காந்தி 150 ஜாதி-மத மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்

 

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது ஹென்னிபோலர் என்ற யூதருக்கும் – மில்லிகிரகாம் டவுன்ஸ் என்ற ஸ்காட்லாந்து கிறித்துவப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். காந்தியின் ஜோகன்ஸ்பர்க் நகரி லுள்ள இல்லத்தில் இந்த தம்பதிகள் ஓராண்டு காலம் காந்தியுடன் தங்கியிருந்தனர். பிறகு காந்தி, தனது குடும்பத்துடன் ஃபோனிக்ஸ் நகரத்துக்கு குடியேறியபோது இந்த தம்பதி யினரும் அந்த நகரத்துக்கே குடியேறினர். இது குறித்து காந்தி தனது சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

“தங்களுக்கிடையிலான உறவில் மதங்கள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவை தேவையற்றது என்றே கருதினர். திருமதி போலர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். போலர் ஒரு யூதர். இருவருக்கும் பொதுவான மதம் – ஒழுக்கம் என்ற மதமே” (Their comman religion was the relgion of ethics) என்று எழுதினார் காந்தி. தன்னுடைய மகன் இராமதாஸ், தனது ஜாதிக்கு வெளியே வேறு ஒரு உட்ஜாதியில் திருமணம் செய்து கொள்ள காந்தி அனுமதித்தார். மற்றொரு மகன் தேவதாசை வேறு ஒரு வர்ணத்தைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். தனது ‘தீண்டப்படாத’ சமூகத்தைச் சார்ந்த வளர்ப்பு மகள் இலட்சுமியை ஒரு ‘பிராமண’ இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஜாதிகளுக்கிடையே நடக்கும் திருமணங்களுக்கு காந்தி தனது ஆதரவை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெரியார் முழக்கம் 10102019 இதழ்

You may also like...