தமிழன் விழா பொங்கல்

பூணூல்

“பூணூல் போடுவதற்குச் சர்க்காரில் (அரசில்) லீவு (விடுமுறை) விடுகிறானே! பார்ப்பான் நாட்டில் இருப்பது 100-க்கு 3- பேர். அவர்களின் பூணூல் மாட்டுவது அநேகமாக ஒருவர் அல்லது இருவர். அந்த இனப்பெண்கள் எல்லாரையும் கழித்துப் பார்த்தால் இதற்காக எதுக்கு அத்தனை பேர்களுக்கும் விடுமுறை. இது அக்கிரமம் அல்லவா? அரசாங்கம் இப்படி இருக்கலாமா? என்று எங்களைத் தவிர யாரும் கேட்பதில்லையே? ஆனால் இதைக் கேட்காதவர்கள் கேட்க நடுங்குகிறவன் எல்லாரும் மக்களிடத்திலே வந்து அளக்கிறான்கள். சட்டசபையிலே பிளக்கிறேன் என்கிறார்கள்! நாங்கள் மந்திரிகளுடைய மூக்கிலே, நாக்கிலே விரலை விட்டு ஆட்டுகிறோம் என்கிறார்கள்! இது ஏன் என்று கேட்க ஒரு பயல் முன்வருவது கிடையாதே? ஓட்டு கேட்க மாத்திரம் வருவார்கள்.” – மஞ்சை நாயக்கன் பட்டியில் 14-10-1958 அன்று பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. விடுதலை 19.10.1958

 

மத விடுமுறை

“மற்றபடி சர்க்காரார் விடுமுறை நாட்களில் “மத சம்பந்தமான லீவு நாட்கள் நீக்கப்பட வேண்டும்” என்று மற்றொரு தீர்மானம் செய்யப் பட்டிருக்கின்றது.
நமது அரசாங்கத்தில் வருஷம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 52 நாட்கள் கழிந்து விடுகின்றன. இது கிறிஸ்துவ சமயத்தை ஒட்டி ஏற்படுத்தப் பட்ட நாளாகும். மற்றபடி குறைந்தது எல்லா மத சம்பந்தமாக வும் வருஷத்தில் 35 நாட்கள் விடுமுறையாகப் பாவிக்கப்படுகின்றன. இவைகள் அரசாங்க இலாகாக்களிலும், பள்ளிக்கூடங்களிலுமே கையாளப் பட்டு பிறகு எல்லாக் காரியாலயங்களுக்கும் பரவி வரப்படுகின்றது. இதனால் அந்த நாட்களின் தொழில்கள் கெடுவதுடன் கைப்பணமும் செலவழிக்கப்படுவதோடு மத உணர்ச்சியையும் வலுப்படுத்துவதாக ஏற்பட்டு வருகின்றன.

அன்றியும், ஒரு சமூகத்தாரின் விடுமுறைக்காக மற்ற சமூகத்தாரின் வேலை கெடுவதுடன் இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு மற்ற மதக்காரர் களும் நஷ்டமடைய வேண்டியவர்களாகின்றார்கள். ரம்சானுக்காக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? வைகுண்ட ஏகாதசிக்காக இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? கிறிஸ்துப் பிறந்தநாள் பண்டிகைக்காக இந்துக்களும், முஸ்லீம் களும் ஏன் நஷ்டமடையவேண்டு? மென்பதையும் மற்றும் மத சம்பந்த மான விஷயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த விடுமுறை நாட்களுக்காக ஏன் நஷ்டமடைய வேண்டுமென்பதையும் கவனித்தால் மதத்தின் பேரால் மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கஷ்ட நஷ்டமடைவது விளங்கும்.

ஆதலால் ஞாயிற்றுக்கிழமை என்பதையும் அது மத சம்பந்த மானது என்பதற்கு ஆகவே மாற்றி பொதுவாகவே ஒருவித விடுமுறை களை ஏற்படுத்தி அவற்றிற்கும் எல்லோரும் அனுபவிக்க சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

சாதாரணமாக பள்ளிக்கூடங்களுக்கு விடப்படும் விடுமுறை நாட்கள் வாரத்தில் சனி, ஞாயிறு என்பதில் 52 வாரத்திற்கு 104 நாட்களும், வெயிற் காலம் 2-மாதம் என்பதில் சனி ஞாயிறு நீங்கி 45 நாட்களும் இவை தவிர ஜனவரியில் 10 நாட்களும் மற்றும் பண்டிகைகளில் 25 நாட்களும் ஆக ஒட்டு மாதம் வருஷத்தில் 6 மாதகாலத்திற்கு மேலாகவே 200 நாட்கள் வரை கூட விடுமுறை நாளாக பயன்படுத்தப்படுகின்றது.

இதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பொருள் நஷ்டம் கால நஷ்டம் எவ்வளவு என்று பார்த்தால் அதன் கஷ்டம் விளங்கும். இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத சம்பந்தமாக அரசாங்கத்தில் ஏன் லீவு விட வேண்டும் என்பதும், அவசியமாயிருக்கின்றவர்கள் தங்கள் தங்கள் சொந்த லீவாக வாங்கிக்கொள்ள சௌகரியம் அளிக்கப்பட வேண்டும் என்பதும் இதன் மூலம் மத உணர்ச்சியை எவ்வளவு குறைக்கப்படக்கூடுமோ அவ்வளவு குறைக்க வழி தேடவேண்டும் என்பதுமே இத்தீர்மானத்தின் கருத்தாகும். மற்றபடி ஓய்வோ விடுமுறையோ மக்களுக்கு கூடாதென்ற கருத்தின் மீது இத்தீர்மானம் செய்யப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.” தந்தை பெரியார், குடி அரசு – 30081931

 

தமிழன் விழா

“அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் வருடப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரசுவதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப் படியாக இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு – ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?
இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.” தந்தை பெரியார் – விடுதலை 30011959

You may also like...