பெண்ணுரிமையை செயல்படுத்திய ஒரிசா முதல்வர்

பா.ஜ.க.வின் மிரட்டல்களை முறியடித்து, ஒரிசாவில் அய்ந்தாவது முறையாக வென்றிருக்கிறார் நவீன் பட்நாய்க். அவரது வெற்றிக்குக் காரணம் பெண்களின் மகத்தான ஆதரவுதான். கடும்புயல் சேதத்தை அண்மையில் சந்தித்த மாநிலம் ஒரிசா. பெண்களுக்கான சுயஉதவிக் குழு ஒன்றை உருவாக்கி, அதற்கு ‘சக்தி மிஷன்’ என்று பெயரிட்ட நவீன், அந்த விழாவில் பங்கேற்கும்போதுதான் தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததை அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள். அமைதியாக அந்த செய்தியைக் கேட்டு தலையசைத்த நவீன், நிகழ்வின் இறுதியிலேயே தேர்தல் அறிவிப்பு செய்தியை அறிவித்ததோடு நிற்கவில்லை. 33 சதவீத இடங்களை பெண்களுக்கு தனது கட்சி ஒதுக்கும் என்று அறிவித்தபோது, பெண்கள் முழக்கமிட்டு இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்தார்கள். இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் நவீன் சொன்னதைச் செய்பவர் என்று எழுதினார்கள். 21 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏழு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினார். அவர்களில் பெரும் பாலோர் வசதியற்றவர்கள். அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றிருப்பவர். ஒரிசாவின் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த சந்திராணி முர்மு, 25 வயதேயான பொறியியல் பட்டதாரி. பல பழங்குடி இளம் பெண்களை சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சரவையில் சேர்த்திருக்கிறார், நவீன் பட்நாய்க். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ஓரளவு வெற்றிகளைக் குவித்தாலும் 147 சட்டமன்றத் தொகுதிகளில் 112 தொகுதிகளில் வென்றிருக்கிறது, அவரது பிஜூ ஜனதா தளம் கட்சி. பெண்ணுரிமைக்கான திட்டங்கள், தொடரட்டும்!

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...