வாசகர்களிடமிருந்து…
‘எழுத்தில் வராத வரலாறுகள் – களப்பணி யாளர்களின் வாய்மொழியாக பதிவு செய்யப்படும்போது இயக்கச் செயல்பாடுகளையும் தோழர்களின் உணர்வுகளை யும் உணர முடிகிறது. 14 வயதில் பெரியாரிடம் வந்து 23ஆவது வயதில் அரசுப் பணியில் சேர்ந்து ஓய்வுக்குப் பிறகு சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்ட நிலையிலும் தன்னை ஆட்கொண்ட தலைவர் பெரியார்தான் என்று கூறம் மா.கோபாலின் வாய்மொழி வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது. அன்று சென்னையில் திராவிடர் கழகம் எப்படி செயல்பட்டது; கூட்டங்கள் எப்படி நடத்தப்பட்டன என்ற வரலாறுகளை இளைய தலைமுறைக்கு உணர்த்தியது, இந்த வாய்மொழி வரலாறு.
– மணி, திருச்சி
‘பிரம்மத்தைப் பார்த்த பிரமாணன் உண்டா?’ என்ற புத்தர் இயக்கம் பற்றிய கட்டுரை பல தகவல்களை அறிய உதவியது. முடிதிருத்தும் நாவிதர் சமூகத்தைச் சார்ந்த உபாலி – பவுத்த சங்கத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் உயர்த்தப்பட்டதோடு பவுத்த நூலான திரிபிடகத்தைப் படித்து மற்றவர்களுக்கு விளக்கக்கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார் என்பது அந்த காலத்தில் புத்தர் செய்த பெரும் புரட்சி.
புத்தர் மார்க்கத்தை அவரது சீடர்கள் ஊர் ஊராகப் பரப்பினார்கள். புத்தரும் ஊர் ஊராகச் சென்றார். பெரியாரும் தமிழ்நாடு முழுதும் சுற்றிச் சுற்றி மக்களிடம் பேசினார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் சிந்தனை மாற்றத்தை உருவாக்கும் கருத்துப் புரட்சி மிகவும் வலிமையானது. புத்தருக்குப் பிறகு மக்களை சந்தித்து அவர்களின் இதயங்களோடு உரையாடிய தலைவர் பெரியார் மட்டுமே! புத்தர் – பார்ப்பனர்களை புத்த மார்க்கத்தில் இணைத்ததால் ஊடுறுவி அழித்து விட்டனர். இந்த வரலாற்றிலிருந்து பெரியார் கற்ற பாடம்தான் பார்ப்பனர்களை திராவிடர் கழகத்தில் சேர்க்காமல் தடுத்தது. புத்த மார்க்கத்தையும் பெரியார் இயக்கத்தையும் ஒப்பீடு செய்யும் ஆய்வுகள் இன்னும் வர வேண்டும். பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சிக்கு அவை நிச்சயம் வலிமை சேர்க்கும்.
– சரவணன், காஞ்சிபுரம்
கிராமங்களில் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அங்கே நடக்கும் ஜாதிய ஒடுக்குமுறைகளைக் கவனத்தில் கொள்வது இல்லை. ‘ஜாதியமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் தான்’ என்ற மனுஷ்ய புத்திரனின் உரையை ‘நிமிர்வோம்’ வெளியிட்டதற்காகப் பாராட்ட வேண்டும். நகரங்கள் ‘பிராமண’த்தன்மையிலும் கிராமங்கள் சூத்திரத் தன்மையிலும் இருக்கிறது என்று கூறிய பெரியார், கிராமங்களே ஒழிய வேண்டும் என்று கூறினார். எவன் ஒருவன் சுய மத மறுப்பாளனாக, சுய ஜாதி மறுப்பாளனாக இல்லையோ அவன் பேசுகிற அனைத்து அறங்களும் அறிவியலும் போலித்தனமானது என்று மனுஷ்ய புத்திரன் கூறியிருப்பது மிகச் சிறப்பான கருத்து.
– பாஸ்கர், வேலூர்
மரணத்தை சந்திப்பதற்கு 39 நாட்களுக்கு முன்பு, ‘இந்த சமுதாயத்தின் சூத்திர இழிவு ஒழிப்புக்காக நான் பலிகடாவாகிறேன்’ என்ற பெரியார் பேச்சை ‘நிமிர்வோம்’ இதழில் படித்தபோது கண்ணீர் வந்து விட்டது. “தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும்; 75 வருடமாய் தெரியும்; தமிழனுக்காக நான் பலிகடாவா கிறேன்; மானமுள்ளவர்கள் வாருங்கள்; முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள்” என்று பேசக்கூடிய துணிவும் நேர்மையும் பெரியாருக்கு மட்டுமே உண்டு.
– பிரபாகரன், திருப்பூர்
நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்