ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை
அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை:
ஏதோ பெரியார் தான்
சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக் கொண்டுள்ளார்
என்று சொன்னார்கள்.
ஆனால் 1996 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பிலேயே சூத்திரன் என்று கூறுகிறது.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை முடக்கு வதாகவே பாஜ.க. ஆட்சி கல்விக் கொள்கை இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கினார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.
ஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு என்பது ஒவ்வொரு துறைதோறும் நம்மை அடிமைப்படுத்திய, கேவலப்படுத்திய பண்பாடு. நாம் கட்டிய கோயிலில் நமக்கு வழிபாடு நடத்தக்கூட உரிமை இல்லை என்று சொன்னார்கள். பெரியார் நடத்திய கடைசிப் போராட்டம் இதற்காகத்தான். பெரியார் நடத்திய போராட்டங்களில் நாத்திகப் போராட்டங்கள் இரண்டு மட்டும்தான். விநாயகர் சிலையை உடைத்தார், இராமர் படத்தை எரித்தார் என்ற இரண்டைத் தவிர வேறெதுவும் இல்லை. இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு என ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கான போராட்டத்தைத்தான் பெரியார் நடத்தினார்.
1926ஆம் ஆண்டு மதுரையில் பார்ப்பனரல்லா தோர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், இந்துக்கள் என்று சொல்லப்படும் சகல சமூகத்தினருக்கும் கோயில் பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகை யிலும் சம உரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டார். 1973ஆம் ஆண்டில் பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டமும் அதுதான். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு என்று போராட்டத்தை நடத்தினார். அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கு என்று கோரிக்கை வைக்கவில்லை, உரிமை உண்டு, ஏற்றுக்கொள் என்று போராடினார். கடவுள் நம்பிக்கை உடைய, உரிய ஆகம பயிற்சி உடையவர்களை அர்ச்சகராக்கு என்று பெரியார் சொன்னார். கலைஞர் உடனடியாக சட்டம் இயற்றியதால் போராட்டத்தை பெரியார் ஒத்தி வைத்தார். ஆனால் அதை நீதிமன்றம் சென்று தடுத்துவிட்டார்கள்.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது பற்றி நீதிபதி மகாராசன் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. அவர் ஒரு சைவ அறிஞர். அதிக உடல் பருமன் உள்ளவன் அர்ச்சகராக முடியாது என ஆகமத்தில் உள்ளது என்று மகாரசன் எழுதியுள்ளார். பல் உடைந்தவன், சிவந்த தலை உடையவன் அர்ச்சகராக முடியாது என்றெல்லாம் ஆகமத்தில் இருக்கிறது என எழுதினார். லாகூர் மாநாட்டிற்காக அம்பேத்கர் தயாரித்த உரையில்கூட அர்ச்சகர் தகுதி பற்றி கூறியிருந்தார். குறிப்பிட்ட பட்டயத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும்தான் இனிமேல் அர்ச்சகராக நியமிக்க வேண்டும், இப்போது இருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்ச்சி அடைந்தால் மட்டும் அர்ச்சகர்களாக நீடிக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். இதையெல்லாம் கடை பிடித்தால் முக்கால்வாசி பார்ப்பனர்கள் அர்ச்சகராக இருக்கமுடியாது.
தீர்க்கதரிசி என்று பலரை சொல்கிறார்கள். பெரியாரைத்தான் தீர்க்கதரிசி என்று சொல்ல வேண்டும். இடஒதுக்கீட்டின் வழியாக கல்வி பெறுவோம், அரசுப் பணிகளைப் பெறுவோம். ஆனால் நீதிமன்றத்தில் பார்ப்பான் அமர்ந்திருப்பான் என்று சொன்னார். உச்சநீதிமன்றத்தில் 36 பேரில் 34 பேர் பார்ப்பனர்கள்தான் உள்ளனர். உச்சநீதிமன்றம் சொன்னால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, அதற்கு மேல் ஒரு நீதிமன்றம் இல்லை அவ்வளவுதான், அதனால் ஏற்றுக் கொள்கிறோம் என்று இடஒதுக்கீட்டு போராட்டத்தின்போது பெரியார் சொன்னார்.
