ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப் படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் பேசினார். பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த நேர்காணலிலிருந்து:

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் என்பது என்ன? இதை எப்படி செயல்படுத்தப்படும்?

இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், உணவுப் பொருள் வழங்கலை எளிமையாக்குவது (ஞடிசவயbடைவைல) என்பதுதான். இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக் கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வேறு பல மாநிலங்கள் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார்கள். யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதை முடிவு செய்து, அவர்களுக்கு மட்டும் பொருட்களைக் கொடுப்பார்கள். இதுதான் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டமே செயல்பட வில்லை என்பதுதான். இந்த ஏற்றத் தாழ்வுகளைக் களையத் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கும்போது 2013ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேருக்கும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியம், மானிய விலையில் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும். அரிசியும் கோதுமையும் மத்திய அரசு தன் உணவுத் தொகுப்பிலிருந்து கொடுத்துவிடும். யார் யார் பயனாளிகள் எனக் கண்டறிந்து இதனை மக்க ளுக்கு விநியோகிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே எல்லோருக்கும் ரேசன் பொருட்களை வழங்கிவந்த நிலையில், 50 – 75 சதவீதம் பேருக்கே உணவு தானியத்தை வழங்கும் இந்தத் திட்டம் முரண்பாடாக அமைகிறது. இந்த நிலையில், தமிழக அரசு தன் பாணியில் எல்லோருக்கும் உணவு தானியங்களை விநியோகிக்க விரும்பியது. அதையே தொடர விரும்பியது. ஆனால், மத்திய அரசு தங்கள் திட்டப் படிதான் உணவு தானியங்களை வழங்குவோம் எனக் கூறியது. அதாவது கிராமப்புறங்களில் உள்ள ரேசன் கார்டுகளில் பாதி அளவுக்கும் நகர்ப் புறங்களில் 75 சதவீதம் பேருக்கும்தான் உணவு தானியங்களை வழங்குவோம். நீங்கள் விநியோகித்துக் கொள்ளுங்கள் என்றது மத்திய அரசு.

இந்த தானியங்களைப் பெற்றுக்கொள்ளும் தமிழக அரசு இரண்டு பிரிவுகளாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது:

  1. தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசு சொல்வதைப் போல ஒரு நபருக்கு ஐந்து கிலோ என்று பார்த்து வழங்காமல் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோ கொடுத்து விடுகிறார்கள்.
  2. மத்திய அரசு அந்த்யோதயா அன்னயோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு 35 கிலோ தானியம் மத்திய அரசு வழங்குகிறது. அதனை அப்படியே கொடுத்து விடுகிறது. மாநில அரசு எல்லோருக்கும் உணவு தானியங்களைக் கொடுப்பதால், மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் அரிசி போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே வெளிச் சந்தையிலிருந்து வாங்கி, அதனை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகிறது. ஆனால், இப்போது எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இணையும்போது பல சிக்கல்கள் வரும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், இந்த ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு வலியுறுத்தப்பட்டிருந்ததா?

அவர்கள் துவக்கத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து மட்டும்தான் பேசினார்கள். பிறகு ஆதார் அறிமுகமான பிறகு, அதையும் ரேசன் கார்டுகளையும் இணைக்க வேண்டுமெனக் கூறினார்கள். அப்படி இணைக்கப்பட்ட பிறகு சில வசதிகள் கிடைத்தன. அதாவது, ஆதார் எண்ணை வைத்து யாருடைய கார்டையும் அடையாளம் காண முடியும். அவர்கள் என்ன பொருட்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும். இந்த வசதியை வைத்துக்கொண்டு, நாட்டின் எந்த ஒரு கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்பதை ஒரு திட்டமாக அவர்கள் முன்வைத்தார்கள். இந்தத் திட்டம் இப்போது நான்கு மாநிலங்களில் செயலில் இருக்கிறது. இன்னும் சில மாநிலங்களில் வரவிருக் கிறது. ஏப்ரல் 2020க்குள் எல்லா மாநிலங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க நினைக்கிறார்கள்.

