சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை
தியாகு / கொளத்தூர் மணி
13.01.2019
அனைவருக்கும் வணக்கம். 2018 திசம்பர் சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் குறித்து நாங்கள் இருவரும் சேர்ந்து 29.12.2018இல் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஊடகங்களிலும் பிற வழிகளிலும் நடந்த விவாதங்களைக் கவனத்தில் கொண்டுள்ளோம். பலதரப்பட்டவர்களும் கிளப்பிய புரளிகளுக்கும் அவதூறுகளுக்கும் நடுவில் எங்கள் அறிக்கையைப் புரிந்து கொண்டு சமூகப்பொறுப்புடன் நிலையெடுத்த தோழர்கள், நண்பர்களுக்கு நன்றி!
பாதிப்புற்றதாக முன்வந்த தரப்பாரிடமிருந்து எங்கள் அறிக்கைக்குப் பிறகு ஒரு நீண்ட மடல் வரப்பெற்றோம். அது எங்கள் அறிக்கையைப் பெரும்பாலும் மறுதலிப்பது போல் அமைந்திருந்ததால் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கூறு குறித்தும் எங்கள் விளக்கத்தை அவர்களுக்கு எழுதியனுப்பினோம். இதன் பிறகு இத்தனை நாளாகியும் அவர்களிடமிருந்து மறுமொழி இல்லாததால் எங்கள் விளக்க மடலைப் பொதுவெளியில் முன்வைக்கிறோம். இந்தச் சிக்கலில் எழுப்பப்பட்ட பல குற்றாய்வுகளுக்கும் வினாக்களுக்கும் இது விடையாக அமையும் என நம்புகிறோம்.
தியாகு / கொளத்தூர் மணி / 13.1.2019.
அன்பிற்குரியீர்!
வணக்கம். சக்தி–கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த சிக்கல்கள் தொடர்பாக இருதரப்பாரையும் தொடர்புள்ள மற்றவர்களையும் விசாரித்துத் தீர்வு காணுமாறு அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று தியாகு, கொளத்தூர் மணி ஆகிய நாங்கள் இருவரும் 27.12.2018இல் விசாரித்து 29.12.2018இல் கொடுத்த அறிக்கை குறித்து நீங்கள் அனுப்பிய மறுப்பறிக்கை மற்றும் திறனாய்வு மடல் கிடைத்தது.
இது மறுப்பறிக்கை என்று நீங்கள் கூறியிருப்பதன் பொருள் எங்கள் அறிக்கையின் முடிவுகளை மறுதலித்து விட்டீர்கள் என்பதுதான், இப்படி மறுதலிக்க உங்களுக்கு உரிமையுண்டு என்றாலும், உங்கள் மறுதலிப்பின் பொருள் இந்த முடிவுகளைச் செயலாக்கும் பொறுப்பிலிருந்து எங்களை நீங்கள் விடுவித்து விடுகிறீர்கள் என்பதுதான்.
இருப்பினும் எங்கள் முடிவுகள் மீது நீங்கள் தொடுத்துள்ள திறனாய்வுகளுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
”1. சக்தி- கௌசல்யா சங்கர் மறுமணத்துக்கு பிறகாக அவர்கள் இருவரின் மீது எழுந்த புகார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மன்னிக்க, இது சக்தியிடம் நேரடியாகக் கேட்கப்பட்டும் விளக்கம் தரப்படாத குற்றச்சாட்டுகள். கௌசல்யாவிடம் நேரடியாகக் கேட்கப்பட்டும் மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைத்த குற்றச்சாட்டுகள். இந்த கேள்விக்கெல்லாம் மௌனம் காத்தவர்தான் ஆந்திராவில் சாதி ஆணவக் கொலையால் பாதிப்புக்குள்ளான அமிர்தாவின் பிள்ளைக்கு தான் பாதுகாப்பு என்று கடிதம் எழுதினார். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவரிடமே இத்தனையும் தொடக்கத்திலிருந்தே சொல்லப்பட்டும் அவரும் அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு எவரும் கேட்கமாட்டார்கள் அதனால் நாமும் அறத்தின் பக்கம் நிற்க வேண்டியதில்லை என்கிற அடிப்படையில் சக்தியையும் கௌசல்யா சங்கரையும் நந்தீஷ் சுவாதிக்காக மேடையேற்றினார்.”
