அரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்!

மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான அய்.அய்.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர, தொடர்ந்து அய்ந்தாவது ஆண்டாக, குஜராத்தி மாநில மொழிக்கு மட்டும் தனிச் சலுகை அளித்து தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களுக்கான உரிமைகளை பறிக்கும் கொல்லைப்புற முயற்சிகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் கழகம் தமிழ்நாட்டுக்கான வேலை வாய்ப்புகளில் தமிழ் எழுதப் படிக்கவே தெரியாதவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தேர்வு பெற்று இரண்டாண்டுகளில் தமிழ் கற்றால் போதும் என்று அறிவித்திருக்கிறது. இதற்காக விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நேபாளம், பூட்டான் ஆகிய வெளி நாட்டினரும் தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணைய அறிவிப்பு கூறுகிறது என்றால், தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் எதிர்காலம் எக்கேடு கெட்டால் என்ன என்றே ஆட்சியாளர்கள் கருதுகிறார்களா? ‘நீட்’ தேர்வின் வழியாக தமிழக உரிமைகள் பாதிக்கப்பட்டது போன்ற அதே செயல்பாடுகள் தேர்வாணைய அறிவிப்பிலும் நுழைந்திருப்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ‘பாலிடெக்னிக்குகளில்;’ விரிவுரையாளர் பதவிக்கு இதேபோல் திறந்த போட்டியில் வடமாநிலத்தவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். கடும் எதிர்ப்புக்குப் பிறகு இதற்கான நியமனங்களை நிறுத்தி வைத்திருப்பதாக ‘அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்’ இப்போது அறிவித்திருக்கிறது.

இவை மட்டுமல்ல, மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான அய்.அய்.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளை (ஐ.ஐ.டி. – ஜே.இ.இ.) ஆங்கிலம், இந்தி தவிர, தொடர்ந்து அய்ந்தாவது ஆண்டாக, குஜராத்தி மாநில மொழிக்கு மட்டும் தனிச் சலுகை அளித்து தேர்வு நடத்தப்படுகிறது. மாநில மொழிகளில் குஜராத் மட்டும் விதிவிலக்கு பெற்றிருக்கிறதா? தமிழ் மொழியிலும் இந்த கூட்டு நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்கத் தயாராக இல்லை. 2013ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் (வழக்கமாக நடத்தப்படும் ஆங்கில,  இந்தி மொழிகளைத் தவிர) நடத்த வேண்டும் என்று குஜராத்  அரசின் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு விட்டார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி, அய்.அய்.டி. நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியிலும் நடத்தக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, இந்தக் கோரிக்கையை நடுவண் அரசும், தேர்வாணையங்களும் பரிசீலித்து, கோரிக்கைக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு மதிக்கப்படவில்லை.

தேசிய அளவிலான தேர்ச்சி விகிதங்களில் தமிழ்நாட்டு மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதற்கான காரணங்களில் ஒன்று  – தமிழில் தேர்வு நடத்தப்படாமையும் ஆகும். இதில் தமிழ்நாடு அரசும் எந்த கவலையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற ‘அனைத்து இந்தியப் பணி களுக்கான’ தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்புகள் இருக்கும்போது உயர் தொழில்நுட்பக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி மறுப்பதும், ‘குஜராத்தி’ மொழிக்கு மட்டும் தனி சலுகை காட்டுவதும் என்ன நியாயம்?

இதே அநீதியை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் தொடர்ந்து இழைத்து வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். 145க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு, பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்தும் இந்த ஆணையம் 7 மண்டலங்கள், 2 துணை மண்டலங்களுடன் செயல்படு கிறது. மண்டல அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டதால் மத்திய அரசின் துறைகளில் அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு மண்டல வாரியாக நடத்தப்பட்ட தேர்வுகள் நிறுத்தப்பட்டன. அனைத்து இந்திய அளவிலான தேர்வுகளாக மாற்றப்பட்டன. இதனால் இந்தி மொழிக்காரர்களும், வடநாட்டுக்காரர்களுமே மத்திய அரசு வேலை வாய்ப்புகளை பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறினார்கள்.

அதே தீர்ப்பில் மண்டலங்களில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளைப் பாதிக்காமல் அகில இந்திய அளவில் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மாநில அளவிலான வேலை வாய்ப்புகளை ஒழிக்க வேண்டும் என்ற வாய்ப்புக்காகவே காத்திருந்தவர் களிடம் இந்த பரிந்துரைகளை நிறைவேற்றுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இது தமிழக அரசு தேர்வாணைய அறிவிப்பைப்போல் இழைத்துள்ள மற்றொரு துரோகம். தமிழக அரசுத் துறைகளான சுகாதாரம், பொதுப் பணி, ஆவின், குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 3 இலட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை அரசே நேரடியாக நிரப்பாமல் ‘அயல்பணிமுறை’ (Outsourcing) வழியாக நிரப்பி வருகிறது என்ற அதிர்ச்சியான தகவல் வந்திருக்கிறது.

தனியார் ஏஜென்சிகளிடம் இந்தப் பணி நியமனங் களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுவிட்டன. அந்த நிறுவனங்கள் மாத ஊதியம் 25 ஆயிரம், 30 ஆயிரம் எனக் கூறி பணியில் அமர்த்தி, வெறும் ரூ.7 ஆயிரம், 8 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கிவிட்டு மீதிப் பணத்தை அந்த நிறுவனங்களும் இடைத் தரகர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். நிரந்தரப் பணியோ, அரசு ஊழியர்களுக்கான சலுகைகளோ இல்லாமல், எந்த நேரத்திலும் பணியிழப்பை சந்திக்கும் அவலத் துக்கு தமிழக இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மாநில அரசும், மத்திய அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திக்காரர்களுக்கு கதவைத் திறந்து விடும் தீவிர செயல் திட்டங்களையும் தொடங்கி விட்டார்கள்.

 

 

நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்

 

You may also like...