நமது நெறி திருக்குறள்; நமது மதம் – மனித தர்மம் திருக்குறள்: பெரியார் கருத்து என்ன?
பெரியார் திருக்குறளையே கடுமையாகக் கண்டித்தார் என்று பா.ஜ.க. – சங். பரிவாரங்கள் பேசி வருவதற்கு மறுப்பாக பெரியாரின் திருக்குறள் பற்றிய கருத்துகளின் ஒரு தொகுப்பு.
- ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய ‘திருக்குறள்’ ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல விவரங்களை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது.
- நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களி லிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியு மாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர் களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத்தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக் குரிய தக்க ஆதாரமாய் அமைந்திருக்கிறது.
- திருக்குறள் ‘தெய்வீகத் தன்மை பொருந்திய’ ஒருவரால் எழுதப்பட்டது என்பதாகவோ அல்லது மனித சக்திக்கு மேற்பட்டவரால் சொல்லப் பட்டது என்பதாகவோ நாம் அதைப் போற்ற வில்லை. அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த கருத்து களுக்காகத்தான் நாம் அதைப் போற்றுகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் உணர்தல் வேண்டும்.
- நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளிகளாகக் குறிப்பிட முடியும்.
- திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவற்றை மடியச் செய்ய, அக்கொள்கைகளி லிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்.
- சுருங்கக் கூறினால் – புத்தர் செய்த வேலையைத் தான் திருக்குறள் செய்திருக்கிறது. புத்த தர்மமும் ஆரியத்திற்கு மாறான தர்மம்தான். அதனால்தான் அது இந்நாட்டு ஆரியர்களால் அழிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை எதிர்த்து அழித்து ஒழிப்பதற் காகத்தான் திருக்குறள் பாடப்பட்டதென்பது, அதை ஆராய்ச்சி செய்வோர் எவருக்கும் விளங்காமற் போகாது.
- என்னைப் பொறுத்த வரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியாவிட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந் திருக்கிறேனென்பதையும், அதன் மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
- இன்ன காரியங்களினால் இன்ன வஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் பிரத்யட்ச அனுபவத்திற்கும் பின் விளைவுக்கும் ஏற்றதாக அமையக் கூடியது. தத்துவார்த்தம் கூறத் தேவையில்லாத கருத்து தான் விஞ்ஞானத்திற் கேற்ற கருத்தாகும். தத்துவார்த்தம் பேசுவ தெல்லாம் பெரிதும் தம்முடைய சாமர்த்தி யத்தைக் காட்டிக் கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான் கூறுவேன். திருக்குறளில் அத்தகைய தத்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை.
- திருக்குறளின் ஒவ்வொரு கருத்தும் ஒருவனின் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படக் கூடியதாக யிருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் அதில் நன்றாக விளக்கப் பட்டிருக்கிறது.
- திருக்குறளில் பொய், மெய்யாகவோ அல்லது மெய், பொய்யாகவோ கூறப்பட்டிருக்கவில்லை என்பதுதான் என் கருத்து.
- திருக்குறளில் – ஒரு அரசன், ஒரு விவசாயி, ஒரு வியாபாரி, ஒரு துறவி, ஒரு பொதுநலத் தொண்டர், ஒரு மந்திரி, ஒரு காதலன், ஒரு காதலி, ஒரு தலைவன், ஒரு தலைவி என சகலருக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்றில்கூட மூட நம்பிக்கை புகுத்தப்பட்டிருக்க வில்லை.
- திருக்குறள் ஆசிரியருக்குக் கடவுளைப் பற்றிக் கூட நம்பிக்கையில்லை.
- ‘பிராமணன்’ என்ற வார்த்தையைத் திருக்குறள் ஆசிரியர் எங்குமே உபயோகிக்கவே இல்லை.