திருமணத்துக்கு முன்னதாக யாரெல்லாம் எதற்காகவெல்லாம் சக்தியையும் கௌசல்யாவையும் மேடையிலேற்றினார்கள் என்பது, அவர்கள் யாருக்கு எதற்காகக் கடிதம் எழுதினார்கள் என்பது எங்கள் விசாரணையின் எல்லைக்கு உட்பட்டதன்று.
”2. அவர்கள் இருவரின் மறுமணம் நடந்ததும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் அதிகம் கவனிக்கப்பட்டதை அடுத்து அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதாலேயே இந்த விசாரணையும் நடத்தப்பட்டது என்கிற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். உங்கள் அமைப்பைச் சார்ந்த இந்த விசாரணை நிகழ்வை ஒருங்கிணைத்த நபரிடம் புகார் பல மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது தோழர்களே. அவர்தான் உங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.”
எங்கள் விசாரணைக்கு உள்நோக்கம் கற்பிப்பதை புறந்தள்ளுகிறோம். விசாரணையின் நோக்கம் என்ன என்பதை அறிக்கையிலேயே தெளிவாக்கி விட்டோம். அமைப்புத் தோழர் யாரேனும் பிழை செய்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர் சார்ந்த அமைப்புதான். அந்த நடவடிக்கைக்கு உங்களிடம் உதவி கேட்டால் வழங்கலாம். யார் மீதாவது சட்ட நடவடிக்கை எடுக்கக் கருதினால் நீங்கள் எடுக்க எவ்விதத் தடையும் இல்லை.
”3. இருதரப்பும் இணைந்து முடிவெடுத்துதான் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. யாமறிந்தவரையில், சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு இயங்கமுடியவில்லை; அதனால் இதைப் பேசித் தீர்க்கலாம் என்று அவர்கள் அழைத்ததாகவே நினைவு. ஏற்கெனவே சமூகநீதி என்ன என்று கேட்டும் மௌனமாகவே இருந்தவர்கள் தங்களால் இயங்கமுடியவில்லை என்பதாலேயே பேசித் தீர்க்க அழைத்தனர். ‘விசாரணை நிகழ்வுக்கு வரவேண்டும் நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். நீங்கள் நேரடியாக வந்தால் மட்டுமே சக்தி எதுவும் திரித்துப் பேசாமல் உண்மையைக் காப்பாற்றமுடியும்’ என்று நம்பிக்கை வார்த்தைகள் கொடுத்து பாதிக்கப்பட்ட நபரை வற்புறுத்தி அழைத்தது அவர்கள்தான்.”
”யாமறிந்த வரையில்” ”நினைவு” என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்து எங்களை நீங்கள் கொச்சைப்படுத்துவது வருத்தத்துக்குரியது. “நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம்” என்று எங்கள் இருவரில் யாரும் உங்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கவில்லை. நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்கள் உறுதிப்பாடு. விசாரிப்பதற்கு முன்பே எந்தப் பக்கம் நிற்பது என்று எப்படி எங்களால் வாக்களிக்க முடியும்? உங்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கொடுத்து வற்புறுத்தியவர்கள் யாரோ அவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியதை எங்களிடம் கேட்க வேண்டாம்.
