தேசத் துரோகச் சட்டம் – தேசத்துக்கு அவமானம்!
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோகச் சட்டம் கருத்து உரிமையைப் பறிக்கிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் வைகோ மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்தது. கலைஞர்கள், ஆய்வாளர்கள் என்று 49 பேர் பிரதமருக்கு, கும்பல் கொலையைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கடிதம் எழுதிய ஆளுமைகள் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதனால், பழமையான அந்தக் காலனிய சட்டத்தின் மீது மறுபடியும் வெளிச்சம் விழுந்திருக்கிறது. தேசத் துரோகச் சட்டமானது அரசியல், கலாச்சார ரீதியான எதிர்ப்பை ஒடுக்கு வதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நுழைக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கையை அல்லது வெறுப்பைப் பரப்புவதைக் குற்றமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காந்தி, பால கங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் மீது தேசத் துரோகச் சட்டம் பாய்ந்திருக்கிறது. வைகோவுக்கு எதிராக மட்டுமல்ல, சமீப காலம் வரை அது தொடர்ச்சியாகப் பலர் மீது பாய்ந்திருக்கிறது. அணுஉலை எதிர்ப்பாளர்கள், ஒரு கேலிச் சித்திரக்காரர், தங்கள் நிலத்தைப் பெருநிறுவனங்கள் எடுத்துக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கற்பலகைகள் மீது அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் செதுக்கித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த ஜார்க்கண்டின் கிராமம் ஒன்றின் பூர்வ குடியினர் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
பொன்னான வாய்ப்பு
ஆனால், பலராலும் வெறுக்கப்படும் இந்த காலனியச் சட்டம் சுதந்திர இந்தியாவில், அதுவும் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும் எப்படித் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது? இதற்கான விடை நாடாளுமன்றம், அதைப் போலவே நீதித் துறை இரண்டின் கூட்டுப் பங்களிப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அரசமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களின்போது, பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் ‘நியாயமான கட்டுப்பாடு’ என்ற பெயரில் தேசத் துரோகச் சட்டத்தை அறிமுகப்படுத்த சிலர் முயன்றனர். ஆயினும், மற்ற பல உறுப் பினர்களால், அதுவும் சுதந்திரப் போராட்டத்தின் போது அந்தச் சட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப் பட்டவர்களால், எதிர்ப்புக்குள்ளாகியதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்தச் சட்டமானது தனது நாடாளுமன்றத்தால் விரைவில் தூக்கியெறியப் படும் என்று சில ஆண்டுகள் கழித்து நேரு கூறினார். எனினும், அது நடக்கவே இல்லை. ஆனால், 1962-ல் தேசத் துரோகச் சட்டத்தை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குவது குறித்த ஒரு வழக்கு இந்தத் தவறைச் சரிசெய்வதற்கான பொன்னான வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்துக்கு அமைந்தது.
அந்தச் சமயத்தில், தேசத் துரோகச் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என்று ஏற்கெனவே இரண்டு உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தன. ஆயினும், உச்ச நீதிமன்றம் தனக்கான மாபெரும் வாய்ப்பைத் தவறவிட்டது. உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைத் தள்ளுபடியும் செய்து, தேசத் துரோகச் சட்டம் அரசமைப்புப்படி செல்லும் என்று நிறுவியது. எனினும், உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டப் பிரிவின் எல்லையைக் குறுக்கவும் செய்தது; ‘பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிக்கக்கூடிய அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சு அல்லது கருத்துக்கு மட்டுமே தேசத் துரோகம்’ என்று எல்லை சுருக்கப்பட்டது. மற்ற சூழல்களில், ஒருவர் தனக்குப் பிடிக்காத பேச்சாக இருந்தால் ஒன்று அதைப் புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், பதிலுக்குத் தானும் பேச வேண்டும்; அப்படிச் செய்வதற்கு நேரமும் சந்தர்ப்பமும் இல்லையென்றால் – அதாவது உடனடியாகக் கலவரம் ஏற்படும் சூழல்களில் – பேச்சு சுதந்திரத்தை அரசு கட்டுப் படுத்துவதற்கு உரிமையுண்டு. இதைத் தொடர்ந்த பிற்காலத்திய தீர்ப்புகள் இதையே மேலும் மேலும் மெருகேற்றின. புரட்சிகரமான பேச்சுகளை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது என்றும்கூட சுட்டிக்காட்டின; அது எதைத் தடுக்கிறது என்றால், வன்முறையைத் தூண்டிவிடுவதைத்தான். அதாவது, எப்போது வேண்டுமானாலும் வன்முறை வெடிக்கலாம் என்பது போன்ற சூழல்களை.
பெரிய இடைவெளி
பிரச்சினை என்னவென்றால், தேசத் துரோகச் சட்டப் பிரிவில் என்ன எழுதியிருக்கிறதோ அதற்கும், அதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எப்படிப் புரிந்துகொண்டு சுருக்குகின்றனவோ அதற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. ‘அவநம்பிக்கை’, ‘வெறுப்பு’ போன்ற சொற் களெல்லாம் தெளிவற்றவை, அவற்றுக்கு விரிவான பொருள் உண்டு; அரசாங்கத்தை விமர்சிக்கும் எந்தப் பேச்சுக்கும் அது பொருந்தக்கூடும்.
தெளிவற்ற, விரிவான சட்டப் பிரிவுகள் காவல் துறையால் தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றன. கூடவே, உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளும் கீழே உள்ள நீதிமன்றங்களுக்குப் போய்ச்சேர்வதில்லை. ஆக, இதற்கான பதில் என்னவென்றால் பேச்சுரிமை, கருத்துரிமையை அரசமைப்பின்படி உறுதிசெய்யும்வகையில் தேசத் துரோகச் சட்டத்தைப் புரிந்துகொள்வது அல்ல, அதை ஒட்டுமொத்தமாக நீக்குவதுதான். இதுதான் உச்ச நீதிமன்றம் 1962-ல் தவறவிட்ட வாய்ப்பு, அதை இன்னொரு முறை சரிசெய்யும் என்று நம்புவோம்.
சமீபத்தில் ஒரு உரையொன்றில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் குப்தா தேசத் துரோகச் சட்டத்தின் பிரதானமான பிரச்சினைகள் பலவற்றைப் பற்றிப் பேசினார்; நவீன ஜனநாயகத்தில் அந்தச் சட்டத்தின் பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார். பிரிட்டிஷ் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது போலவே தேசத் துரோகச் சட்டம் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் இந்த 2019 கால கட்டத்தில் நீதிபதி தீபக் குப்தாவின் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவையே. பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் தருகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, அரசாங்க மும் மற்ற அதிகார மையங்களும் கடுமையாகவும் துடிப்புடனும் சில சமயம் பண்பற்ற விதத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படவும் சவாலுக்குள்ளாக்கப் படவும் செய்யலாம். மேலும், அரசைத்தான் என்றில்லை; தேசம், தேசியவாதம் போன்றவற்றைக் குறித்து நாம் கொண்டிருக்கும் கருத்துகளும் எல்லா சமயங்களிலும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். அதுதான் பன்மை ஜனநாயகத்தின் சாரம். அது உரையாடலை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பலவந்தத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதைப் போன்ற ஜனநாயகத்துக்கு தேசத் துரோகச் சட்டம் ஒரு தடையாக இருப்பதால், அதை நீக்கியாக வேண்டும்.
கவுதம் பாட்டியா ‘தமிழ் இந்து’ ஏட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
பெரியார் முழக்கம் 17102019 இதழ்