எல்.அய்.சி. ஊழியர் ஆர்ப்பாட்டம்
பார்ப்பன அதிகார மய்யங்களை தகர்க்காமல் சமூகநீதி பெற முடியாது: விடுதலை இராசேந்திரன் பேச்சு
பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்தாத எல்.அய்.சி. நிர்வாகத்தையும் அதன் தென் மண்டல மேலாளரையும் கண்டித்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 5.1.2019 காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்தது. தென்மண்டல எல்.அய்.சி. கூட்டமைப்புத் தலைவர் ஆ.லோகநாதன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் இ. அன்புச் செல்வம், கு. கமலக்கண்ணன், பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்களின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் கு. தனசேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், மு. வீரபாண்டியன் (சி.பி.அய்.), எஸ்.கே. கார்வேந்தன் (முன்னாள் எம்.பி.), திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
“அய்ந்து முக்கியக் கோரிக்கைகளை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். அவை அனைத்தும் புதிய கோரிக்கைகள் அல்ல. அரசாணைகளாக வெளி வந்த பிறகும் நிர்வாகம் நிறைவேற்ற மறுக்கும் கோரிக்கைகள், ஊழியர் நலச் சங்கத்துக்கு அங்கீகாரம் தரப்படவில்லை; அதிகாரபூர்வமாக சங்கத்தின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை; காலி இடங்கள் நிரப்பப்படவில்லை; ஊழியர்களின் தேர்வுக்கான நேர்முகத் தேர்வுக் குழுவில் பிற்படுத்தப்பட்டோருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அலுவலகத்துக்கு இடம் வழங்கப்பட வில்லை என்ற இந்த கோரிக்கைகள் மிக சாதாரணமாக நிறைவேற்றப்படக் கூடியவைகளாக இருந்தும் 1997ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என்றால், எவ்வளவு பெரிய அவமானம்? பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்றாலும் அதிகாரம் பார்ப்பன-பனியாக்களிடம் தான் இருக்கிறது. இதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தில் அவர்கள்தான் இருக்கிறார்கள்.
113 எல்.அய்.சி. மண்டலங்களில் காலியாக உள்ள மொத்த பதவிகளே 197 தான் என்று எல்.அய்.சி. நிர்வாகமே முடிவு செய்து அந்தப் பதவிகளுக்கு மட்டும் மத்திய அரசின் வேலைவாய்ப்புத் துறையில் ஒப்புதலைப் பெற்று விட்டது. ஆனால் இரண்டு மண்டலங்களில் மட்டுமே 168 பதவிகள் நிரப்பப்பட வேண்டியிருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டினால் “நாங்கள் 197 பதவிகளை நிரப்ப ஒப்புதல் பெற்று விட்டோம்; முடிந்தால், நீங்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்திடம் போய் அனுமதி பெறுங்கள்” என்று கூறுகிறார்கள் என்றால், எவ்வளவு அதிகாரத் திமிர் இதில் அடங்கியிருக் கிறது?
பணிக்கான நேர்முகத் தேர்வுக் குழுவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சாhந்த ஒருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது பெரிய பொருளாதாரம் தொடர்புடைய கோரிக்கையும் அல்ல; அதைக்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்றால் என்ன நியாயம்? அதிகாரம் யாரிடம் குவிந்து கிடக்கிறது?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி நான்கு ஆயுள் காப்பீட்டுக் கழகங்களில் அதாவது நேஷனல் இன்சூரன்ஸ், நியு இந்தியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 43 மேலாளர்களில் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர் மட்டும்தான் 275 துணை மேலாளர்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் 3 பேர்தான்.
மத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம். ‘பி’ பிரிவில் 14 சதவீதம், ‘சி’ பிரிவில் 11 சதவீதம், ‘டி’ பிரிவில் 10 சதவீதம்.
24 அமைச்சகங்களின் கீழ் உள்ள அரசுத் துறைகளில் ‘ஏ’ பிரிவில் பிற்படுத்தப் பட்டோர் 14 சதவீதம், ‘பி’ பிரிவில் 15 சதவீதம், ‘சி’ பிரிவில் 17 சதவீதம், ‘டி’பிரிவில் 18 சதவீதம்.
அமைச்சரவை செயலகம் என்பது மிகவும் அதிகாரமிக்கது. அதில் உள்ள 64 அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டவரோ ஒரு பட்டியல் இனத்தவரோ கிடையாது.
தேசிய மய வங்கிகளில் 450 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 5 பேர் மட்டும்தான். அதாவது 1.1ரூ. 1255 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 16 பேர்தான். 1.2ரூ. 27 சதவீத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுதான் நிலை.
பார்ப்பன உயர்ஜாதி அதிகாரவர்க்கத்தின் அதிகாரப் பிடி தகர்க்கப்பட்டாலொழிய இந்த உரிமைகள் கிடைக்கப் போவதே இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்.அய்.சி. ஊழியர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பு, பதவி உயர்வுப் பிரச்சினைகளாக மட்டும் குறுக்கிப் பார்த்தால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வே கிடைக்காது. ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்கள் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் தாழ்த்தப் பட்டவர்களாக இருந்தாலும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய சில உயர்ஜாதியினரின் அதிகாரப் பிடியில் தான் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரும் அம்பேத்கரும் இதை தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயம் தன்னை ஜாதிய அடையாளத்துக்குள் புதைத்துக் கொண்டே இந்த அதிகார மய்யத்தை வீழ்த்த முடியாது. ஜாதியை நாம் ஏற்றுக் கொண்டு அதை நியாயப்படுத்துவதும், தனக்குக் கீழே உள்ள ஜாதியை சமமாக ஏற்க மறுப்பதும் நீடிக்கும் வரை பார்ப்பன அதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கும். பார்ப்பன அரசியல் அதிகாரத்துக்கு அவர்களை உயர்த்தியதற்கும் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் நீடித்ததற்கும் அடிப்படையான காரணம் பார்ப்பனர்கள் சமூக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது தான். வழிபாடுகளை சடங்குகளை சாஸ்திரங்களை அவர்கள் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். நாமும் அதை அப்படியே சமூகத்தில் ஏற்று வாழப் பழகி விட்டோம். பார்ப்பன கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் சமூக அதிகார மய்யங்களை நாம் புறக்கணிக்கத் தயாராக இல்லை. அது கோயில் – ஜாதிக்குள் திருமணம் – சாஸ்திர சடங்குகளைப் பேணி வாழுதல் – வீட்டு நிகழ்வுகளில் புரோகிதர்களை அழைத்து நடத்துதல் என்று நாம் இப்போதும் கண்மூடித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இடஒதுக்கீட்டின் கீழ் நாம் கல்வி பெற்றால் விழிப்புணர்வு பெறுவோம் என்று பெரியாரும் அம்பேத்கரும் நினைத்தார்கள். நாம் அவர்களைத் தோற்கடித்துக் கொண்டே இருக்கிறோம். எனவே பார்ப்பனரல்லாத மக்கள் நமக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டம், பார்ப்பனர்களின் சமூக அதிகார மய்யங்களையும் அரசியல் அதிகார மய்யங்களையும் தகர்ப்பதில்தான் அடங்கி யிருக்கிறது” என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.
பெரியார் முழக்கம் 07022019 இதழ்