” 4. நம்பிக்கை கொடுத்து வரவழைத்து oppression over oppression செய்ததாகவே நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் விசாரணை நிகழ்ந்த அன்று குற்றம்சாட்டப்பட்ட இருவருமே தங்களிடம் எந்த குற்றமும் இல்லாதது போலத்தான் ஏற்கெனவே மன மற்றும் உடல் உளைச்சலில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் முன்பும், நடந்ததை விவரிக்க வந்த பிற நபர்கள் முன்பும் நடந்துகொண்டார்கள் (குற்றம் எழுத்தறிக்கையாகச் சொல்லப்படவில்லை என்றாலும் குற்ற உணர்வு என்பது கொள்கை பேசுபவர்களின் மனசாட்சிக்கு இருக்க வேண்டுமே?) சூழலின் வீரியம் உணர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமக்கு முன்புதான் இருக்கிறார்கள் என்பதையாவது உணர்ந்து கொஞ்சம் சுய அறிவோடு அங்கே நடந்துகொண்டிருக்கலாம். இதற்கு அங்கு கூடியிருந்த அனைவருமே சாட்சி. அதுவரை சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த நபர்கள்தான் மன்னிப்புக் கேட்கச் சொன்னதும் குற்ற உணர்வு மேலிட மன்னிப்புக் கேட்டார்களா என்பது கேள்வி? (சக்தி சுவற்றை பார்த்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டுவிட்டு மற்றவை அவதூறு என்றார். அப்போதுகூட மன்னிப்பு கேட்க எண்ணாத கௌசல்யா அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதும் எழுந்து நின்று இன்முகத்துடன் மன்னிப்புக் கேட்டார். மற்ற எந்த குற்றச்சாட்டும் சக்தியின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு மறுப்பதற்கில்லை. அவரிடம் அந்த போக்கு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தீர்ப்பளித்தவர்கள் சொன்னாலும் அதற்கு சக்தி அங்கே மன்னிப்பு கேட்கவில்லை. இதற்கும் அங்கு கூடியிருந்த அனைவருமே சாட்சி). மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போது ஒரு பெண் அங்கே நிச்சயம் விசாரிப்பவர்கள் தரப்பில் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கை முக்கியமாக முதல்நாள் இரவு வரை வலியுறுத்தப்பட்டது. அதுவும் செவிமடுக்கப்படவே இல்லை.
விசாரணையில் நீதியின் பக்கம் நிற்போம் என்பது தவிர வேறு எந்த நம்பிக்கையும் நாங்கள் யாருக்கும் தரவில்லை. ஒரு தரப்பிடம் ”உங்கள் பக்கம் நிற்போம்” என்று சொல்லி விட்டு நடத்துகிற விசாரணை எப்படி முறையானதாக இருக்க முடியும்? விசாரணைக்கு ஆளானவர்கள் சோகமாய் இருந்தார்களா, புன்சிரிப்புடன் இருந்தார்களா என்பதெல்லாம் விசாரணையின் முடிவில் எவ்விதத் தாக்கமும் கொள்ளாது. விசாரிப்பவர்கள் தரப்பில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது உண்மைதான். அவர்களால் வர இயலவில்லை என்னும் போது நாம் என்ன செய்வது? அவர்களை வர வேண்டாம் என்று நாங்களா சொன்னோம்? ஆனால் அவர்கள் வராவிட்டாலும் நீங்களே போதும், உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று நீங்களே சொல்லவில்லையா? விசாரணைக் குழுவில் ஒரு பெண்ணும் இடம்பெறும் வரை இந்த விசாரணை வேண்டாம் என்று சொல்ல விடாமல் உங்களைத் தடுத்தது எது?
