போலி அறிவியலை தோலுரித்த நரேந்திர தபோல்கர்
நரேந்திர அச்சுத் தபோல்கர் (1945-2013) ஒரு பிரபலமான அறிவியல் ஆர்வலர், பகுத்தறிவுப் போராளி மற்றும் எழுத்தாளர். 2013 ஆகஸ்ட் 20 அன்று காலையில் நடை பயிற்சியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். தபோல்கரைப் பற்றி உடனேயே அறிவியல் கதிரில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். மனிதத் தன்மையற்ற மூடநம்பிக்கைகளுக்கெதிராக அவரது இடைவிடாத பிரச்சாரத்தின் காரணமாகவும் மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்ததற்காகவும்தான் அவர் கொல்லப்பட்டார் என்பது வெளிப்படையான உண்மை.
தபோல்கர்தான் முதல் பலி என்பதுபின்னர் தெரிந்தது. 2015 பிப்ரவரி 20 அன்று கோவிந்த் பன்சாரே, அதே வருடம் ஆகஸ்ட் 30 அன்று எம்.எம்.கல்புர்கி, 2017 செப்டம்பர் 5 அன்று கௌரி லங்கேஷ்ஆகிய பகுத்தறிவாளர்களும் மதச்சார்பின்மைக்காகப் போராடியவர்களும் செயல்பாட்டாளர்களும் ஆன மேலும் மூவர் வரிசையாகக் கொல்லப்பட்டனர். `சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புதான் இவர்களைக் கொலை செய்த குற்றத்தைச் செய்தது என்று கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. சமூகத்தில் தபோல்கரின் தலையீடுகள் காரணமாக மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதொரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி கர்நாடகாவிலும் அப்படிப்பட்ட தொரு சட்டம் நிறைவேறியது. லங்கேஷ் கொலை யுண்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு 2017 நவம்பரில் மாயமந்திரங்களை வைத்து மக்களை ஏமாற்றுவதைக் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சட்டத்தை கர்நாடக அரசு மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு ஒருவழியாக நிறைவேற்றியது. மூடநம்பிக்கைகளுக்கெதிரான போராட்டம் என்பது தபோல்கரது வாழ்க்கையின் லட்சியப் பயணமாக இருந்தது. அந்தர் ஷதா நிர்மூலன் சமிதி (மூடநம்பிக்கை ஒழிப்புக் கழகம்) என்ற ஒரு அமைப்பை உருவாக்கியதோடு வட்ட அளவில் அதற்கு கிளை களையும் ஏற்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வைப் பெருக்க அவர் கடுமையான முயற்சிகளை மேற் கொண்டார். அவர் மராத்தியில் எழுதிய கட்டுரைகளை சுமன் ஓக் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கூhந ஊயளந கடிச சுநயளடிn என்ற நூல் வெளியாகி யிருக்கிறது. புத்தகம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. மூடநம்பிக்கை களுக்கெதிரான இயக்கத்தின் பல்வேறு கோட்பாடு சார்ந்த விளக்கங்களை முதல் பகுதி தருகிறது. அறிவியல் வரலாறு, தத்துவம் பற்றியும் மனித வாழ்க்கையின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள அறிவியல் பார்வையுடன் அணுக வேண்டியதின் அவசியம் பற்றியும் ஒன்பது கட்டுரைகள் உள்ளன.
