அய்.நா. பொதுச் செயலாளருக்கு மனு சிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக!
“சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் – 30 அனைத்துலக காணாமல் ஆக்கப் பட்டோர் நாளில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் ஐ.நா. வுக்கு கோரிக்கை
ஆகஸ்ட் 30 காணாமல் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும் ஐநா மனித உரிமை ஆணையருக்கும் விண்ணப்ப மடல் கொடுக்கப்பட்டது.
இந்த விண்ணப்ப மடலை வழங்கிய குழுவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்ணன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தடயவியல் நிபுணரும் மருத்துவருமான சேவியர், பேராசிரியர் பேச்சிமுத்து ஆகியோர் பங்குபெற்றனர். யுனிசெப் அலுவலக அதிகாரியிடம் சிறிலங்கா அரசப் படையால் காணாமலடிக்கப்பட்ட இருபதாயிரத்தாயிரத்திற்கும் மேலான தமிழர்களின் நிலை என்ன என்பது போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகியும் தெரியவில்லை. காணாமலடிக்கப்பட்டவர்கள் நிரம்பிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. போர் முடிந்த நிலையில் சரணடைந்தவர்களும் குழந்தைகளும் கூட காணாமலடிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அறிக்கைகளில் போர்க்குற்றங்களும் மானிட விரோத குற்றங்களும் செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள 58 ஆவது படைப்பிரிவின் தலைவர் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா அரசு படைத்தலைவராகப் பதவி உயர்வு கொடுத்துள்ளது. இது பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிசேல் பச்செலட் அவர்களும் கவலை தெரிவித்துள்ளார். கண் துடைப்புக்காக காணாமற்போனோர் அலுவலகங்களைத் திறந்து வைத்து உலகை ஏமாற்றிவருகிறது சிறிலங்கா. மேற்படி கருத்துகள் யுனிசெப் அலுவலக அதிகாரியிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பகுதிக்கு நேரில் சென்று வந்த மருத்துவர் சேவியர் அவர்கள் காணாமலடிக்கப்பட்டவர்களின் உறவுகளின் துயரத்தை எடுத்துச் சொன்னார். ”ஒரு தாய் தனது முதல் இரண்டு பிள்ளைகளைப் போரில் இழந்துள்ளார். அது பற்றி குறிப்பிடும்போது அவர் கலங்கவில்லை. ஆனால், தனது மூன்றாவது பிள்ளைத் தன் கண் முன்னே இராணுவத்திடம் சரணடைந்து காணாமலடிக்கப்பட்டோர் பட்டியலில் இருப்பவர் என்று சொல்லும் போதே கடகடவென கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.” என்று ஓர் எளிய எடுத்துக்காட்டின் மூலம் காணாமலடிக்கப் பட்டோரின் உறவுகளின் துயரத்தை எடுத்துச் சொன்னார்.
இனியும் காலந் தாழ்த்தாது சிறிலங்கா அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்பு நிறுத்த வேண்டும் அல்லது சிறிலங்காவுக்கு என்று சிறப்பப் புலனாய்வுத் தீர்ப்பாயம் அமைத்து புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் இக்கோரிக்கையை மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழக சட்டப்பேரவையும் இலங்கையின் வடக்கு மாகாணசபையும் ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
யுனிசெப் அலுவலக அதிகாரி விண்ணப்ப மடல்களைப் பெற்றுக் கொண்டு ஐ.நா.வின் இந்திய அலுவலகத்திற்கு முன் அனுப்புவதாக கூறினார்.
பெரியார் முழக்கம் 0509209 இதழ்