”5. சக்தி – கௌசல்யா சங்கர் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே கேட்டது கள அறம் என்ன? சமூகநீதி என்ன? இத்தனைக்கும் பிறகு பொதுவில் எப்படிச் செயல்படத் துணிந்தார்கள்? உண்மை அறிந்தவர்கள் ஏன் உடன் நின்றார்கள்? திருமணத்திலும் மறுமணத்திலும் எந்தவித எதிர்ப்பும் விமர்சனமும் இல்லை. ஆனால் எந்த அடிப்படையில் இத்தனை விசயங்களையும் மறைத்து தூரத்து உறவினர்கள் இருவர் செய்துகொள்ளும் மறுமணத்தை ‘சுயசாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாக’ நிகழ்த்தினார்கள்? என்பது மட்டும்தான். ஆனால் இது எதற்குமே அன்று விளக்கம் தரப்படவில்லை. ஆனால் முடிவு மட்டும் எழுதப்பட்டது. அதில் ‘6 மாதம் பொது மேடைகளில் பறை எடுக்கக் கூடாது, நிமிர்வு கலையகம் பக்கம் வேண்டுமானால் செல்லலாம் இல்லையென்றால் அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்’ என்பதையாவது சமூகநீதியின் பார்வையில் கருதலாம். 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்றும் இழந்த ரத்தத்தின் மீது தண்டம் என்கிற முறையில் பேரம் பேசுவது அதனை குற்றவாளியின் Accountability என்பதெல்லாம் எப்படிச் சமூகநீதிக் கணக்கில் வரும்?. உயிரிழப்புக்கு விலைபேச சமூகநீதி இடமளிக்கிறதா?. குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டதைக் குறிப்பிடும் அறிக்கை பாதிக்கப்பட்ட தரப்பு பணத்தை அங்கேயே வேண்டாம் என்று மறுத்ததையும் குறிப்பிட்டிருக்கவேண்டும் என்றே கருதுகிறோம். சமூகநீதி என்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நம்பி எழுப்பிய கேள்வியை கட்டப்பஞ்சாயத்து போல திரித்துவிட்டிருப்பது யாருடைய தவறு?.
கள அறம், சமூக நீதியின் பாற்பட்ட வினாக்கள் பொது வெளியில் விவாதத்துக்குரியவை. அதில் கருத்து வேறுபாடுகளும் இருக்க இடமுண்டு. நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்வது போலவே மற்றவர்களும் அவரவர் கருத்தைச் சொல்லலாம். அது எமது விசாரணைப் பொருளன்று. உரிய வயதடைந்த ஆணும் பெண்ணும் விரும்பி மணந்து கொள்ள உரிமை உண்டு என்பதுதான் அடிப்படைப் பார்வை. அந்தத் திருமணம் முற்போக்கானதா இல்லையா? அதில் கலந்து கொள்ளலாமா கூடாதா? என்பது குறித்து விசாரணை நடத்த இயலாது. இது குறித்து விவாதிக்க வேறு வழிகள் உண்டு. ’பண்பாட்டுக் காவலர்’களாக நாங்கள் நடந்து கொண்டிருந்தால் அதற்குத்தான் கட்டப் பஞ்சாயத்து என்ற விமர்சனம் பொருந்தும்.
மூன்று இலட்சம் அல்லது இரண்டு இலட்சம் என்பது செய்த குற்றத்துக்கான தண்டனையே தவிர இழந்த இரத்தத்துக்கான இழப்பீடு அன்று. எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதிப் பொறிமுறையோ இல்லை என்பதை அறிக்கையிலேயே தெளிவாக்கி விட்டோம். எங்களால் சிறைத்தண்டனை விதிக்க முடியாத நிலையில்தான் தண்டம் விதிக்கிறோம். தண்டம் விதிப்பதும் தண்டத் தொகையைப் பாதிக்கபட்டவருக்கு இழப்பீடாக வழங்குவதும் உலகெங்கும் இக்கால சட்ட நீதியில் இல்லாத ஒன்றல்லவே? அதை ஏற்க மறுத்து ஏதோ ஒரு நற்செயலுக்குக் கொடுத்து விட்டுப் போவது உங்கள் உரிமை என்பதை அப்போதே தெளிவுபடுத்தி விட்டோம். எங்கள் அறிக்கையில் அதைச் சொல்வதும் சொல்லாமல் விடுவதும் எங்கள் முடிவைப் பொறுத்தது. தண்டத் தொகையை இழப்பீடாக ஏற்க மறுப்பதாக நீங்கள் எப்போது வேண்டுமானலும் அறிவிக்க முடியுமே?
