வடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா!

தமிழகமே மோடியின் பக்கம் திரண்டு நிற்கிறது, என்கிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அந்தக் கட்சிக்கு அவர்கள் ஒதுக்கியிருக்கிற சீட்டுகள் 5 மட்டும் தான்.

“இதுவே எங்கள் கட்சிக்கு ரொம்ப ரொம்ப அதிகம்” என்று மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

ஜி.எஸ்.டி. வரியானாலும், புயல், இயற்கை சீற்றப் பேரிடர் நிவாரண நிதியானாலும் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை நடுவண் ஆட்சி தரவில்லை என்று பட்ஜெட் உரையில் பட்டியலிட்டார் முதல்வர் எடப்பாடி!

அரசுகளுக்கிடையிலான உறவுகளைத் தவிர, அ.இ.அ.தி.மு.க.வுக்கும் – பா.ஜ.க.வுக்கும் கட்சி ரீதியாக உறவுகள் கிடையாது என்று நேற்று வரை பேசினார்கள்; பேட்டி அளித்தார்கள்.

பா.ஜ.க.வை நாங்கள் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்று கேட்டவர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் அ.இ.அ.தி.மு.க. எம்.பி. தம்பித் துரை!

இப்போது அதே கட்சியைத் தலையில் தூக்கிச் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். தமிழகம் முழுவதும் தலையில் மோடியைத் தூக்கிக் கொண்டு வரப் போகிறார்கள்.

காவிரிப் பிரச்னையில், நீட் பிரச்னையில், ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னையில், ஜி.எஸ்.டி. வரிப் பிரச்னையில் மேகதாது அணைப் பிரச்னையில் என்று தமிழ்நாட்டு மக்களை ‘வஞ்சம் தீர்த்த’ மோடியை தலையில் சுமந்து வருகிறோம். மோடியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர, வாக்களிப்பீர் என்று கூவிக் கூவி மோடியை சுமந்து வரப் போகிறார்கள்.

இந்தக் காட்சிகளை கைதட்டி சிரித்து சிரித்து ரசிக்க வாக்காளர்களும் காத்திருக்கிறார்கள். ஆமாம்! வடிவேலு படங்கள் வந்து வெகு நாளாகிவிட்டது மக்கள் ‘காமெடிக்காக’ ஏங்கித் தவித்து நிற்கிறார்கள்.

பெரியார் முழக்கம் 07032019 இதழ்

You may also like...