இரண்டாவது பகுதி ஏ.என்.எஸ். அமைப்பு பற்றியும் அதன் நடவடிக்கைகளையும் பற்றியது. மூடநம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளுக்கும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட பல்வேறு பிரச்சாரங்களை இப்பகுதி விவரிக்கிறது. போலி சாமியார்களையும் கடவுளை நேரில்பார்த்துவிட்டு வந்தவர்கள் போல அவர்கள் விடும் சரடுகளையும் ஜோதிடம், வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளையும் தபோல்கர் அம்பலப்படுத்து கிறார். முதல் பகுதியில் விளக்கப்பட்ட கோட்பாடுகளைகுறிப்பிட்ட சில நிகழ்வுகளுடன் பொருத்திய செயல்முறை விளக்கங்கள் இரண்டாவது பகுதியில் தரப்படுகின்றன. நூல் முழுவதுமே கொள்கையையும் நடைமுறையையும் நெடுக இணைக்கும் பாலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 8ஆவது நூற்றாண்டுக்குப் பிறகு விஞ்ஞான அறிவு ஏன் வளராமல் போனது என்ற கேள்வியை எழுப்பி அதற்கு ஐந்து காரணங்களை முன் வைக்கிறார் தபோல்கர். சடங்குகளுக்கும் கர்ம பலனுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஜாதிய அமைப்பு, முறையற்ற கல்வி, குடும்ப அமைப்பு, தனிப்பட்ட நபர்களைத் துதி பாடல் ஆகியவையே அவர் எடுத்துவைக்கும் காரணங்கள். இதே கால கட்டத்தை அறிவியல் வீழ்ச்சியடைந்து மனுவாதம் தலைதூக்கிய `எதிர்ப்புரட்சிக்கான’ காலம் என்று அம்பேத்கர் வர்ணிக்கிறார். ஒரு விதத்தில் அந்த மனப்பாங்குதான் இன்னமும் தொடர்கிறது. தொடர்வது மட்டுமல்ல, இன்றிருக்கும் அரசியல் சூழலில் மேலும் பலம் பெற்று வளர்ந்து கொண் டிருக்கிறது. பழமைவாதமும் புராண காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளும் வலுப்பெற்று வருகின்றன. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பு ஒரு உதாரணம்தான்.
நவீன அறிவியலையும் அதன் எல்லைகளையும் பற்றி “அறிவியல் கண்ணோட்டம் என்பது இயற்கையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டதல்ல. இயற்கையையும் அதன் விதிகளையும் புரிந்துகொண்டு அவற்றை மனிதர்களுக்கு நன்மை தரும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம்” என்கிறார் தபோல்கர். அறிவியலின் `மதிப்பு’பற்றிக் கூறும்போது “அறிவியல் கண்ணோட்டம் நாம் மற்றவர்கள் எதை நமக்குச் செய்யக் கூடாது என்று விரும்புகிறோமோ அதை நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற மனிதநீதி மனப்பான்மையை உருவாக்கும்” என்கிறார்.
“அறிதுயில் நிலை (hலயீnடிளளை) என்பது ஒரு போலி அறிவியல்என்பதை நிலைநாட்ட, பாசிட்டிவ் எனெர்ஜியைத் தருகிறேன் என்ற பெயரில் அறிவியல் பிதற்றொலிகளை (தயசபடிளே) சில போலி சாமியார்கள் எழுப்பி மக்களை மயக்குவது அறிவியலுக்கு எதிரானது. தற்போது ஆசிரியர்கள், கார்ப்பரேட் நிர்வாகிகள், நிர்வாகவியல் நிபுணர்கள் உள்ளிட்ட மக்கள் பிரிவினர் அறிவியல் பிதற்றொலிகளைப் பயன்படுத்தும் ஆன்மீக குருஎன்றும் மனிதவள மேம்பாட்டு வல்லுநர் என்றும் தன்னை அழைத்துக் கொள்பவர்களால் எளிதில் முட்டாளாக்கப் படுகிறார்கள். எளிமையான, விமர்சனப் பார்வையின்றி கேட்டதை அப்படியே நம்புவோரிடம் அறிவியலை யும் ஆன்மீகத்தையும் கலந்து கொடுத்து ஏமாற்றுவது அவர்களுக்கு மிகவும் எளிதாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு அருள்பாலிக்கும் சாமியார்களிடம் சென்று குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளையும் பாவத்திற்கு பரிகாரங்களையும் கேட்போரை எதைச்சொல்லிக் காப்பாற்றுவது? இப்படிப்பட்ட ஏமாளித்தனத்தி லிருந்து இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர்களும் தப்புவதில்லை” என்று எழுதி நமக்கு விழிப்புணர்வூட்டுகிறார் தபோல்கர். மக்களுடைய வாழ்வில் விளையாடி கேட்டினை விளைவிக்கும் நோய்களிலிருந்து குணம் பெறு வதற்கான மருந்து தபோல்கரின் புத்தகங்களில் கிடைக்கிறது.