‘என்ன உச்சநீதிமன்றம் சொல்லிடுச்சுனா ஏற்றுக் கொள்ள வேண்டுமா? உலகத்திலேயே அவன் தான் பெரிய அறிவாளியா? அதற்கு மேல் வேறு நீதிமன்றம் இல்லை. அதனால் வேற வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்’ என்று பெரியார் வேடிக்கையாகச் சொன்னார். ஆந்திராவில் துறவியானான் ஒருத்தன், சன்னியாசியாகப் போனான். உச்சநீதிமன்றம் கூறியது சூத்திரன் சன்னியாசியாக முடியாது என்று. எதுவுமே வேண்டாமென்று (சன்னியாசியாக) கூட போக முடியாது. 1996இல் ஒரு வழக்கில், திருமணமான பெண், மணவிலக்கு சட்டப்படி பெறாமல் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பது தான் வழக்கு. கீழமை நீதிமன்றம் கூறியது சொத்தில் பங்கு உண்டு என்று. ஏனென்றால் பள்ளி சான்றிதழ்களில் இவர்தான் அப்பா என்று உள்ளது. உயர்நீதிமன்றம், சட்டப்படி மணவிலக்கு பெறாமல் செய்த திருமணம் செல்லாது. எனவே சொத்தில் பங்கில்லை என்று கூறியது.
அடுத்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். உச்சநீதிமன்றம் பங்கு உண்டு என்று கூறியது. அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஒன்றை கவனிக்கத் தவறிவிட்டது. இந்த வழக்காடிகள் அனைவரும் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு மனைவியும், வைப்பாட்டியும் ஒன்றுதான் எனவே சொத்தில் பங்கு உண்டு என்று கூறியது உச்சநீதிமன்றம். ஏதோ பெரியார் தான் சூத்திரன், சூத்திரன் என்று சொல்லிக்கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். ஆனால் 1996இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சூத்திரன் என்று கூறுகிறது. எம்.கோவிந்தராஜ் எதிர் முனுசாமி கவுண்டர் என்ற வழக்கு. திருப்பத்தூரைச் சேர்ந்த பெருமாம்பட்டி கூளைக் கவுண்டரை திருமணம் செய்த பாப்பம்மாள், மணவிலக்குப் பெறாமல் முனுசாமி கவுண்டரை திருமணம் செய்து கொள்கிறார். இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இவர்களெல்லாம் சூத்திரர்கள் என்று தீர்ப்பு சொன்னது. பெரியார் தான் சொன்னார், ‘உங்களையெல்லாம் சாஸ்திரத்தில், சட்டத்தில், அனுபவத்தில் சூத்திரன் என்று எழுதி வைத்திருக் கிறானே உங்களுக்கெல்லாம் மானமில்லையா என்று கேட்டார்’. பெரியார், ஜாதி ஒழிப்பும், தனித் தமிழ்நாடு விடுதலையும் என் உயிரின் மேலான இரு கொள்கைகள் என்று அப்போது கூறினார். நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இப்போது வேறு மாநிலத்தவர்களும் பேசுகிறார்கள். இந்தியை எதிர்த்தார் பெரியார் அதனால் தான் வேலை கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் சொல்கிறார்கள், காங்கிரஸ்காரர்கள் நிறைய கல்விக் குழுக்களை அமைத்தார்கள். டாக்டர் லட்சுமண சாமி முதலியார் கல்விக் குழு, டாக்டர் இராதா கிருஷ்ணன் கல்விக் குழு, இவர்கள் துணைவேந்தராக, பேராசிரியராக இருந்தவர்கள். யஷ்பால், கோத்தாரி குழுக்கள் இவர்கள் பல்கலைக் கழக மானியக் குழு துணைத் தலைவராக இருந்தவர்கள். ஆச்சாரியா இராமமூர்த்தி இவர் காந்தியக் கல்வியாளர். இவையெல்லாம் காங்கிரஸ்காரர்கள் கல்வியாளர்களைக் கொண்டு நியமித்த கல்விக் குழுக்கள். பாஜக போட்ட கல்வி குழுவில் போட்ட “கல்வியாளர்கள்” யார்? தொழிலதிபர்களைக் கொண்ட கல்வியாளர்கள் தான். வாஜ்பாய் ஒரு குழுவை நியமித்தார், அம்பானி-பிர்லா கல்விக் குழு. இவர்கள் தான் கல்வியைப் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த குழு தான் அந்நிய நாட்டு பல்கலைக் கழகங்கள் வேண்டும், பல்கலைக் கழகங்களில் அரசியல் நடவடிக்கைகள் கூடாது என்று பரிந்துரைத்தது. அதனால் தான் ரோகித் வெமுலாவை இழந்தோம், கன்னையா குமார் மேல் தேச விரோத சட்டம் பாய்ந்தது
