எஸ்.வி. சேகருக்கு ‘ஜு.வி.’ பதிலடி

கேள்வி: ‘இடஒதுக்கீடு அடிப்படையில் 35 மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களை எப்படி 95 மதிப்பெண் எடுக்க வைப்பார்?’ என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளாரே?

கழுகார் பதில் : இடஒதுக்கீடே இல்லாமல், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்த ஆசிரியர்களில் எத்தனை பேர், மாணவர்களை 95 மதிப்பெண் எடுக்க வைக்கின்றனர்? பள்ளிக்கூடம் பக்கமே செல்லாமல் தேங்காய், மாங்காய் விற்கும் ஆசிரியர்களில், நூற்றுக்கு நூறு எடுத்து ஆசிரியர் வேலையில் சேர்ந்த ‘பொதுப் பிரிவினர்’ இல்லவே இல்லையா? தனியார் பள்ளிகள்தான் தரம் வாய்ந்தவை என்று போற்றப்படுகிறது. அத்தகைய பள்ளிகளில் பொதுப் பிரிவினரும் பணியாற்றுகிறார்கள். அந்தப் பள்ளிகளில் எல்லாம் நூற்றுக்கு நூறு வாங்கிக் கொண்டிருக்கிறார்களா?

இடஒதுக்கீடு என்பதன் உண்மையை இன்னும் உணராதவர்கள்போல இங்கே பலரும் நடித்துக் கொண்டிருப்பது வேதனையே. இடஒதுக்கீடு ஒன்றும் பிச்சையல்ல… உரிமை. அதிகாரத்தைக் கையில் குவித்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தையே ஒடுக்கியும் நசுக்கியும் அடிமைகளாக வைத்திருந்தது. ‘இந்திய பாரம்பர்யம்’ என்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், இப்படி அடிமைகளை உருவாக்கியது அந்தப் பாரம்பர்யத்தின் சிறுமை என்பதைப் பற்றி மட்டும் பேச ‘வசதி’யாக மறுக்கிறோம். தெரிந்தோ, தெரியாமலோ நம் முன்னோர்களில் சிலரும் இந்தக் குற்றத்துக்கு உடந்தை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து போட்டுக் கொண்டிருப்பதைத்தான் இப்போது செய்கிறோம். இதிலிருக்கும் குறைபாடுகளைக் களைவதற்குக் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, ‘இடஒதுக்கீடே தவறு’ என்று வாதிடுவதும், அதன் மூலமாகப் படிப்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களை எல்லாம் குறை சொல்வதும் கேவலத்தின் உச்சம்.

‘சமதர்ம சமுதாயம்’ என்று ஏட்டில் எழுதிவைத்து, அரசியல் மற்றும் நாடக மேடைகளில் மட்டும் பேசினால் போதாது.

பெரியார் முழக்கம் 15082019 இதழ்

You may also like...