பொது விநியோகத் திட்டம் நன்றாக இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு வருபவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம். மாறாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் செல்பவர்கள் தமிழகத்திலிருப்பதைப் போல பயன்களைப் பெற முடியாது. இது ஒரு பிரச்சனை தானே..

அது ஒரு சிக்கல்தான். வேறு பெரிய பிரச்சனை களும் இருக்கின்றன. அவையெல்லாம் யோசிக்கப் பட்டனவா இல்லையா எனத் தெரியவில்லை.  முதலாவதாக, இந்த உணவு அட்டை என்பது குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் புலம் பெயர்ந்து வரும்போது தனி நபர்களாகத்தான் புலம் பெயர்கிறார்கள். குடும்பத்தை சொந்த ஊரில் விட்டுவிட்டு, வேறு ஊருக்கு சென்று வேலை பார்த்து பணம் அனுப்புகிறார்கள். அம்மாதிரியான சூழலில் அந்த அட்டை யார் வசம் இருக்கும்? அந்த அட்டையை புலம் பெயர்பவர் எடுத்து வந்தால், குடும்பம் என்ன செய்யும்? குடும்பத்தின் வசம் அட்டை இருந்தால், வேறு மாநிலத்திற்குச் சென்று வேலை பார்ப்பவர் எப்படி இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்?

இரண்டாவதாக, ஆதார் அட்டையோடு ரேசன் அட்டை இணைக்கப்படும்போது, குடும்பத் தலைவரின் எண் இணைக்கப்படுகிறது. அவர் இல்லாதபோது, அந்தக் குடும்பம் எப்படி ரேசன் பொருட்களைப் பெறுமெனத் தெரியவில்லை. மூன்றாவதாக, ரேசன் கடைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் பலன் பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டு பொருட்கள் வருகின்றன. திடீரென ஒரு ஐநூறு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு கடையில் சென்று பொருள் கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும்? அரசிடம் எழுதிக் கேட்டு, அடுத்த மாதம் வாங்கித் தரலாம். ஆனால், அடுத்த மாதம் அந்தத் தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்திருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்துகொண்டேயிருப்பார்கள். இதை எப்படி கணக்கில் வைப்பது? எப்படி கிடங்கில் அதற்கேற்றபடி உணவுதானியங்களைச் சேமித்து வைப்பது? இதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.  இன்றைக்கு தொழிலாளர்கள் வந்து கேட்டால், நாளை இந்திய உணவுக் கழக கிடங்கிலிருந்து உணவு தானியத்தை அனுப்பிவிட முடியுமா? இதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறதா?

இதைவிட முக்கியமான விஷயம், இந்தத் திட்டத்தை செயல்படுத்த இணைய இணைப்பு வேண்டும். பல இடங்களில் இப்போதே ஆதார் குறியீட்டை இயந்திரங்களால் படிக்க முடியவில்லை. இப்போதும்கூட பல கிராமங்களில் போன் பேசவே மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே இணைய இணைப்பைப் பற்றி எப்படி யோசிப்பது? இது தவிர, வேறொரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. அதாவது, உணவு தானிய ஒதுக்கீட்டில் உள்ள பிரச்சனை. உதாரணமாக, பீகாரைச் சேர்ந்த ஒருவர் இங்கே உணவு தானியம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். ஆகவே பீகாருக்கு உணவு தானியம் ஒதுக்கீடு செய்யும்போது, அவருக்கான அளவைக் குறைத்துவிட்டு, தமிழகத்திற்கு அதனை அதிகரித்துத் தரவேண்டும். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள்? ஒரே மாதிரிதான் விநியோகிக்க வேண்டுமென்றால் தமிழகம் என்ன செய்யும்?

இந்தத் திட்டத்தினால், அந்தந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் வழக்கம்போல பொருட்களை வாங்குவதில் பிரச்சனை வருமா?

