காந்தி 150 ‘புனித’ நூல்களின் அதிகாரத்தை மறுத்தார்
நான்கு வேதங்கள், உபநிஷத்துகள், புராணங் கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களே இந்து மதத்தின் அதிகாரம் படைத்தவை. இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதே பாமர இந்துக்களின் நம்பிக்கை. இவைகளை ‘மாற்றவே முடியாது’ என்போரே ‘சனாதனிகள்’ (மாற்றவே முடியாது என்று நம்புவோர்) காந்தி தன்னை சனாதனி என கூறிக் கொண்டார். அப்படி கூறிக் கொண்டே “சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி என்னை யாரும் – எனது கருத்துகளிலிருந்து மாற்றிவிட முடியாது” என்று கூறினார். “எனது குழந்தைப் பருவத்தில் புனித நூல்களின் கருத்துகள் எனக்கு வாழ்க்கை யில் பெரிதும் உதவும் என்று கருதினேன். ஆனால் வேதங்களின் கருத்துகள் எனது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்கவில்லை. (The Vedas could not supply that need).
“எனக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டு; ஆனால் அவைதான் இறுதியானவை. கடவுளால் சொல்லப்பட்டவை என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்றார். அப்படியானால் இறுதியான அதிகாரம் படைத்த முடிவு எங்கே இருக்கிறது என்று கேட்டபோது காந்தி, தனது நெஞ்சைத் தொட்டு, “அது இங்கேதான் உறைந்திருக் கிறது” என்றார். அவர் இது குறித்து தனது கருத்தை தெளிவாகவே விளக்கினார்.
“கீதை உட்பட எந்த புனித நூல்களின் கருத்துகள் என்றாலும், அந்த கருத்துகளை எனது மனசாட்சி யோடு பொருத்தித்தான் பார்ப்பேன். எந்த புனித நூல்களாலும் அது எனது மனசாட்சியைவிட மேலானதாக ஆதிக்கம் செலுத்த நான் அனுமதிக்க மாட்டேன். பல நூல்களின் மூல கருத்துகள் உயர்ந்த நோக்கம் கொண்டவை என்று நான் நம்பினாலும், அந்த நூல்களின் கருத்துகள் என்னுள் பாதிப்புகளை உண்டாக்குகின்றன என்றாலும், அந்த கருத்துகள் திருத்தலுக்கு உள்ளாக்கப்பட்டே வெளி வருகின்றன. இந்த புனித நூல்களுக்கு முதலில் தூதர்களும், பிறகு விளக்கம் தர வந்தவர்களும் வெவ்வேறு விளக்கங்களை தந்து விடுகிறார்கள். எந்தக் கருத்தும் கடவுளிடமிருந்து நேரடியாக வந்து சேரவில்லை (Nothing in them comes from god directly)” என்றார் காந்தி.
பெரியார் முழக்கம் 10102019 இதழ்