பொன்பரப்பி – ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள்
பொன்பரப்பில் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் :
வாக்கு பதிவுக்கு பிறகு அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தலித் மக்கள் வீடு தாக்கப்பட்டு இருக்கின்றன. சில பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வாக்குச் சாவடியை கைப்பற்றுவதும் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியிருக்கின்றன. தேர்தல் ஆணையம் இது குறித்து தகவல் கேட்டிருப்பதாக தேர்தல் ஆணைய தலைவர் அறிவித்திருக்கிறார். வாக்குச் சாவடிகளை கைப்பற்ற வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களும் பேசி சர்ச்சைக்குள்ளானதை இங்கு நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாதி அரசியலை முன்வைத்து ஜாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாக்கு சாவடிகளை தங்களுடைய ஜாதி வாக்குச்சாவடி களாக மாற்றிக் கொள்வதும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களையும் அவர்களது சின்னங்களை அவமதிப்பதும் தங்கள் கட்சிக்கு ஆதரவு இல்லை என்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் ஜனநாயகத்தில் ஆழமாக கூறியிருக்கிற ஜாதி வெறியை தான் அம்பலப்படுத்துகிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக இருக்கிற ராமதாஸ் அவர்களும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களும் தலித் மக்கள் அல்லாத கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். மற்ற சாதியினரை அதில் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள் மகாபலிபுரத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதி கலவரம் நடந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அந்தக் கட்சியின் மீது கடுமையான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அக்கட்சியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். அதற்காக அக்கட்சி கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருந்ததையும் இப்போதும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. சமூகத்தில் ஜாதி என்பது ஒரு மிகப்பெரிய நோய். சாதி அடிப்படையில் ஒரு வெறியையும் கலவரத்தையும் தூண்டுவது மிக மிக எளிதானது. ஆனால் சாதியைக் கடந்து அனைவரும் சமத்துவமாக வாழுகின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறார் முயற்சிதான் மிக மிக கடினமான ஒன்று. சமுதாயப் பொறுப்புள்ள அனைவரும் அதை தான் செய்ய முயற்சி செய்வார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகம் தன்னுடைய உரிமைக்கு போராடுவது என்பது வேறு ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகம் சாதி அடையாளமாக்கி தனக்கு கீழே இருக்கிற சாதியை அடிமைப்படுத்தி வைத்திருப்பது என்பது வேறு சமூக நீதி என்ற பெயரால் ஜாதி வெறியை தூண்டி விடுவதும் ஜாதி வெறிக்கு தனக்கு கீழே ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி வைப்பதும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத மிக மிக மோசமான செயலாகும். பொன்பரப்பியில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இதை ஏதோ காவல்துறை அலட்சியத்தால் நிகழ்ந்தது என்று மட்டும் கருதாமல் சமூகத்தில் ஆழமாக புரையோடியிருக்கிற சாதியையும் சாதி அமைப்பையும் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
விடுதலை ராஜேந்திரன்.
பொதுச்செயலாளர்
திராவிடர் விடுதலை கழகம்.