பெரிதாக பிரச்சனை வராது. ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். ஆனால், ஒரே நாடு – ஒரு கார்டு திட்டத்தில் இணைந்து சில நாட்களுக்குப் பிறகு, எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் விநியோகிக்க வேண்டுமெனக் கூறினால், தமிழ்நாடுபோல கூடுதலாக உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வரும் மாநிலங்கள் என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பெரும் அளவில் நிதி வழங்குகிறது. நாங்கள் சொல்வதுபடி செய்தால்தான் நிதியளிக்க முடியும். இல்லாவிட்டால் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினால், ஏற்கனவே நிதிச் சுமையில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் என்ன செய்ய முடியும்?

நிதி ரீதியான சிக்கல்களைத் தவிர, வேறு ஏதாவது சிக்கல்கள் இந்தத் திட்டத்தால் இருக்கிறதா?

மானியங்களைக் கொடுக்க ஏற்படும் சிக்கல்தான் பெரிய சிக்கல். ஏனென்றால், கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூலாகவில்லை. இது மத்திய அரசை மட்டும் பாதிக்காது. மாநில அரசுகளையும் பாதிக்கும். மாநில அரசுகள் வசூலிக்கும் வரியும் குறையும். மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் வருவாயும் குறையும். மேலும், மத்திய அரசு பல வரிகளை, செஸ் (ஊநளள) எனப்படும் சிறப்பு நிதியாக வசூலிக்கிறது. அவற்றை மாநிலங்களோடு பிரித்துக்கொள்ளத் தேவையில்லை. இப்போது ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றார்கள். அதையும் மாநிலங்களோடு பகிரத் தேவையில்லை. இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்துகொண்டே போகிறது. ஆகவே மாநில அரசுகளால் புதிதாக எதையும் செய்வதற்கான இடமே இருக்காது.

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அறி முகப்படுத்தினால், எதிர்காலத்தில் எல்லோருக்குமான ரேசன் திட்டம் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால், வசதியானவர்களுக்கு எதற்காக ரேசன் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது

உணவுப் பொருட்களைக் கொடுக்கும்போது யாருக்கு அவற்றைக் கொடுப்பது என அடையாளம் காண்பது சிக்கலான வேலை. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வறுமைக் கோட்டை எப்படி கணக்கிடுவது என்பதே தெரியாது. காரணம் வருவாயைப் பற்றி விவரங்கள் நம்மிடம் துல்லியமாக இல்லை. இந்தியாவில் இப்போதுவரை வருவாயைப் பற்றிய புள்ளிவிவரங்கள் கிடையாது. செலவைப் பற்றிய விவரங்கள் மட்டுமே உண்டு. காரணம், பெரும்பாலானவர்கள் அமைப்புசாராத் தொழில் களில் இருக்கிறார்கள். இதனால், செலவுசெய்வதை வைத்து வறுமைக் கோட்டை தீர்மானிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அதனை வைத்து உணவு தானியம் பெறுவதற்கு ஒருவர் தகுதியா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியாது. அதையும் மீறி, ஒரு கோட்டை வைத்து, அதற்குக் கீழ் இருப்பவர் களுக்குத்தான் உணவு தானியம் என்று சொன்னால், தேவையான பலர் விடுபடும் வாய்ப்பு இருக்கிறது. இது பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தேவையில்லாத சிலர் இதனால் பயன் பெறுவார்களே என்று கேட்கிறீர்கள். சமுதாய அக்கறை உள்ளவர்கள், ஆட்சியில் உள்ளவர்கள் மேலே சொன்ன இரண்டில் எது மோசமானது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதாவது, தேவையில்லாத சிலர் பயன்பெறுவது மோசமானதா, அல்லது தேவையுள்ள சிலருக்கு பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் பட்டினி கிடப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒரு மக்கள் நல அரசு பட்டினியில் இருப்பவர் வாடக்கூடாது என்றுதான் நினைக்கும்.

 

பெரியார் முழக்கம் 12092019 இதழ்

You may also like...