இஸ்லாம் மதத்திலும் மூட நம்பிக்கை உண்டு…
நான் இஸ்லாம் மதக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவையெல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதை எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள். சமாதி வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவை எல்லாம் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன.
மாரியம்மன் கொண்டாட்டம் போல், ‘இஸ்லாம்’ சமூகத்திலும் ‘அல்லாசாமி பண்டிகை ‘ நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல’ விஷேசங்களும், சந்தனக்கூடு, தீ மிதி முதலிய உற்சவங்களும் நடை பெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா, இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால், இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ் வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்துக்கு அடிமைப்பட்டது என்பதை மறவாதீர்கள்.
குடி அரசு – 02.08.1931
பெரியார் முழக்கம் 10022022 இதழ்