- பார்ப்பான் என்று கூறினால்கூட நம்மவர்களில் சிலர் குற்றம் கூறுகிறார்கள். “டே அவன் பிராமணன்டா; அவனைப் பார்ப்பான் என்று கூறாதடா; அது தவறு என்று சொன்னால் நீங்கள் கேட்க வேண்டும். அப்போது நீ யாருடா?” என்று. இந்த ஞானமெல்லாம் 3 அணாத் திருக்குறளில் இருக்கிறது வாங்கிப் படியுங்கள்!
- ஒரு திருடன் களவாடினான் என்றால் அவன் எந்த நட்சத்திரத்தில் களவாடினான் என்பது சப்-இன்ஸ்பெக்டருக்குத் தெரிய வேண்டியதில்லை. அல்லது இமயமலையின் உயரம் என்ன வென்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய தில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கோ ஒரு தாசில்தார் வேலைக்கோ பி.ஏ. பட்டம் எம்.ஏ. பட்டம் தேவையில்லை. குறள் படிப்பே போதுமானது.
- திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும் அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பனச் சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால் இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய் விட்டது.
- குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கி யிருக்கிறது.
- குறளை முசுலீம்கள், கிறித்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
- ஒவ்வொருவனும் தான் இந்துவல்ல ‘திராவிடனே-திருக்குறளனே’ என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது.
- என்ன மதம் என்றால் குறள் மதம். மனித தர்ம மதம் என்று சொல்லப் பழக வேண்டும்.
- கடவுளையும், மதத்தையும் எப்படி முட்டாள் தனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அதேபோன்று நீதி நூல்களிலும் நம்மை இழிவுபடுததும் இராமாயணம் – பாரதம் – கீதை போன்றவற்றை நம்பி வந்திருக்கிறோம். அதே சமயத்தில் உலகிற்கே பொதுவான அறிவு விளக்கத்தையும், அதற்கான அரசியல் முறைகளையும் மக்களின் வாழ்வு பற்றியும் எடுத்துக் கூறியுள்ள நமது திருக்குறளை நாம் மதிப்பதில்லை; படிப்பதுமில்லை.
- என்ன மதத்தினர் என்று கேட்டால், ‘வள்ளுவர் மதம்’ என்று சொல்லுங்கள். உங்கள் நெறி யென்னவென்றால், ‘குறள் நெறி’ என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின் உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது. அவ்வளவிற்கு இயற்கைக்கும் அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத் தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும் நம்பிக்கையும் ஏற்படும்.
- ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து சரியான மறுப்பு திருக்குறள்தான்.
- “குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது” என்று இன்று பல பெரியோர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள். ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக்காலத்துக்கும் குறளாசிரியரின் பெரும்பாலான கருத்துக்கும் ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லா விட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள் வதைக் கொண்டு விலக்குவதை விலக்கலாம்.
- திருவள்ளுவர் காலம் பொதுவுடைமைக் காலமோ சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொதுவுடைமைக்காரராகவே விளங்குகிறார். அதனால் தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார்.
- குறளுக்கு இதுவரை கண்ட உரைகள் பல அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப கண்டவையாகவே காணப்படுகின்றன. ஆதலால், ஜாதி மத கடவுள் உணர்ச்சி கடந்து, இயற்கை உணர்ச்சியோடு பகுத்தறிவைக் கொண்டு நடுநிலையில் நின்று உரை கண்டால், அவ்வுரை மூலம் திராவிடர் கழகம் விரும்பும் கருத்துக்களைக் காணலாம். ஆதலால் குறளைப் போற்றுங்கள்! குறளைப் படியுங்கள்! குறள் உள்ளத்தைக் காணுங்கள்!
- எனவே, ஏப்ரல் 12ஆம் தேதியை குறள் நாளாகக் கொண்டாடுங்கள் என்று வேண்டிக் கொள் கிறேன்.
- இலவசமாய் வழங்கப் போகிறார் என்றால், இவர்கள் யாவரும் அவர்களுடைய கோட்பாடு களுக்கு ஏற்ற முறையிலும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் அவர்களுடைய ஆதிக்கத்துக்கு ஏற்ற முறையிலும், உரைகள் – அர்த்தங்கள் புகுத்து வதற்குமேயல்லாமல், குறளின் உண்மையான தத்துவத்தை அதாவது வள்ளுவரின் உள்ளத்தை மக்கள் அறிந்து, அதன்வழி நடந்து, நன்மக்களாய் வாழ்வதற்காக அல்ல.