மோடி ஆட்சியில் இப்போது இரண்டு குழுவை அமைத்தார்கள். போன முறை மோடி ஆட்சியில் இருந்த போது டி.எஸ்.ஆர். சுப்ரமணியம். அவர் அரசுத் துறையில் அமைச்சக செயலாளராக இருந்தவர். அந்தக் குழுவில் ராஜ்புத் என்ற ஒரே ஒரு கல்வியாளர் இருந்தார். அவர் ஆர்எஸ்.எஸ் கல்வியாளர். மிகவும் வித்தியாசமான கல்வியாளர். கோமியத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிற தென்று இப்போது ஆய்வு செய்து கொண்டுள்ளார்கள். சரஸ்வதி நதி எங்கே போனது என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்று வரலாற்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் தான் இப்போது கல்வியாளர்கள். இவர் தான் அந்தக் குழுவின் தலைவர். பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே சொன்னார், இந்த நாட்டிற்கு கல்வி கொடுக்க வேண்டும். இந்த நாட்டின் வரலாறு என்பது 100அடி அரசர்கள் 1000 ஆண்டுகள் ஆண்டதாக உள்ளதை அரசர்களின் வரலாறாகச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இந்த நாட்டில் பூகோளம் என்பது பாலில் கடல் இருந்தது என்பதாக உள்ளது. இங்குள்ள அறநெறி (நவாiஉள) என்பது கழுதையைத் தொட்டால் என்ன பிராயச்சித்தம் என்று சொல்லிக் கொடுக்கிறது.
இப்படி கல்வி இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறும் என்று மெக்காலே எழுதினார். இப்போதும் அதைத்தான் கல்வி என்று சொல்லிக் கொண்டுள்ளனர். அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழுவுக்குப் பிறகு இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் கல்விக் குழுவின் தலைவர். இஸ்ரோ விஞ்ஞானிக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்? இவர் கல்விக் கொள்கை அறிக்கையைத் தருகிறார். அந்த அறிக்கையின் இரண்டு வரிகளைப் படித்தாலே போதும் கல்விக் கொள்கையில் என்ன இருக்கிற தென்று தெரிந்துவிடும். அவர் அந்த அறிக்கையில் ஓரிடத்தில் சொல்கிறார், ‘இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து பல பத்தாண்டுகளாக, அனைவருக்குமான கல்வி, சமமான கல்வி என்று பேசிக் கொண்டு கெடுவாய்ப்பாக தரமான கல்வியை கொடுக்கத் தவறிவிட்டோம்’ என்று அவர் எழுதி யிருக்கிறார்.
எனவே ‘அனைவருக்குமான கல்வி, சமமான கல்வி என்று பேசினோமே தவிர தரமான கல்வியைப் பற்றி இதுவரை பேசவேயில்லை’ என்று இனி தரமான கல்வியை தரப்போகிறதாக கூறுகிறார். நீட்டிற்கு இப்படித் தான் விளக்கம் கொடுத்தார்கள், தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம் என்று, தரமான மருத்தவர்கள் தான் இப்போது தேர்வெழுதி உள்ளே (சிறைக்கு) போய்க் கொண் டிருக்கிறார்கள். ஆள் மாறாட்ட மோசடிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தில் 2018இல் ஒரு கணக்கெடுப்பு நடத்தி கூறியிருக்கிறார்கள் அதில், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்பதுதான் தர நிர்ணயம். அதைத் தாண்டி பல மாநிலங்கள், பல நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் முதலில் இருப்பது தமிழ்நாடு, இங்கு 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இது எதற்கு இணையானது என்றால் நார்வே, ஸ்வீடனுக்கு இணையானது. இந்த நாடுகளில் முறையே 100 க்கு 4.3, 4.2 என்ற அளவில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். டெல்லியிலேயே 1000 பேருக்கு 3 மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள்.
