வாசகர்களிடமிருந்து மார்ச் மாத இதழ் கடிதங்கள்
‘அடக்குமுறைகளையும் கொள்கைக்கு பயன்படுத்தும் தலைவர்’
நிமிர்வோம் மார்ச் இதழில் ஈஷா மய்யம் மோசடி குறித்த தகவல்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தின. “ஜக்கி அவர்களே பதில் சொல்லுங்கள்” என்ற தலைப்பில் ஜக்கியிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் அர்த்தமுடையவை.
-த.முகுலன், ஆக்கூர்
1932ல் குடிஅரசு ஏட்டில் இந்த ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரைக்காக பெரியார் கைது செய்யப்பட்டவரலாற்றுப் பின்னணியையும் -அது குறித்த பெரியார் உரையையும் படித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். பெரியார் தன் மீதும் தனது இயக்கத்தின் மீதும் அடக்குமுறைகள் வரும் போது அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்த்து விட்டு, அவற்றை மேலும் தனது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறார்.இதுபெரியாருக்கே உள்ள தனித்தன்மை. வரலாறு நெடுக அவரிடம் இதைப் பார்க்க முடிகிறது. அடக்குமுறை சட்டம் பாய்ந்தது குறித்து பெரியார் எழுதும் போது “இதுபற்றி தான் வருத்தப்படவுமில்லை. அரசை கோபிக்கவும் இல்லை. இதுவரை இப்படி கைது செய்யாமல் இருந்தார்களே என்பதற்காக நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவிக்கிறேன்” என்று பெரியார் எழுதுகிறார். அதே அறிக்கையில் ” தனது உடல்நிலை அதிகமாய் சீர்கெட்டு விட்டது மயக்கமும், மார்வலியும் அதிகம் கால்களில் நீர் ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதும் சரியாய் கேட்பதில்லை ” என்று எழுதிவிட்டு அந்த உடல்நிலையோடு சிறைக்கும் செல்கிறார். இதே உடல்நிலையில் 5 மாதத்துக்கு மேல் ராஜமகேந்திரம் சிறையிலிருந்து விட்டு விடுதலையாகி வெளியே வரும் போது சிறையில் அதற்கு முன்பு இருந்தது போல் ‘கஷ்டம்’ ஏதுமில்லை என்று பேசுகிறார். பொது வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துயரங்களை உதறித் தள்ளிவிட்டு அதை பொருட்படுத்தாது சமுதாயத்துக்கு உழைத்த இந்தத் தலைவரை நினைத்த போது நெகிழ்ந்து போய்விட்டேன்
-கு.தேன்மொழி, திருமுல்லை வாசல்.
மயிலை பாலு எழுதிய சங்க இலக்கியங்களில் ‘வைதீக எதிர்ப்பு’மிகச் சிறப்பான கட்டுரை. கடவுள் வேத மறுப்பு – தமிழர் மரபோடு இணைந்திருப்பதை தக்க சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார். ‘ கடவுள் வாழ்த்து’ சங்க இலக்கியங்களில் இல்லை என்று கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. அதுபோல் ‘ வணக்கம்’ என்ற சொல்லும் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை. ‘வாழ்த்துக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்று பேராசிரியர் நன்னன் போன்ற தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதே போன்று சங்க இலக்கியங்களில் சாதி, தீண்டாமை இல்லை என்ற ஆய்வு நூலை எழுதியுள்ள வீ.எஸ்.இராஜம் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ; மற்றும் நம்மாழ்வார் பாசுரம் (திருவாய் மொழி) ஆகியவற்றில்தான்முதன்முதலாகவலிந்து ஜாதி புகுத்தப்படுவதை கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகிறார். சிலப்பதிகாரத்தில், மதுரையில் கண்ணகியின் “சிலம்பை விற்கச் சென்ற கோவலனின் முன்வந்த பொற்கொல்லனின் விலங்கு நடைச்செலவின் கொல்லன்” என்று நூலாசிரியர் இளங்கோ கூறுகிறார். ‘விலங்கு நடை’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரையில்ஜாதிபுகுத்தப்படுகிறது.இழிகுலத்தோர் ஆதலின் உயரந்தோர் வந்த இடமெங்கும் விலங்கி நடத்தல்”என்றுவிளக்கம்தந்தார். இதற்கு உ.வே.சா என்ற உ.வே. சாமிநாதய்யரும்” மேன்மக்களைக் கொண்டு ஒதுங்கிநடத்தல் “என்றுவிளக்கஉரைஎழுதினார். உரை எழுத வந்த பார்ப்பனர்கள், தான் இப்படி வலிந்து , ஜாதி, வர்ணஸ்ரம கருத்துகளைத் திணித்திருக்கிறார்கள்.
-செந்தமிழ்ச்செல்வன், மணப்பாறை
நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்