- ஒரு பெரிய மளிகைக் கடையிருந்தால், “இந்த ஊரிலேயே இதுதான் பெரிய மளிகைக் கடை. இங்கு சென்றால் தேவையான எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளலாம். யார் யாருக்கு எது எது தேவையோ, அதெல்லாம் ஏராளமாய் அங்கே இருக்கிறது. உனக்கு வேண்டுமானால் நீ போய் வாங்கிக் கொள்” என்று மளிகைச் சாமான் தேவைப்பட்ட ஒருவனுக்குக் கூறுவதுபோல, மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய யாவும் ஏராளமாய் குறளில் இருக்கிறது என்கிற அளவில்தானே ஒழிய அந்தக் கடையில் இருப்பதெல்லாம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதல்ல. அது போலவேதான். நான் குறளை நாடெங்கும் எடுத்துக்காட்ட முற்பட்டிருப்பதும், என்னைச் சார்ந்த கழகத் தோழர்கள் குறளைப் பற்றிய பிரச்சாரம் செய்வதுமாகும்.
- குறளுக்குள் கடவுள், மதம், ஜாதி, மோட்சம், முன்ஜென்மம் என்பவை போன்ற சொற்கள் இல்லவே இல்லை.
- ஆரியத்தை – மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கின்றது.
- திராவிடர்களுக்கு நீதி நூல் ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது திருக்குறளைத் தவிர வேறில்லை என்பதாக உறுதி கொண்டு, ஆரிய மத புராண இதிகாச நூல்களாகிய இராமாயணம் – கீதை – பாரதம் – புராணம் ஆகிய வைணவ, சைவ மத நூல்கள் ஆகியவற்றை அறவே ஒழித்துவிட வேண்டும். அவற்றை நாம் மதித்தல் கூடாது என்கிற உறுதிப்பாடு, நாட்டு மக்களுக்கு உண்டாக வேண்டும்.
- குறள் எப்படி மனுநீதிக்கு மறுப்பு நூல், குறள் எப்படி ஆரியத்திற்கு எதிர்ப்பு நூல், குறள் எப்படி பார்ப்பனியத்துக்கு சாவு மணி அடிக்கும் நூல் என்பது இதுகாறும் விளக்கப்பட்டது. இனி குறள் கருத்துகள் இந்நாடெங்கணும் பரப்பப்பட வேண்டிய அவசியத்தைக் கவனிப்போம்.
- குறளுக்கு சாற்றுக்கவி தந்த சங்கப் புலவர்கள் பலர் ஆரியக் கருத்தைக் கண்டிக்கவே குறள் எழுதப் பட்டது என்பதை தெள்ளத் தெளியக் கூறி யுள்ளார்கள்.
- குறள் பாடிய வள்ளுவனாரையும், எங்கோ நள்ளிரவில் ஒரு சத்திரத்தில் ஒரு புலைச்சிக்கும் ஒரு பார்ப்பானுக்கும் நேரிட்ட கள்ள புணர்ச்சியில் தோன்றிய பிள்ளையாக்கி, அதன் மூலம் அவரை சண்டாளராக்கி, அவருடைய வாக்குக்கு மதிப்பில்லாமற்படி செய்து விட்டார்கள். ஆரியத்தைக் கண்டித்தார் என்பதற்காகவே அவரைச் சண்டாளராக்கி விட்டார்கள் இச்சதிகார ஆரியர்கள்.
- 1330 பாட்டுகளிலும் ஓர் இடத்திலாவது ‘இந்து’ என்ற சொல் காணப்படவே யில்லை.
(பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட
‘திருவள்ளுவர் 2050 ஆண்டுகள் அடைவுகள்’ நூலிலிருந்து)
பெரியார் முழக்கம் 07112019 இதழ்