அரசு மருத்துவமனைகளில் சோதிடர்களை நியமிக்கிறது இராஜஸ்தான் காங்கிரஸ் அரசு
இராஜஸ்தான் மாநில அரச மாநிலத்திலுள்ள 16,728 அரசு மருத்துவமனைகளிலும் 54 பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சோதிடர்களை நியமிக்கப் போகிறதாம், அம்மாநில காங்கிரஸ் ஆட்சி!
பிறந்த குழந்தைகளுக்கு இவர்கள் ஜாதகம் எழுதித் தருவார்களாம். பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் குல மரபுப் படி பெயர்களைத் தேர்வு செய்து பெற்றோர் களுக்கு அறிவுரை கூறுவார்களாம்.
‘ராஜிவ் காந்தி ஜென்ம பத்ரி நாமகரன் யோஜனா’ என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. வேத சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் பரப்புவதற்கு வாரியம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதோடு அதற்கான திட்ட நகல்களைத் தயாரிக்கும் பொறுப்பை ‘ஜெய்ப்பூர்’ ஜெகத்குரு இராமானுஜ ஆச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக் கழகத்திடம் அரசு ஒப்படைத்துள்ளாம். இத்திட்டத்தால் மூவாயிரம் சோதிடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறதாம். பா.ஜ.க.வும் இத்திட்டத்தை வரவேற்றிருக்கிறது.
முதல் கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவ மனைகளில் இது செயல்படுத்தப்பட இருக்கிறதாம்.
பேயோட்டும் மந்திரவாதிகளையும் அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டால், அவர்களே மன நோயைக் குணப்படுத்தி விடுவார்களே! வேப்பிலை அடிக்கும் சாமியார்களை நியமித்துவிட்டால், நோயை விரட்டி அடித்து விடுவார்களே!
“காங்கிரசானாலும் பா.ஜ.க.வானாலும் – வடநாட்டைப் பொறுத்தவரை, ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
பெரியார் முழக்கம் 21022019 இதழ்