அண்ணா பல்கலையில் ‘பகவத் கீதை’ ஏன் நுழைகிறது?

இந்திய தத்துவத்தில் கருத்து முதல்வாதம் என்பது வெறும் ஆன்மீக வாதமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக சமூகத்தில் நிலவிய பிற்போக்கு கருத்துகளை, குறிப்பாக வர்ணா சிரமத்தை-கருத்து முதல்வாதம் வலுவாக தூக்கிப் பிடித்தது. வர்ணாசிரமத்தை -சமூகத்தின் பிரிக்க முடியாத அம்ச மாக நிலைநாட்டிட கருத்து முதல்வாதமும் ஏற்றத்தாழ்வான சமூகக் கோட்பாடுகளை முன்வைத்த சட்டக் கோட்பாடுக ளான மனுஸ்மிருதியும் அர்த்தசாஸ்திரமும் ஒன்றுக் கொன்று துணை போயின.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு “தத்துவம்” என்ற பெயரில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனை எடப்பாடி அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது தெளிவு. திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எனும் தகுதியை அ.தி.மு.க. வெகு நாட்களாகவே இழந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாற்றிவிடுவார்களோ என கருதும் அளவிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டணியின் சரணாகதி வேகமாக அரங்கேறி வருகிறது. இந்த சரணாகதியின் தற்போதைய நிகழ்வுதான் பொறியியல் மாணவர்களுக்கு “தத்துவம்” குறித்த பாடத் திட்டங்கள்.

இதில் மாணவர்கள் என்னென்ன படிக்க வேண்டும் என  அண்ணா பல்கலைக் கழகம் முன்வைத்துள்ளது?

வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை.

இதில் பாரபட்சம் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக, பிளேட்டோ மற்றும் பிரான்சிஸ் பேக்கன் ஆகியோரின் படைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் கடும் விமர்சனம் எழுந்ததால் துணை வேந்தர் சூரப்பா, இது கட்டாயம் கிடையாது எனவும் விருப்ப பாடங்கள்தான் எனவும் கூறியுள்ளார். இதன் பொருள் “கட்டாய விருப்பப் பாடம்” என சில கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்ப்பு ஏன்?

இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கு அடிப்படையான காரணம் என்னவெனில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தத்துவம், அதுவும் ஆன்மீகம் தொடர்பான பாடங்கள் ஏன் தேவை என்பதாகும். உலகின் மற்ற பகுதிகளில் இவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளில் பொறியி யல் மாணவர்களுக்கு பைபிள் கற்பிக்கப்படுவது இல்லை; அரேபிய நாடுகளில் கூட பொறியியல் படிப்பில் குர் ஆன் பற்றி போதிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தியாவில் சங் பரி வாரம் தனது பாசிச நிகழ்ச்சி நிரலை திணிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கை களின் ஒரு பகுதியாக இதனை அமல்படுத்துகிறது. அதிமுக அரசாங்கம் துணை போகிறது. இன்னொரு முக்கியமான அம்சம், “இந்திய தத்துவம்” எது என்பது ஆகும். சங்பரிவாரம், ஆன்மீகம் மட்டும்தான் இந்திய தத்துவம் என கூறுகிறது. அதாவது இந்திய தத்துவ கோட்பாடு களில் கருத்து முதல் வாதம் மட்டும்தான் உள்ளது என்பது சங் பரிவரத்தின் அடிப்படைக் கருத்து ஆகும். துரதிர்ஷ்டவச மாக இந்தக் கருத்து திலகரிலிருந்து காந்திஜி மற்றும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை வியாபித்திருந்தது. எனினும் இது உண்மை அல்ல. கடவுள் மறுப்பை உள்ளடக்கிய பொருள் முதல்வாத கருத்துகள் இந்திய தத்துவத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்துள் ளன என்பதை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் ஆணித் தரமாக வரலாற்று உண்மைகள் மூலம் நிரூபித்துள்ளார்.