சரி, உயிரிழப்புக்கு விலையா? என்று கேட்பதால் உங்களிடம் கேட்க வேண்டிய சில கேள்விகள் உண்டு; கருக்கலைப்பைத்தான் நீங்கள் இப்படிச் சொல்கின்றீர்கள் என்றால், அந்தக் கருக்கலைப்பில் உங்களுக்கு எந்தப் பங்குமில்லையா? கருத்தரித்தது பாலியல் வல்லுறவால் அல்ல என்பதை உங்களாலேயே மறுக்க முடியாது. கருக்கலைப்பு என்பது நீங்களே எடுத்த முடிவு. கருக்கலைப்பு முடிந்த பிறகுதான் அவருக்குச் செய்தி அனுப்பினீர்கள். அவர் சொல்லியோ வலியுறுத்தியோ நடந்த கருக்கலைப்பு அல்ல என்னும் போது கொலை, அதிலும் ஆணவக் கொலை என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும்? 41 நாள் கருவை ஆறு மாதக் குழந்தை என்று ’கண்காது’ வைத்துக் கதை விடும் உள்நோக்க அறியாமையை நீங்களே மறுக்க வேண்டாமா? சொந்த வலிகளிலிருந்து விலகி நின்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதன் மறுபக்கம் நீங்கள் உங்களுக்கே அநீதி செய்து கொண்டிருப்பது என்று மெல்லப் புரியும். கருக்கலைப்பு ஆணவக் கொலை என்றால் அந்தக் கொலையில் நேர்ப்பங்கு, முதற்பங்கு யாருக்கு, சுற்றடிப் பங்கு யாருக்கு என்று அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள்.
“6. பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தாமாகவே முன்வந்துதான் முடிவு குறித்தான தங்கள் கோரிக்கைகளை வைத்தார்களே ஒழிய யாரும் அவர்களை அழைத்துக் கருத்து கேட்கவில்லை.
முன்வைத்த கோரிக்கையிலும் குறைந்தபட்சம் கூட பரிசீலிக்கப்படாமல் விசாரணைக்கு எல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்ட ஒரு தீர்ப்பை அறிவித்ததாகவே பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்கு இருந்தது. அதற்கு அன்று விசாரணை நாள் முழுதும் நடந்த சில நிகழ்வுகளே சான்று.
பாதிக்கப்பட்டவர்கள் சொன்னதையே தீர்ப்பாகச் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீதியின் பாற்பட்டது அன்று. பாதிப்புற்றோர் நலன் என்பது நீதியைப் பலிபீட மேடையாக மாற்றி விடும் ஆபத்து உள்ளது. “Victimology can never be allowed to turn justice into an altar of revenge.” இந்த சீர்திருத்தக் குற்றவியலில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
”7. சக்தியுடன் வாழவேண்டுமென்றால் போராட்டத்தையே விட்டுவரத் தயார் என்று சக்தியிடம் சொன்ன கவுசல்யாவும், இத்தனைக்கும் பிறகு தான் பறையைத் தூக்கமாட்டேன் நிமிர்வுக்கலையகம் பக்கம் இனி செல்லப் போவதில்லை என்று பாதிக்கப்பட்டவரிடம் சொன்ன சக்தியையும் அவர்கள் சொன்னதையே செய்யச் சொல்லுங்கள் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வைத்த கோரிக்கை. இதற்கும் வெளியிடப்பட்டிருக்கும் முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.
இந்தக் கலையை சுய ஒழுக்கத்தோடு காப்பாற்றுவதற்கு எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் தோழர்களே!.சக்தியின் இந்த இச்சை புத்திக்காகத்தான் தனது பிள்ளைவரை பலிகொடுத்திருக்கிறார் என்பதுதான் வரலாறு.”
நீங்கள் சொன்னதையே செய்யச் சொல்லவும் முடியாது! அவர்கள் சொன்னதையே செய்யச் சொல்லவும் முடியாது! அப்படிச் செய்வதற்கு நாங்களும் தேவையில்லை, எங்கள் விசாரணையும் தேவையில்லை. கொலைத் தண்டனையையும் எதிர்க்கிறோம், சாகும் வரையிலான வாழ்நாள் தண்டனையும் எதிர்க்கிறோம். என்ன குற்றம் செய்திருப்பினும் சீர்திருத்தத்துக்கும் மறுவாழ்வுக்கும் இடமளித்தாக வேண்டும். நீங்கள் விரும்பினாலும் அவர்களே விரும்பினாலும் எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.
