குளறுபடியான ‘கிரிமிலேயர்’
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதில் பாதியளவுகூட இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. இடஒதுக்கீடே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படை புகுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிப்பதற்கே வடி கட்டப்பட்டு வருகிறார்கள். இந்த ‘கிரிமிலேயர்’கூட முறையாக வகுக்கப்படவில்லை.
கிரிமிலேயர் என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு அளவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஒரு அளவும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் களுக்கு ஒரு அளவுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுளை நீக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத் திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சட்ட அமைச்சகம் இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது.
‘அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கம்’ – தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இது குறித்து முறையிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கிரிமிலேயர்’ நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்து பரிசீலிக்க நடுவண் ஆட்சி பி.பி. சர்மா என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. தொடர் நடவடிக்கையாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் லோக்கேஷ் பிரஜாபதி, கடந்த மே 29ஆம் தேதி மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்திடம் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு கிரிமிலேயர் குறித்த விவரங்களைக்கேட்டார். ஆனால், சட்ட அமைச்சர் எந்த பதிலையும் தரவில்லை. மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கான ‘கிரிமிலேயரை’ நிர்ணயம் செய்வதில் ‘குடும்ப மாத ஊதியம் மற்றும் குடும்பத்துக்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாய்’ ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று 1983ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை கூறுகிறது. ஆனால், அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கான ‘கிரிமிலேயர்’ வரம்பில் மேற் குறிப் பிட்ட இரண்டு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமைகள் தடுக்கப்படுகின்றன. இதேபோல அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமிலேயர் வரம்பு குளறுபடிகளால் 60 திறன் வாய்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தக் குளறுபடிகளை சரி செய்யுமாறு 2013ஆம் ஆண்டு சென்னை, டெல்லி உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இரண்டு நிதிமன்றங்களுமே கிரிமிலேயர் அளவுகோலை ஒரே சீராக மாற்றி அமைக்க உத்தரவிட்டன. மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை இரண்டு நீதிமன்றங்களுமே கண்டித்தன. இவ்வளவுக்குப் பிறகும் கடந்த மார்ச் 2019 அன்றுமத்திய சட்ட அமைச்சகம் பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் ஒரு தவறான தகவலை சமர்ப்பித்தது. 1993ஆம் ஆண்டு முதல் ‘கிரிமிலேயரை’ நிர்ணயம் செய்வதில் ஒரே அளவுகோல் தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்ற தவறான தகவலைத் தந்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு சட்ட அமைச்சகத்தின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஊழிய நலச் சங்கத்தின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்த முன் வைத்திருக்கிறது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 14, 2019) இந்த விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறது.
தொகுப்பு : ‘இரா’
பெரியார் முழக்கம் 20062019 இதழ்