பெரியார் சிலை, சிலைக்கு மாலை ஏன்?
பெரியாருக்கு சிலையும் மாலையும் ஏன்?
பெரியாரே சொல்கிறார் :
இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை – கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும்.
கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்.
இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச் சின்னம் வைப்பது போன்ற இவையெல்லாம் பிரச்சார காரியமே தவிர இது பெருமையல்ல.
ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான்.
இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்.