”8. மீண்டுமாக அழுத்தமாக ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. முடிவுகளை அறிவித்தபோது ‘சக்தியின் போக்கின் அடிப்படையில் மற்ற பாலியல் குற்றங்களிலும் அவர் ஈடுபட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை வாய்ப்புகள் இருக்கிறது’ என்றே கூறப்பட்டது. அதற்கான On the spot ஆதாரங்கள் சிலவும் முன்வைத்துப் பேசப்பட்டன. திருநங்கை விவகாரத்தில் சக்தி கௌசல்யா இருவருமே திருநங்கையிடம் கெஞ்சியிருக்கிறார்கள். அப்படியிருக்க மற்ற குற்றச்சாட்டுகளை அவதூறு என சக்தி தனது தனிப்பதிவில்
குறிப்பிடுவது முடிவுகளை மறுப்பதாகாதா? திருநங்கையைத் தவறானவராகச் சித்தரிக்காதா?. மூன்றாம் பாலினத்தவர்களின் சமநீதிக்காகவும் முழங்குகிறோம் என்று சொல்லிவிட்டு இப்படியான தவறான பிம்பத்தை திருநங்கையின் மீது கட்டமைப்பது அவரது வாழ்வுரிமையைப் பறிக்காதா?.மேலும் இதனை எதிர்த்துக் கேட்கும் பெண்களையும் திரித்துவிடுகிறார்கள் தூண்டிவிடுகிறார்கள் என்பதும் அவரது நடத்தையை விமர்சிப்பதும் நாகரிகமான செயலா?.இருக்கும் எல்லா சமூகநீதியையும் தாங்கள் இருவருமே போட்டுடைத்துவிட்டு இனிமேலும் எதைக் காப்பதற்காக இருவரும் போராளியாகச் சுற்றிக் கொண்டுத் திரியப் போகிறார்கள்?”
.
குறிப்பான சில குற்றச்சாட்டுகளை அறுதியிட்டு உண்மை என்று தீர்மானிப்பதற்கான வழிமுறைகளோ பொறிமுறைகளோ எங்களிடம் இல்லை; இதை அறிக்கையிலேயே தெளிவாக்கி விட்டோம். அறிக்கை
வெளியிட்ட பிறகான பல்வேறு தனிப்பதிவுகளை நாங்களும் அறிந்துள்ளோம். அறிக்கையில் இது குறித்து எச்சரித்தும் உள்ளோம். எங்கள் அறிக்கையின் கால வெளி வரம்புகளுக்கு அப்பால் கேட்கப்படும் வினாக்களுக்கு நாங்கள் விடை சொல்ல வேண்டியதில்லை.
“9. அங்கே பொதுவில் குற்றத்தை ஒப்புக்கொண்டு பெயரளிவில் மன்னிப்பு கேட்டார் கௌசல்யா. சக்தி இனிமேல் இப்படி பெண்கள் விஷயத்தில் செய்யமாட்டான் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் அதனால்தான் திருமணம் செய்ததாகவும் அனைவர் முன்பும்தான் பதில் சொன்னார் அவர். ஆனால் முகநூலில் மட்டும் தனக்கும் சக்திக்கும் கருக்கலைப்பில் பொறுப்பில்லை என்று பதிவிடுகிறார். அவதூறுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று இவர் பதிவிடுகிறார். முற்றிய முட்டாள்தனங்கள் மட்டுமே இப்படியான விவாதத்தையும் காரணங்களையும் முன்வைக்கும் சக்தி-கவுசல்யா, அங்கே கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் அப்படிப் பேசிவிட்டு பொதுத்தளத்தில் இப்படி மாற்றிப் பேசுவது இருவரும் தனது எந்த பிம்பத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக?”