அப்போது இந்த மருத்துவத்தை தரமான கல்வி இல்லாமலா படித்தோம்? எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அரசு தரமான மருத்துவம் கொடுக்கிறது. அதில் படித்த எத்தனை பேர் இந்தியாவில் வேலை பார்க்கிறார்கள்? அய்.அய்.டி.யில் படித்த எத்தனை பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்? நம்ம வரிப் பணத்தில் படித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டு கல்விக் கொள்கை சொன்னது, இங்கே நீ ‘எம்.எஸ்.’ பட்ட மருத்துவ மேல் படிப்புப் படிக்க வேண்டுமென்றால், இலவசமாகப் படி. ஆனால் கிராமத்தில் மூன்று வருடம் வேலை செய்து விட்டு வா இலவசமாக படிக்கலாம் என்றது. அதில் ஒரு ஒப்பந்தத்துடன், ‘எம்.எஸ்.’ அல்லது ‘எம்.டி.’ முடித்தவுடன் 5 வருடம் இங்கே வேலை பார்க்க வேண்டும் அல்லது 45 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்ற ஒப்பத்தத்துடன் மருத்துவக் கல்வி நடைமுறையை உருவாக்கி வைத்துள்ளோம். இதனால் மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். இதே நிபந்தனையுடன் உயராய் விற்குப் போகிறவர்களும் படிக்கிறார்கள் அதனால் மருத்துவ பேராசிரியர்கள் கிடைக்கிறார்கள். எங்கள் கல்விக் கொள்கையினால் இப்போது என்ன கெட்டு விட்டோம்? பா.ஜ.க.காரர்கள் மிகவும் விசித்திர மானவர்கள். மோடி என்ன படித்தார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 2017ஆம் ஆண்டு ஒரு சான்றிதழை கொடுத்தார்கள் மோடி 1978ஆம் ஆண்டு டெல்லி யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் என்று. அந்த சான்றிதழ் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டது. 78ஆம் ஆண்டு எப்படி கணினி தட்டச்சு செய்ய முடியும்? மாட்டிக் கொண்டார்கள். நமக்கு ஒரு கல்வி அமைச்சர் இருந்தார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர் என்ன படித்தார் என்பதும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நமது கல்வியமைச்சர் செங்கோட்டையனைப் பார்த்து 12ஆவது படித்தவர் கல்வியமைச்சரா என்று கிண்டலாக கேட்டார்கள். ஸ்மிருதி இரானி என்ன படித்தார் என்று பா.ஜ.க.காரர்களிடம் கேளுங்கள் யாராவது சொல்கிறார்களா பார்ப்போம். இப்போது தான் சொல்கிறார்கள் தொலைதூரக் கல்வியில் விண்ணப்பம் போட்டிருக்கிறார் என்று. மனிதவள மேம்பாட்டுத் துறை ஒரு பட்டியல் எடுத்திருக் கிறார்கள் அது என்னவென்றால், இந்தியாவில் சிறந்த நூறு பல்கலைக் கழகங்கள், சிறந்த நூறு பொறியியல் கல்லூரிகள், சிறந்த நூறு மருத்துவ கல்லூரிகள், சிறந்த கலைக் கல்லூரிகள் எவை என்று. இந்தியாவின் சிறந்த நூறு பல்கலைக் கழகங்களில் தமிழகத்தில் மட்டும் 24 பல்கலைக் கழகங்கள் என்று பட்டியல் போட்டது.
சிறந்த நூறு கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளது. சிறந்த பொறியியல் கல்லூரிகளில் 22 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சார்ந்தவை. மோடியின் ஒளிரும் குஜராத்தில் இரண்டு கல்லூரிகள் தான் உள்ளது. இவர்கள் தான் நமக்கு தரமான கல்வியை கொடுக்கப் போகிறார்களாம். இந்தக் கல்விக் கொள்கையில், ழுசடிளள நுசேடிடஅநவே சுயவiடி என்று ஒன்று உள்ளது. அதாவது 18 முதல் 23 வயது உள்ளவர்களில் எத்தனை பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் என்பது தான் அந்த சதவீதம். இந்தியாவின் சராசரி 25.2 தான். இதை 2035-ற்குள் 50 சதவீதம் உயர்த்தப் போகிறோம் என்று கல்விக் கொள்கையில் கூறியிருக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வாக சொல்கிறார்களென்றால், 50 சதவீதம் எட்ட 50000 ஆக இருக்கும் கல்லூரிகளை மூடிவிட்டு 12 ஆயிரமாக குறைத்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறார்களாம். இதை எங்காவது நம்ப முடியுமா? சரி நாம் சொல்கிறோம் என்றால், தமிழ்நாட்டின் ழுசடிளள நசேடிடடஅநவே சயவiடி மனிதவள மேம்பாட்டுத் துறை 2017 கணக்குப்படி 47 சதவீதம் உள்ளது தமிழ்நாட்டில். இப்போதே நாங்கள் 47 சதவீதம் இருக்கும் போது எங்களுக்கு எதற்கு உன் கல்விக் கொள்கை? நீ 2035இல் வைத்துள்ள இலக்கை நாங்கள் 2020இல் எட்டிவிடுவோம் எங்களுக்கு உன் கல்விக் கொள்கை தேவையில்லை.
