கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு கழக சார்பில் கொளத்தூர் மணி வாழ்த்து

23.02.19 அன்று செஞ்சி யில் ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் (மாவட்ட செயலாளர்) தலைமையில்  நடைபெற்றது.  மாவட்டக் கழகத் தலைவர் பூஆ.இளைய ராசன் வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியில்   பழங்குடி மக்கள் முன்னணி சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க. சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப் பாண்டியன் ,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே மணி மற்றும்  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்தத் தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம் என்று  அறிவித்தார். தொடர்ந்து  ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் இன்றைய அரசியல் அன்றைய அரசியல் சூழலை பொருத்தி விரிவான ஆழமான பெரியாரின் கொள்கைப் பயணத்தை எடுத்துரைத்துப் பேசினார். மதியம் 2.30 மணியளவில் நிகழ்ச்சி திண்டிவனம் நகரப் பொறுப்பாளர் சிந்தனை சிற்பி நன்றியுடன் நிறைவு பெற்றது.

பெரியார் முழக்கம் 07032019 இதழ்

You may also like...