உங்கள் இந்த விமர்சனம் எங்கள் அறிக்கை தொடர்பானதன்று. அறிக்கையை ஏற்றுக் கொண்டு அறிக்கையில் இல்லாதவற்றை மறுக்க யாருக்கும் உரிமை உண்டு. அது உவப்பானதா இல்லையா என்பது வேறு. அப்படிச் செய்ய உரிமை உண்டா இல்லையா என்பது வேறு. நீங்களும் மற்றவர்களும் கூட இதே உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தடையில்லை.
கருக்கலைப்பில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று சக்தி–கௌசல்யா இப்போது சொல்வதைக் குற்றம் என்று சொல்கிறீர்கள். கருக்கலைப்பு குறித்து நீங்களும் எங்களிடம் நேரில் இதைத்தான் சொன்னீர்கள். நாங்கள் இது பற்றி உங்களிடம் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்ட போதும் நீங்கள் ”இது நானாக எடுத்த முடிவு, கருக்கலைப்பு முடிந்த பிறகுதான் சக்திக்குத் தெரிவித்தேன்” என்று தெளிவாக விடையளித்தீர்கள். மேலே ஐந்தாம் பத்தியில் கூறியிருப்பதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
”10. கௌசல்யாவின் செயல் வருந்தத்தக்கது என்று அங்கே முடிவில் சொன்னது கூட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. இப்படிப் பூசி மொழுகியதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை சமூகநீதியைக் காப்பாற்றுவதற்காகவா அல்லது சமூகநீதியின் பெயரால் இத்தனையும் செய்துகொண்டிருக்கும் இருவரைக் காப்பாற்றுவதற்கா?. நமது பக்கமிருக்கும் போலிகளைக் களையவே நாம் முன்வராதபோது இந்துத்துவ ஃபாசிசங்களை சாதிய விஷங்களை எதிர்க்கும் நம்பிக்கை எங்கிருந்து கிடைத்துவிடப் போகிறது?”
அறிக்கையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
கௌசல்யாவின் பிழை என்றும், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
எங்களுக்கும் எங்கள் நடுநிலைக்கும் நீங்கள் வழங்கியிருக்கும் சான்றிதழுக்காக நன்றி!
எங்கள் அரசியலுக்கும் நீங்கள் பெரிய மனது பண்ணி வழங்கியுள்ள அறிவுரைக்கு நன்றி!
ஒன்றே ஒன்றுதான்: எண்ணத்தில் வன்மம் தேக்கி எவரையும் அழிக்க நினைப்பதை நீதி என்று கருத நாங்கள் கற்றுக்கொள்ள வில்லை. .
”விசாரிப்பதாக நீங்களே அழைத்ததும், உங்கள் அறிக்கையும் அதன்மீதான குற்றாவாளிகளின் பகிர்வும் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவர்களின் மன அமைதியையாவது சிதைக்காமல் இருக்கவேண்டும் என்கிற யோசனையில் இருந்திருக்கலாம்.”
நாங்கள் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் உங்களையோ மற்றவர்களையோ விசாரணைக்காக அழைத்தோம் என்று சொல்வது உண்மைக்கு மாறானது. எங்கள் அறிக்கைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பேற்க முடியும். உங்கள் மன அமைதிக்கோ அல்லது அமைதிக் குலைவுக்கோ நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இந்த விளக்கத்தைப் பார்த்த பிறகாவது அறிக்கையையும் அதன் முடிவுகளையும் ஏற்று ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களிடமிருந்து மூன்று நாட்களுக்குள் விடை இல்லையென்றால் நீங்கள் அறிக்கையை இறுதியாக மறுதலித்து விட்டதாகவே கருதிக் கொள்வோம்.
எவ்வாறாயினும், உங்களுக்கு ஏற்பட்ட வலிமிகுந்த பட்டறிவிலிருந்து பாடம் பெற்று நல்லதொரு வருங்காலத்தை அமைத்துக் கொள்ள அன்புடன் வாழ்த்துகின்றோம். நன்றி!
தியாகு / கொளத்தூர் மணி,
06.01.2019.