
நாமக்கல் மாவட்ட காவல்துறை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. நமது சமுதாயத்தைச் சார்ந்த பூபதி, குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். இதற்குப் பின்னால் நின்று இயக்குபவர்கள் யார் என்பது தெரியும்! யார் இயக்கினாலும் சரி, காவல்துறைக்கு எச்சரிக்கிறேன், நீங்கள் தான் நீதிமன்றத்துக்கு வந்து நிற்கப் போகிறீர்கள்! நீங்கள் போட்டிருக்கிற காக்கி சட்டையை கழற்றாமல் நான் விடப் போவதில்லை. உயர் அதிகாரிகளுக்குக் கூறுகிறேன், நான் வெளியே வருவேன். அப்போது உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.
காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தால், கலெக்டர் உடனே கையெழுத்துப் போட்டு விடுவாரா? கலெக்டரும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்; சொல்ல வைப்பேன். மிரட்டுவதாக நினைக்க வேண்டாம். எனக்கு அதற்கான அவசியமில்லை. நான் உனக்கு பயந்தவன் அல்ல. சாவுதான் உச்சபச்ச பயம். எனக்கு அந்த பயமில்லை. திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் இந்த வழக்கில் ஒரு கவுண்டர் குடும்பப் பெண்ணை அழைத்துப் போய் விசாரித்திருக் கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் தெருபொறுக்கி நாய்களைப்போல் நடந்திருக்கின்றார்கள். நான் வெளியே வந்தவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கப் போகிறீர்கள். எங்கள் பெண்கள் செருப்பு, துடைப்பத்தை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வரத்தான் போகிறார்கள். டி.எஸ்.பி. ராஜூ, ஒரு சர்வதேச ரவுடி. 8 மாவட்டங்களிலே வலிமையாக உள்ள ஒரு ஜாதி அமைப்பின் தலைவனாக நான் இருக்கிறேன். அதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், வாய்க்கு வந்தபடி பேசினால் என்னவாகும் தெரியுமா?
ஏ.டி.எஸ்.பி. சந்திரமோகனுக்கு கூறுகிறேன், நீ நிரந்தரமாக வேலை இழக்கப் போகும் நிலை வரும். நான் பயந்து போய் ஓடி ஒளிந்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். உங்களுக்கு எல்லாம் பாடம் கற்பிக்க – வெளியே வருவேன்” என்று வெறியைக் கக்குகிறது இந்தப் பேச்சு. (அதில் இடம் பெற்றுள்ள வார்த்தை கள் அச்சில் ஏற்றப்பட முடியாதவை)
பெரியார் முழக்கம் 20082015 இதழ்