சங்பரிவாரத்தின் திட்டம் ஆன்மீகத்தை மட்டும் முன் நிறுத்துவதுதான்! அதனால்தான் அந்நிய தேசங்களின் கருத்து முதல்வாதிகளான பிளேட்டோ மற்றும் பிரான்சிஸ் பேக்கனை முன்நிறுத்துகின்றனர். பொருள் முதல்வாதத்தை முன்வைத்த டெமாக்கிரட்டஸ் அல்லது எப்பிகூரஸ் அல்லது பாயர்பாக் ஆகியோர் அவர்களின் பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். இந்தியாவின் சமரசமற்ற பொருள்முதல்வாத போராளிகளான லோகாயதவாதி களையும் இந்திய தத்துவ வாதிகள் என இவர்கள் அங்கீகரிப்பது இல்லை. அதே போல் பின்னர் வேதங்களிடம் சரண் அடைந்தாலும் மீமாம்சம், சாங்கியம், நியாயம், வைசேசிகம் ஆகிய இந்திய தத்துவ கோட்பாடுகளும் பொருள் முதல்வாதம் பற்றி வலுவாகப் பேசின. மேலும் தொடக்க கால பவுத்தம் மற்றும் சமணம் கூட வேதங்களை மறுத்து பொருள் முதல்வாதம் மற்றும் கடவுள் மறுப்பு பற்றி வாதங்களை முன்வைத்தன.

மநு கூறுகிறார்:

“ஸ்ருதி எனில் வேதங்கள் என அறியப்பட வேண்டும். ஸ்மிருதி எனில் சட்ட கோட்பாடுகள் என அறியப்பட வேண்டும். இவை இரண்டுமே சட்டத்தின் மூலக்கூறுகள் ஆகும். இவற்றை மாற்றுக் கருத்து மூலம் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது. தர்க்கத்தின் வலிமையில் நம்பிக்கை கொண்ட எவன் ஒருவன் வேதத்தையோ அல்லது சட்டக் கோட்பாடு களையோ உதாசீனப்படுத்துகிறனோ அவன் நாத்திகன் என வகைப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய மனிதன் பிராம ணனாக இருந்தாலும் அவன் சமூகத்திற்கு வெளியே தூக்கி எறியப்பட வேண்டும்.” மனித குலம் பிராமணர்கள்/சத்திரியர்கள்/வைசியர்கள்/சூத்திரர்கள் என நால்வர்ணத்தை கொண்டிருக்கிறது என கூறும் மனுஸ்மிருதி பிரம்மனின் எந்தெந்த பாகத்திலி ருந்து எந்த வர்ணம் உருவானது என்பதையும் கூறுகிறது. சூத்திரர்களின் பிறவிக் காரணமே ஏனைய மூன்று பிரி வினருக்கு சேவை செய்வதுதான் எனவும் குறிப்பிடுகிறது. ஏனெனில் மற்ற மூன்று பிரிவினரும் இரண்டு முறை பிறப்பவர்கள்; ஆனால் சூத்திரர்கள் மட்டும் ஒரு முறைதான் பிறக்கின்றனர் எனவும் மனுஸ்மிருதி கூறுகிறது.

சூத்திரர்கள் தாங்கள் நினைத்தாலும் தமது அடிமைத் தளத்திலிருந்து விடுபட முடியாது; ஒரு சூத்திரனின் எஜமான் அவனை விடுதலை செய்தாலும் அது செல்லாது  எனவும் மனு கூறுகிறது. இதனை மேலும் விரிவுபடுத்தி ஆதி சங்கரர் கூறுகிறார்: “வேதங்களைக் கேட்கும் சூத்திரனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”. “வேதங்களை சூத்திரன் கூறினால் அவனது நாக்கு அறுக்கப்பட வேண்டும்; அவன் மனதில் வேதம் இருப்பதாக கருதப்பட்டால் அவனின் உடல் துண்டாக்கப்பட வேண்டும்”. சூத்திரர்களின் உழைப்பால் உருவான உபரி உற்பத்தி முழுவதும் அபகரிக்கப்பட்டது. உடல் உழைப்பு மட்டுமே சூத்திரர்கள் செய்ய வேண்டும் எனவும்; மூளை உழைப்பு அவர்களுக்கு உரித்தானது அல்ல எனவும் சூழல் உரு வாக்கப்பட்டது. மூளை உழைப்பு பற்றி சிந்திக்க இயலாத அளவிற்கு சூத்திரர்கள் உடல் உழைப்பின் மூலம் கசக்கிப் பிழியப்பட்டனர்.

லோகாயதவாதிகளின் சவால்

இந்த கோட்பாடுகளுக்கு எதிராக லோகாயத வாதிகள் சவால் விடுத்தனர். அவர்கள் கீழ்கண்டவாறு எதிர்வாதம் செய் தனர் “சொர்க்கமும் மோட்சமும் வெற்று வார்த்தைகள்”. “விலங்கை பலியிடுவதன் மூலம் அது சொர்க்கத்திற்குச் செல்கிறது என வேதவாதிகள் கூறுகின்றனர். அப்படியானால் அவர்கள் ஏன் தமது தந்தையரை பலியிட்டு சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கக் கூடாது?”.

