சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்
திருச்சியில் நடந்த திசம்பர் 23 தமிழின உரிமை மாநாட்டில் பேசுவதாய் இருந்த உரை… பெரியார் பற்றாளர்களோடு நாமும் பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு.
சுயராஜ்ஜியம், சுதந்திரம் என்ற ஆரவாரங்களுக்கு இடையே 1947 ஆம் ஆண்டே ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கு துக்க நாள் என்று சொன்ன தேசத் துரோகி – இந்திய தேசத் துரோகி, இந்து, இந்தியன் என்ற அடையாளத்தை என்றைக்கும் ஏற்காத (யடட வiஅந யவேi-iனேயைn), சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்பை கொளுத்துங்கள் என்று சொன்ன (ரசயெn யேஒயட), 1947இலேயே படேலின் பாசிச ஆட்சி என்று சொன்ன பெரியாருக்கு வீரவணக்கம். பெரியார் பற்றாளர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த போது பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் ஏற்காத பெரியார் காங்கிரசிலில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். தனக்கென தனித்த வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் தனித்த வரலாற்றுப் பாதையை கடந்த நூற்றாண்டில் உறுதிசெய்த வரலாற்று நிகழ்வு இது. இதனால்தான், இந்துராஷ்டிர கனவு கொண்டோருக்கு பகை உணர்வு பெரியார் மீது ஏற்படுகிறது. அதனால்தான், அவர்கள் பெரியார் சிலையை உடைப்போம் என்கிறார்கள்.
பல தேசம் என்றில்லாமல் ஒரே தேசம்-இந்து தேசம் படைக்க விரும்பும் காவிகளின் கனவும் பெருமூலதனத்தின் பேய்ப் பசிக்கு ஒரே தேசம், ஒரே சந்தை வேண்டும் என்ற கார்ப்பரேட்களின் கனவும் இணையும் புள்ளியில் காவி-கார்ப்பரேட் கூட்டணி ஏற்பட்டுள்ளது. அதன் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. அதுதான் பெரியார் பற்றாளர்களை ஓரணியில் திரட்டியுள்ளது.
“பிரிட்டிஷ்காரன் கையில் இருந்த அதிகாரம் வட நாட்டான், பார்ப்பன, பனியாக்களிடம் போகிறதே” என்று பதைபதைத்த நெஞ்சோடு ஓடி தேய்ந்த பெருங்கிழவன் ஒரே ஒரு குரலாய், தனித்த குரலாய் ஆகஸ்ட் 15ஐ துக்க நாளென சொல்லத் துணிந்தார். டாட்டாவும், பிர்லாவும் பஜாஜூம் மட்டுமல்ல இன்றோ அம்பானியும், அதானியும், அகர்வாலும் என கொள்ளையர் தம் எண்ணிக்கை கூடிவிட்டது. பன்னாட்டுக் குழுமமாய் வளர்ச்சிக் கண்டு நிற்கிறது. அவர் காலத்தே பிரிட்டிஷ்காரன். இன்றோ உலகெங்கும் உள்ள கொள்ளையர் எல்லாம் கூட்டுவைத்துக் கொண்டு பெரியார் நாட்டை வேட்டைகாடாக்கி உள்ளனர். ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே சந்தை என அரைத்துப் பொடியாக்கி கரைத்துவிடப் பார்க்கின்றனர். சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டு உழைப்பை, உழைப்பின் பலனை ஐந்தாண்டில் குலைத்துவிடத் துடிக்கின்றனர்.
இன்னொரு ஐந்தாண்டுகள் இந்த வட்டமிடும் வல்லூறுகளின் ஆட்சி தொடர்ந்தால் காய், கனி, இலை, தழை என்றில்லாமல் மரத்தையே வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்துவிடும். இந்த உடனடி அபாயத்தைத் தடுத்தாக வேண்டும். அதை தடுத்தால் மட்டும் போதாது. வல்லூறுகளுக்கு முடிவு கட்டியாக வேண்டும். இந்த இடத்தில் தான் எதிரிகளை மட்டுமின்றி துரோகிகளையும் விட்டுவைக்காத பெரியாரின் உறுதி நமக்கு தேவைப்படு கின்றது.
பார்ப்பனர்களை மட்டுமின்றி முக்கால் பார்ப்பனர் களையும் அவர் எதிர்த்தார். இன்றோ பனியாக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே பல அரைப் பனியா, முக்கால் பனியா, ஒன்றரை பனியாவாக மாறிப் போயுள்ள கார்ப்பரேட் துரோகிகளை எதிர்க்கும் துணிவை பெரியாரிடம் இருந்து கடன் வாங்கிக் கொள்வோம்.
சாதி ஒழிப்பையும் சுதந்திர தமிழ்நாட்டையும் உயிரினும் இனிய கொள்கைகளாக ஏற்றுப் பெரியார் பாடுபட்டார். ஆட்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் பெரியார் இக்கொள்கைகளில் இருந்து பின்வாங்க வில்லை. இது போலவே சீனத்தின் தந்தை சன் யாட் சென் சீனத்திற்கென்று மூன்று பெரும் கோட்பாடுகளை வகுத்து தந்தார். பிற்காலத்தில் வந்த சீனப் புரட்சியாளர் மாவோ சன் யாட் சென் காலத்துக்குப் பொருத்தமாய் சன் யாட் சென்னின் கோட்பாடுகளை வார்த்தும் வளர்த்தும் நிறைவேற்றினார். அப்போது எதிரிகளிடம் இருந்து மட்டுமின்றி சன்யாட் சென்னின் பெயராலேயே சன் யாட் சென்னின் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருந்த துரோகிகளிடமிருந்து சீனத்தைக் காத்து, சன் யாட் சென்னின் பெருங்கனவாம் புதிய சீனத்தைப் படைத்தார். நாமும் இப்போது தமிழ்நாடின் தந்தை பெரியாரின் பெருங்கனவை நிறைவேற்ற வேண்டிய கடமையை தோளில் சுமந்து நிற்கின்றோம். காலத்துக்கும் சூழலுக்கும் பொருத்தமாய் அவர் கொள்கைகளை வளர்த்து எடுத்து அதை நிறைவேற்றும் புதிய அரசியல் படையாய் எழுந்து நிற்போம்.
– ‘இளம் தமிழகம்’ சார்பில் செந்தில் முகநூல் பதிவு
பெரியார் முழக்கம் 03012019 இதழ்