அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

சென்னை பல்கலைக் கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபா மோகன் என்ற மாணவர். இந்த ஆண்டு தத்துவவியல் துறை யில் ‘பவுத்தம்’ தொடர்பான முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆவார்.

தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்ற நிலையில், அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் “நீங்கள் முறை யாக எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை தரவில்லை. அதனால் உங்களின் சேர்க்கையை இரத்து செய்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே பல்கலையில் முதலில் படித்த காரணத்தால் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார்.

தன்னுடைய சேர்க்கை இரத்து செய்யப்பட்டதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்றும் கிருபா மோகன் கூறியுள்ளார்.

கிருபா மோகன் தற்போது அம்பேத்கார் – பெரியார் வாசிப்பு வட்டத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே. ஆனால் அவர் இளங்கலை படிக்கையில் அவ்வாசகர் வட்டத்தின் செயலாளராக பணியாற்றியபோது, பல்கலைக்கழகத்திற்கு தருண் விஜய் மற்றும் இல. கணேசன் வருகை புரிந்தபோது போராட்டங்கள் நடத்தப் பட்டன. மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

ஒரே பல்கலைக் கழகத்தின் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றல் ஆகும் போது மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. ப்ரொவிஷனல் சர்டிஃபிகேட் மட்டுமே போதும் என்று துறைத் தலைவர் கூறினார். ஆனால் ஆகஸ்ட் 29ஆம் தேதி என்னுடைய சேர்க்கை இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவரே கூறிய தாக கிருபா மோகன் தெரிவித்து உள்ளார்.

 

பெரியார் முழக்கம் 19092019 இதழ்

You may also like...