அமைச்சரவையிலும் ‘அவாள்’ ஆதிக்கம்

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக நேற்று பதவியேற்ற நிலையில் அவரோடு புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தன் மீது பலரும் பொறாமை பிடித்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார் மோடி.

ஆனால் அவரது அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட உயர் சாதியினரே அதிகம் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.  அதன்படி பதவியேற்ற 58 அமைச்சர்களில் உயர் சாதியினர் – 32;  பிற்பட்ட வகுப்பினர் -13; பட்டியல் இனத்தவர் – 6; பழங்குடியினர் – 4; சீக்கியர் – 2; இஸ்லாமியர் – 1.

மக்கள் தொகையில் சுமார் 50-60ரூ உள்ள பிற்பட்ட வகுப்பினருக்கு 13 அமைச்சர்கள், சுமார் 10-15ரூ உள்ள உயர்சாதியினருக்கு 32 அமைச்சர்கள், இட ஒதுக்கீடு இருப்பதால் எம்.பி.க்களான தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 10 அமைச்சர்கள் (இட ஒதுக்கீடு இல்லை எனில்!), சுமார் 14ரூ உள்ள இஸ்லாமியருக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் கிடைத்திருக்கிறது.

நிதித் துறை அமைச்சராக்கப்பட்டுள்ள நிர்மலா சீத்தாரமன் ஒரு பார்ப்பனர்; திருவரங்கத்தில் பிறந்து, திருச்சியில் கல்லூரிப் படிப்பைப் படித்தார் என்பதோடு அவரது தமிழ்நாட்டு தொடர்பு முடிந்து விட்டது. அவரைத் தமிழர் என்று பா.ஜ.க. வினர் கூறுகிறார்கள். மற்றொருவர் முன்னாள் வெளியுறவு செயலாளராக இருந்த விஜயசங்கர். இப்போது  அவர் வெளி விவகாரத் துறை அமைச்சர். அவரது தந்தை சுப்பிரமணியம், திருச்சியில் பிறந்தவராம். விஜயசங்கருக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் படித்தது எல்லாம் வேறு மாநிலத்தில். அவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்ற செய்தியே அவர் அமைச்சராகப் பதவியேற்றப் பிறகுதான் தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும். இவரும் ஒரு பார்ப்பனர்.

பார்ப்பனர்கள் எப்போதுமே எந்த மாநிலத்தோடும் மாநிலத்தில் வாழும் தேசிய இனமக்களோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்கள். எந்த மாநிலத்தில் பிறந்தாலும் ‘சமஸ்கிருதம்-வேதம்-கீதை’ என்ற பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்கள். மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள். எந்தத் தேர்தல் களத்தையும் சந்திக்காமல் நிதியமைச்சராகவும் வெளிநாட்டுத் துறை அமைச்சராகவும் ‘ஜாக்பாட்’ பரிசு பார்ப்பனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பார்ப்பன ஆதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்போர், இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் முழக்கம் 06062019 இதழ்

You may also like...