தேர்வு முறைகளைப் பற்றி அப்போது, லட்சுமணசாமி முதலியார் தலைமையிலான உயர்கல்விக்கான குழு (அவர் 30 ஆண்டுகளாக துணை வேந்தராக இருந்தவர்) கேள்வித் தாள்கள் யாவும் விளக்கமான விடைக் கூறுமாறு இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதைத்தான் நாமும் சொல்கிறோம், அனிதா வாங்கிய மதிப்பெண் என்ன? 1176 என்று சொல்லக்கூடாது. இயற்பியல், வேதியியல், உயிரியலில் 600 க்கு 593 மதிப்பெண் வாங்கிய அனிதா ஏன் ‘நீட்’டில் 720 க்கு 107 மதிப்பெண் வாங்க முடியவில்லை? அப்போது மாணவியின் அறிவில் குறையா? உன் தேர்வு முறையில் குறையா? இது தான் தரமான கல்வியா?
இனிமேல் பட்டப்படிப்பிற்கு, பொறியியல் படிப்பிற்கு, சட்டப் படிப்பிற்குக்கூட அகில இந்திய தேர்வு எழுத வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்கள் அரியானாவில் தேர்வு எழுத வேண்டும். இப்படிப்பட்ட தேர்வு முறையை இந்த கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. சரி வேலை வாய்ப்புகளுக்கு எங்களுக்கு என்ன செய்துள்ளாய்? மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் தான் கேள்வித் தாள் இருக்கும். வட இந்தியர்கள் தாய் மொழியில் எழுதுவார்கள் நாங்கள் அந்நிய மொழியில் எழுதணும். ஏன் ஆங்கிலத்தில் எழுதலாமே என்று கேட்கலாம், 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தவுடன், இதை மாற்றி விட்டார். மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆங்கிலத் திறன் அறிவுக்கு ஒரு தேர்வை வைத்திருந்தது. 100க்கு 25 மதிப்பெண்; 150க்கு 37 மதிப்பெண் பெற்றால் போதும் வடநாட்டு மாணவர்கள் ஆங்கிலத் தேர்வு கூடாது என்று போராடினார்கள்.
மோடி அதற்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார் இன்று வரை பின்பற்றுகிறார், என்னவென்றால், ஆங்கிலத்தில் எழுதுங்கள் ஆனால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று. அதாவது ஐஹளு,ஐஞளு, ஐகுளு ஆகப் போகிறவர்களுக்கு கூட ஆங்கிலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று. ஆனால் தமிழ்நாட்டில் வருமான வரித் துறையில் எழுத்தராகப் போகிறவர்கள்கூட ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டுமாம். அதனால் தான் மாநில மொழிகளிலும் மாநில அளவிலும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதை நாம் மய்ய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், தமிழ்நாடு அரசு தேர்வுகளில் ஒரு திருத்தத்தை 2016 நவம்பர் 7இல் கொண்டுவருகிறார்கள். விண்ணப்பிப்பவர்கள், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், நேபாள், பூடானை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம், தமிழ் தெரியாமல் இருந்தாலும் பணியில் சேர்ந்து இரண்டாண்டு களில் தமிழில் தேர்ச்சி பெறலாம் என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வருகிறார்கள்.
இப்போது மின்வாரியத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 36 பேர் பணியில் சேர்ந்துவிட்டார்கள். அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொதுப் போட்டியில் 78 சதவீதம் பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேறு காரணத்தால் இந்த தேர்வை இரத்து செய்துவிட்டார்கள். இப்படி எல்லா விதத்திலும் நம்மை புறக்கணிக்கிறார்கள். அதனால் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார். மீண்டும் பெரியார் எழுப்பிய முழக்கம் தேவைப்படுகிறது. ஜாதி ஒழிப்பு (பெண்ணடிமைத்தனம் இரண்டும் ஒன்று தான்), உயிரினும் மேலான தனித் தமிழ்நாடு இவை இரண்டையும் நினைவு படுத்தி விடைபெறுகிறேன்.
பெரியார் முழக்கம் 14112019 இதழ்