கஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியது. டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சிதைந்தது. மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். விவசாயிகளின் உற்பத்தி பாழானது. இந்தத் துயரிலிருந்து முழுமையாக மீண்டு வர டெல்டா மாவட்டங்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஆனது. உலக நாடுகளின் தலைவர் கூட தமிழக டெல்டா மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நாட்டின் பிரதமர் மோடியோ தமிழகத்தின் பக்கம் அப்போது எட்டிப்பார்க்கவும் இல்லை, ஆறுதல் சொல்லி ஒரு அறிக்கையும் விடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் பிரச்சாரத்துக்காக மதுரை, திருப்பூர், சென்னை மற்றும் திருநெல்வேலி என 4 முறை வந்துவிட்டார். இன்னும் 2ஆம் கட்ட பிரச்சாரத்துக்கும் தமிழகம் வர திட்டமிட் டிருக்கிறார். ஓட்டுக்கு கேட்க வரத் தெரிந்த மோடிக்கு, தமிழக மக்கள் துயரத்தில் இருந்த போது வரத்தான் மனம் இல்லை என்றாலும் தமிழகம் கேட்ட நிதியையாவது ஒதுக்கியிருக்க லாம். ஆனால் அதிலும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வஞ்சனை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மீட்டெடுக்க நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15,000 கோடி கேட்டது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு என்னவோ ரூ.25,000 கோடிக்கு மேல் இருக்கும். ஆனால் மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.353.7 கோடியும் அடுத்ததாக டிசம்பர் 31ஆம் தேதி ரூ.1,146.12 கோடியும் அறிவித்தது. கேட்ட தொகையும், அறிவிக்கப்பட்ட தொகையும் எந்தவிதத்திலாவது பொருந்துகிறதா? அந்த சமயத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையே ரூ.8,684 கோடி இருந்தது. ஆனால் அதைக்கூட உடனடியாக விடுவிக்கவில்லை.
மோடிக்கு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே தமிழகத்துக்கு இந்த அவலம்தான் நீடித்து வருகிறது. 2016ஆம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்திட, தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியது ரூ.22573 கோடியே 26 லட்சம். ஆனால் மத்திய அரசு வழங்கியது வெறும் ரூ 1793 கோடியே 63 லட்சம் மட்டுமே. 2017ஆம் ஆண்டு ஒக்கி புயல் பாதிப்பு ஏற்பட்ட போது தமிழக அரசு கோரியது ரூ.9302 கோடியாகும். ஆனால் மத்திய அரசு வழங்கியது வெறும் ரூ.413 கோடியே 55 லட்சம் மட்டுமே.
நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்