சீமான், விளம்பர விரும்பி… கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்!” – கொளத்தூர் மணி
நன்றி:- ஜூனியர் விகடன்
`ஆமாம், நாங்க தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இந்திய ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த தமிழின துரோகி ராஜீவ் காந்தியை, தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தக் கடும் சர்ச்சைப் பேச்சு தான் தமிழக, ஏன் இந்திய அரசியலில் ஹாட் டாபிக்.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரும், சீமானின் அரசியல் முகம் அறியாத கால கட்டத்திலேயே தனது இயக்கத்தின் கூட்டங்களில் மேடையேற்றிப் பேச வைத்தவருமான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்.
“உங்களுக்கும் சீமானுக்குமான தொடர்பு எப்படி உருவானது?”
“திரைப்பட வாய்ப்பு தேடி கிராமங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கும் அடைக்கலம் கொடுப்பார் கவிஞர் அறிவுமதி. அப்படி வந்தவர் தான் சீமான். 2001 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொடக்க விழா மாநாடு சென்னையில் நடத்தினோம். அதில் பேச, அறிவுமதி வருவதாக இருந்தது. ஆனால், அவரால் வர இயல வில்லை. சீமானை அனுப்பி வைத்தார். மேடை ஏறிய சீமான், பெரியாரிய கொள்கைகளைத் திறம்படப் பேசினார். நட்பு உருவானது. தொடர்ந்து அவரை மேடை ஏற்றினோம்.”
“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் சீமானுக்கும் நேரடி தொடர்பு இருந்ததா?”
“அப்படி இருந்ததாகத் தெரிய வில்லை. 2008 இல் விடுதலைப்புலிகளின் ஊடகவியல் பிரிவு சார்பில் திரைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்பம் தெரிந்த ஓர் இயக்குநர் வேண்டும் என என்னிடம் கேட்டார்கள். சீமானைப் பரிந்துரைத்தேன். அதே போல, விடுதலைச் சிறுத்தைகளின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் சீமானையே பரிந்துரைத்துள்ளார். அதையடுத்தே விடுதலைப்புலிகள் ஊடகவியல் பிரிவினருக்குப் பயிற்சியளிக்க ஈழத்துக்குச் சென்றார் சீமான். 10 நாள் பயிற்சி முடிந்து திரும்பி வரும் போது, ஊடகவியல் பொறுப்பாளர் சேரலாதனிடம் ‘நான் பிரபாகரனைப் பார்க்க வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளார்.
அன்றைய தினம், புலிகளின் ராணுவக் கல்லூரி பட்டமளிப்பு விழா. அதற்காகத் தலைவர் பிரபாகரன் புறப்பட்டுக் கொண்டிருந்த போது சீமான் சந்தித்துள்ளார். சீமான் நுழைவாயிலில் சென்று வெளிவருவதற்கு 12 நிமிடம் தரப்பட்டது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே தலைவரைச் சந்திக்க முடியும். இதை வைத்துப் பார்த்தால், நான்கு நிமிடங்களுக்கு மேல் அவர் தலைவருடன் கழித்திருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் மட்டுமே எடுத்திருக்க முடியும். அதனால், ‘தலைவருடன் ஆமைக்கறி தின்றேன்’, ‘போர்க்கப்பலில் அரிசி மூட்டையில் தலைவரோடு அமர்ந்து போர்ப்பயிற்சி எடுத்தேன்’ என்று சீமான் சொல்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை.”
“திராவிட இயக்கங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே சீமான்?”
“திராவிட இயக்கங்களுடன் முரண்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை, அவர் இதுவரை சொல்ல வில்லை. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் உண்மையாகச் செயல்படக் கூடியவர். ஈழத்தமிழர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை, சீமானால் ஜீரணிக்க முடிய வில்லை. அவரை ஈழத் தமிழர்களிடமிருந்தும், தமிழக தமிழர்களிடமிருந்தும் பிரிப்பதற்காக திராவிட எதிர்ப்பு ஆயுதத்தைத் தூக்கியிருக்கலாம் என்று கருதுகிறேன்.”
“சீமான், ‘நாங்கள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம்’ என்று பேசியிருப்பது…”
“தற்போது இதைப் பேசியிருப்பது தேவையற்றது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, மாநிலக் கட்சிகளே இல்லாமல் அழித்தொழிக்கும் வேலையைச் செய்கிறது, வரலாற்றைத் திரிக்கிறது. புதிய கல்விக்கொள்கையைப் புகுத்துகிறது. மொழியை அழித்து இந்தி திணிப்பு செய்கிறது. இந்தத் தருணத்தில் அதிகாரமற்ற காங்கிரஸை எதிர்க்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? சீமான் ஒரு விளம்பர விரும்பி. கைத்தட்டலுக்காக இப்படிப் பேசுகிறார்.”
“சீமான் பேச்சால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழுவர் விடுதலையில் பாதிப்பு ஏற்படுமா?”
“ராஜீவ் காந்தியின் மனைவியும் மகனும் ‘சட்டப்படி விடுதலை செய்வதில், எங்களுக்கு எந்த ஓர் ஆட்சேபனையும் இல்லை’ என்று சொல்லிய பிறகும், நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தும் பா.ஜ.க அரசு அவர்களை விடுதலை செய்யவில்லை. ஆகையால், சீமான் பேச்சால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இப்படிப் பேசியிருப்பது சரியல்ல. தற்போது மதுரை உயர் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தடை நீட்டிப்பு தீர்ப்பாயம் வரும் சூழ்நிலையில் அதற்கும் இடையூறு ஏற்படலாம்.”
“உண்மையில் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றார்களா?”
“தலைவர் பிரபாகரன், ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று சொன்னார். ‘துன்பியல் சம்பவம்’ என்றதற்காக ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்களின் பிரதிநிதிகள் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.”
நன்றி :- சே.பிரபாகரன் பெரம்பலூர்