“மூன்று வேதங்களை உருவாக்கியவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்; வஞ்சகத் திருடர்கள்”. “நீங்கள் வாழும்வரை மகிழ்வாக வாழுங்கள்; கடன் வாங்கியாவது நன்றாக சாப்பிடுங்கள்; உடல் சாம்பலான வுடன் அது எப்படி மீண்டும் திரும்ப முடியும்?” – இந்த பகிரங்க சவால்கள் இயல்பாகவே கருத்து முதல்வாதி களை கோபம் அடையச் செய்தது. எனவே அவர்கள் லோகா யதவாதிகளையும் அவர்களது தத்துவ நூல்களையும் வேட்டையாடினர். அவற்றை அழித்துவிட்டு இந்திய தத்துவம் என்பது ஆன்மீகம் அடங்கிய கருத்து முதல்வாதம் மட்டும்தான் என்றனர். தற்போது, இந்திய தத்துவம் என்ற போர்வையில் ஆன்மிகம் அடங்கிய பிற்போக்கு கருத்துகளை மட்டுமே பொறியியல் மாணவர்களுக்கு போதிப்பதற்கு திட்டமிடப்படு கிறது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்; நிராகரிக் கப்பட வேண்டும்.

தொழிற்புரட்சி ஏன் இந்தியாவில் உருவாகவில்லை?

இந்திய தத்துவம் என்ற பெயரால் கருத்து முதல்வா தத்தை பாடமாக முன்வைப்பது இன்னொரு மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும். தொழிற் புரட்சி ஏன் இங்கிலாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உருவானது? ஏன் இந்தியா அல்லது சீனாவில் உருவாகவில்லை? இந்த  கேள்வியை ஜோசப் நீதம் உட்பட பல அறிஞர்கள் எழுப்பி யுள்ளனர். ஆர்யபட்டா, வராமிஹிரா, பிரம்மகுப்தா போன்ற பல அறிவியல் வல்லுநர்கள் தோன்றிய இந்திய சமூகத்தில் ஏன் தொழிற் புரட்சி நடக்க வில்லை? இந்திய இரசாயன அறிவியலின் பிதாமகரான பி.சி.ரே இந்த கேள்விக்கு பதில் தருகிறார்:

“மனுஸ்மிருதியும் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தம் முன்வைத்த மாயாவாதமும்தான் இந்தியாவில் அறிவியல் தொழில் நுட்பம் வளராததற்கு காரணம் ஆகும்” மனுஸ்மிருதி இறந்தவரின் உடலை தொடுவது தீட்டு என்றது. உடற் கூறு அறிவியலுக்கு இறந்த உடலை அறுத்து ஆய்வு செய்வது அவசியமாகிறது. பிணத்தைத் தொடுவது தடுக்கப்பட்டதால் உடற்கூறு ஆய்வும் மருத்துவ அறிவியலும் இந்திய சமூகத்தில் மரணத்தைத் தழுவின.  ஆதி சங்கரரின் மாயாவாதம் காரணமாக மாய உலகில் எதற்கு அறிவியல் கண்டுபிடிப்பும் ஆய்வுகளும் எனும் போக்கு வலுவாக உருவானது. இதன் காரணமாக பண்டைய அறிவியல் தொழில்நுட்ப அடித்தளத்தின் மீது முன்னேற்றம் இந்தியாவில் உருவாகவில்லை. (சீனாவிலும் இதே காரணம் என்கிறார் ஜோசப் நீதம். புரட்சிக்கு பிறகு அது சரி செய்யப்பட்டது.) ஆகவே பொருள் முதல்வாதத்தின் பின்ன டைவு இந்திய சமூகத்தில் அறிவியலின் மரணத்திற்கும் காரண மாக அமைந்தது. எனவேதான் இந்திய தத்துவம் என்ற பெய ரால் ஆன்மீகவாதத்தையும் கருத்து முதல்வாதத்தையும் பல்கலைக் கழகங்களில் முன்வைப்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும் என வலுவாக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு முற்போக்காளருக்கும் உள்ளது.

– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24.9.2019 ‘தீக்கதிர்’ நாளேட்டில் வெளிவந்த கட்டுரை

பெரியார் முழக்கம் 03102019 இதழ்

 

You may also like...