ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…????

அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

தேவர் அசுரர் போராட்டங்களை சித்தரிப்பது தான் நமது புராணக் கதைகள். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட திராவிடர்களை, ஆரியர்கள் சூழ்ச்சியின் வாயிலாக அழித்து ஒழித்ததை நியாப்படுத்தும் கதைகளே புராணக் கதைகள். வரலாறுநெடுக இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கேரளத்தின் கதையோ வேறு விதமாக இருக்கிறது. கேரளத்தில் இன்றைக்கு மலையாளிகள் திருஓணம் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

வாமணன் திருமால் வடிவம் எடுத்து அங்கே நல்லாட்சி செய்த மாவேலி யிடம் மூன்று வரங்களை கேட்டான். மாவேலி ஒரு அசுரன். தேவர்களை எதிர்த்தவன். தேவர்களை எதிர்த்த அசுரனை சூழ்ச்சியால் ஒழிப்பதற்காக, வாமணன் என்ற வேடம் எடுத்து, மாவேலி அரசனிடம் எனக்கு மூன்று அடிகளைத் தர வேண்டும் என்று அவன் கேட்டான். மன்னனும் ஒப்புக் கொண்டார். தேவனாகிய வாமணன் முதல் அடியில் உலகம் முழுவதையும் அளந்து விட்டான். உலகம் முழுவதும் அவன் வசமாகிவிட்டது. இரண்டாவது அடியில் விண்ணை அளந்து எடுத்துக் கொண்டான். விண்ணும் அவன் வசமாகிவிட்டது.

மூன்றாவது அடியை எங்கே வைப்பது? மன்னன் மாவேலி, பதைபதைத்துப் போய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்று தன்னுடைய தலையை தாழ்த்தி “மூன்றாவது அடியை என்னுடைய தலையில் வையுங்கள்” என்று கேட்டார். தலையில் அடியெடுத்து வைத்த வாமணன் அப்படியே தலையை பூமிக்குள் அழுத்தி அந்த நேர்மையான அசுர மன்னனை கொன்று விட்டான். சூழ்ச்சிகரமான, கொடூரமான ஒரு படுகொலை. ஆனால், கேரளாவில் இந்த நல்லாட்சி நடத்திய மாவேலியை மக்கள் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் அவர் வருவதாக கருதிக் கொண்டு தங்களது வீட்டு வாசல்களில் பூக்கோலமிட்டு, புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறார்கள். ஆக, அசுரர்களை வரவேற்கும் விதமாக அங்கே திருஓணம் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மஹாவிஷ்ணு அவதாரமெடுத்து நரகாசுரனை அழித்த நாள் யை இங்கே தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் திராவிடனாகிய அசுரனை அழித்த நாள் யை கொண்டாடச் சொன்னது ஆரியம். கேரளாவில், அசுரனை வரவேற்கும் பண்டிகையை நடத்துகிறார்கள் கேரளத்தினுடைய மலையாளத்து மக்கள். ஆக, அசுரர்கள் என்ற தேவர்களினுடைய சுரண்டல்களை தட்டிக் கேட்டவர்களையெல்லாம் சூழ்ச்சிகரமாக, மனசாட்சி இல்லாமல் அழிக்கப்பட்டதை சமூகங்களில் நியாப்படுத்துவதற்காகப் புனையப்பட்டதுதான் இந்த புராணங்களின் கதைகள். இந்து மதம் ஒரே மதம், ஒரே தத்துவம், ஒரே கலாச்சாரம் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அசுரர்களை அழித்ததற்கு கொண்டாடப்படுவது தீபாவளி, கேரளாவில் அசுரர்களை வரவேற்க கொண்டாடப்படுவது திருஓணம் என்று சொன்னால் இது எப்படி ஒற்றைக் கலாச்சாரம் ஆகும்..???

சிந்திப்போம்….!!!

விடுதலை இராசேந்திரன்

You may also like...