தபோல்கரின் எழுத்தில் ஒரு வடிவம் இருக்கிறது. முதலில் ஒரு மூடநம்பிக்கை தோன்றிய வரலாற்றை எழுதி, பின்னர் அது செயல்படும் விதத்தை அம்பலப் படுத்தி, இறுதியாக அது நம்நாட்டு நிலைமைகளில் எப்படி பொருந்திப் போகிறதுஎன்பதற்கான பகுத்தறிவு சார்ந்த விளக்கத்தை அவர்தருகிறார். மூடநம்பிக்கைகளை எதிர்ப்போரை இந்து மதத்திற்கு எதிரானவர்கள், தேசவிரோதிகள் எனமுத்திரை குத்தித் தாக்குவதில் வலதுசாரி இந்துத்துவாவாதிகள் பெருமை கொள்கிறார்கள். அறிவியல் கண்ணோட் டமும் பகுத்தறிவும் பரவுவது அவர்களுடைய மதவெறுப்பு அரசியலுக்கு எதிராக இருப்பதால் பகுத்தறிவாளர்கள் மீது இப்படி முத்திரை குத்துவது அவர்களுடைய தந்திரமாக இருக்கிறது. தாக்குதலுக்கு ஒரு காரணத்தைக் கற்பிக்க வேண்டுமல்லவா, அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். ஆனால் தபோல்கரின் புலனாய்வு முஸ்லிம்களிடம் உள்ள `அற்புதங்களை’யும் அம்பலப்படுத்தத் தயங்கிய தில்லை. காமர் அலி தர்வேஷ், சாகிப்ஜாதி நடத்தும் கூட்டங்கள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகள் இதைத் தெளிவாக்குகின்றன. அன்னை தெரசா மனிதர்களுக்கு செய்த சேவைகளைக் காட்டிலும் அவர்செய்ததாகச் சொல்லும் அற்புதச் செயல்கள் காரணமாக அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப் பட்டபோது தபோல்கர் அதை விமர்சித்து போப் அவர்களுக்கே கடிதம் எழுதினார். அதனால் அவர் ஏதோ இந்துமதத்திற்கு எதிரானவர் என சித்தரிப்பது உண்மைக்குப்புறம்பானது. அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டு சிந்தித்தவர் என்பதுதான் உண்மை. நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பண்பாட்டு நடைமுறைகள் மனித வாழ்க்கையைக் கட்டமைத்திருப்பதற்கான காரணங்களை மேலும் ஆழமாக தபோல்கர் அலசாமல் விட்டது ஏன் என்ற கேள்வியும் புத்தகத்தைப் படிப்போரிடம் எழுகிறது. நம்பிக்கை மற்றும் பகுத்தறிவின்மையின் பல்வேறு வடிவங்கள் பண்பாட்டு நடைமுறைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை.
அதே சமயம் வரலாற்றிலிருந்தும் தத்துவத்தி லிருந்தும் ஏராளமான தரவுகளை இந்த புத்தகம் எடுத்துக் கையாண்டிருக்கிறது. படிப்பதற்கு எளிமையாக இருப்பது அதன் பெரிய பலம். தற்போதிருப்பதை விட சிறந்த மனித சமூகத்தைக் காண விழைவோர் அறிவுஜீவிகளானாலும் சரி, சாமானிய மக்களானாலும் சரி அவர்கள் இரு பிரிவினருக்குமே இந்த நூல்பயனுள்ளது. மக்கள் விழிப்புணர்வு பெறவும் மதச் சார்பின்மைத் தத்துவம் நாட்டில் வேரூன்றவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற மனிதநேய மேதைகளை என்றென்றும்நினைவில் வைத்துச் செயல்படுவோம். (உதவிய கட்டுரை : 2018 நவம்பர் 11 அன்று ஆங்கில இந்து நாளிதழில் வி.எஸ். ஸ்ரீதரா எழுதியது)
நன்றி: ‘தீக்கதிர்’
பெரியார் முழக்கம் 20122018 இதழ்