இதுதான் மத ஊர்வலமா? இந்து முன்னணியே பதில் சொல்!

‘மதம் அன்பைப் போதிக்கிறது; இந்து மதம் போல் சகிப்புத்தன்மையுள்ள வேறு மதம் இல்லை’ என்று பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களும் ‘வாய்கிழிய’ப் பேசுகிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் எப்படி நடக்கின்றன? ஒரே நாளில் ஏடுகளில் வெளி வந்த சில செய்திகளைத் தொகுத்து தருகிறோம்.

“அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு ஒரு இலட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10,000 போலீசார் இந்தப் பணி யில் உள்ளனர். அதிலும் சிலைக்கு ஒரு போலீசார் என்று 24 மணி நேரமும் ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.”            – ‘தினத்தந்தி’, செப். 3

“ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் அனுமதியின்றி 5 அடி உயர விநாயகன் சிலை நிறுவப்பட்டிருந்தது. போலீசார் அந்த விநாயகர் சிலையை அகற்றினர். உடனே இந்து முன்னணி மாநில செயலாளர் பரமேசுவரன் தலைமையில் இந்து முன்னணியினர் மீண்டும் சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று சி.டி.எச். சாலையில் மறியல் செய்தனர். செய்தி அறிந்து போலீசார் விரைந்து வந்து 28 இந்து முன்னணி பொறுப்பாளர்களை கைது செய்தனர். பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.”              – ‘தினத்தந்தி’ செப். 3

“திண்டுக்கல் பாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் விநாயகர் சிலை ‘பிரதிஷ்டை’ செய்ய இந்து முன்னணியினர் அனுமதி கேட்டனர். காவல்துறை அனுமதி தரவில்லை. ஆனால் தடையை மீறி இந்து முன்னணி ‘பிரதிஷ்டை’ செய்ததால் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைக் கண்டித்து இந்து முன்னணியினர் மற்றொரு விநாயகர் சிலையை ‘பிரதிஷ்டை’ செய்ய ஊர்வலமாக வந்தனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.”     – ‘தினத்தந்தி’ செப். 3

“தஞ்சையில் நிர்மலா நகர் பகுதியில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பதில் இரு ஜாதிப் பிரிவினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதேபோல் கீழ வாசல், வண்ணாந்துறை பகுதிகளிலும் இரு ஜாதியினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. விநாயகன் சிலைகளை நிறுவி, இடங்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடப்பதை அறிந்த காவல்துறை, இந்தப் பகுதிகளில் சிலை நிறுவ அனுமதிக்கவில்லை. தடையை மீறி இந்து முன்னணி மாநகரத் தலைவர் பாலமுருகன் என்பவர் தலைமையில் சிலையை நிறுவ நிர்வாகிகள் வந்தபோது போலீசார் கைது செய்தனர். வண்ணாந்துறை பகுதியிலும் இதேபோல் தடையை மீறி சிலை வைக்க வந்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.”            – ‘தினத்தந்தி’ செப். 3

“கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெரு வழியாக ஊர்வலம் வர எதிர்த்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் மாரியம்மன் தெருவில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலையை திடீரென உடைத்தனர். இரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். போலீசார் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.”               – ‘தினத்தந்தி’ செப். 3

அரக்கோணம் அருகே உள்ள மோசூர் கிராமத்தில் விநாயகன் சிலையை மாட்டுவண்டியில் வைத்து ஜெனரேட்டர் மூலம் மின் விளக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக வந்தபோது 10ஆம் வகுப்பு படிக்கும் சிவராமன் எனும் 17 வயது மாணவன், சிலைக்கு மாலை அணிவித்தபோது மின் விளக்கு கசிந்து மின்சாரம் தாக்கி இறந்தான்.     – ‘தினத்தந்தி’ செப். 3

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலையை நிறுவிய ‘இந்து முன்னணி’யினர் ஒரு பள்ளி மாணவனை மின் கம்பத்தில் ஏற வைத்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்க ஏற்பாடு செய்தனர். இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து மாணவனை பத்திரமாக கீழே இறக்கி விட்டனர்.”   ‘தினமலர்’ செய்தி

இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்த சம்பவங்கள்.

‘சேரி’ விநாயகன், ஊர்த் தெருவுக்குள் நுழைய முடியவில்லை. இதற்குப் பெயர் ‘இந்து ஒற்றுமை’யாம்.

இரு பிரிவு ‘இந்து’க்கள் மோதிக் கொண்டு விநாயகன் சிலையை உடைக்கிறார்கள்; கேட்டால் மத ஊர்வலமாம்!

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க ‘விநாயகன்’ சிலையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

கேட்டால் இதுதான் ‘சகிப்புத் தன்மை’ என்கிறார்கள்.

இந்த கூத்துகளுக்குப் பெயர்தான் மத ஊர்வலமா? இந்து முன்னணியே, பதில் சொல்!

பெரியார் முழக்கம் 0509209 இதழ்

You may also like...