தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)
1814ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், 200 ஆம் ஆண்டுகளில் நினைவு கூரப்படுகிறார். மதம் பரப்புவதற்குத்தான் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவரது தொண்டு திராவிட மொழிகளின் ஆய்வுகளை நோக்கித் திரும்பியது. ‘திராவிடம்’, ‘திராவிட இயல்’ என்ற கருத்தியலை தனது ஆய்வு மூலம் நிறுவிக் காட்டிய பெருமைக்குரியவர் கால்டுவெல்!
கால்டுவெல்லுக்கு முன்பு பிரிட்டிஷ் புலமையாளர்கள் பலரும் ‘இந்தியா’ எனும் நிலப் பகுதி மக்கள், ‘இந்தோ-ஆரிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என்றும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.
வில்லியம் ஜோன்ஸ், ஹீம் போல்ட் போன்ற “புலமையாளர்கள்” சமஸ்கிருதத்தையும், அதன் பார்ப்பன பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தனர். ஆரியப் பார்ப்பனர்கள், அய்ரோப்பிய பண்பாட்டுடன் தங்களை இணைத்து பெருமை பாராட்டிய காலத்தில், கால்டுவெல் முன் வைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வு’ – ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு என்பதை உறுதிப்பட நிலைநாட்டியது.
‘திராவிட’மான தென்னகத்தில் பல் மொழி பேசும் இனத்தையும் மொழியையும் ஆய்வுக்கே எடுத்துக் கொள்ளாத காலகட்டம் அது. இந்தப் புரட்டைத் தகர்த்து பிரான்சிஸ் வைட் எல்லீஸ், ஏ.டி. காம்பெல், தாமஸ் ட்ரவுமன் போன்ற புலமையாளர்கள் தென்னக மொழிக் குடும்பத்தின் தனித்துவத்தை முதன்முறையாக வெளிக் கொண்டு வந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அன்ட்ரிக் அடிகள், இராபர்ட் டி. நொபிலி, வீரமா முனிவர், சீகன்பால்கு போன்ற புலமையாளர்கள் தமிழ்மொழி குறித்து வெளிப்படுத்திய சிந்தனைகள் உருவாக்கிய வெளிச்ச பின்புலத்தில் கால்டுவெல் 1838இல் சென்னைக்கு வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளைக் கற்று கால் நடையாகவே தமிழகத்தைச் சுற்றி மக்களின் வாழ்க்கைக் கூறுகளை ஆய்ந்தார். நெல்லை மாவட்டம் இடையான் குடியில் நிரந்தரமாகத் தங்கி, மதப் பணிகளைத் தொடர்ந்தார். உடல்நலப் பாதிப்பால் 1854இல் மீண்டும் அயர்லாந்து திரும்பி, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை எழுதி முடித்து 1856 இல் லண்டன் நகரத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.
இந்த முதற் பதிப்பை மேலும் விரிவாக்கி, 1875இல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட 22 மொழிகளை திராவிட மொழிக் குடும்பம் என்று அழைத்ததோடு, அம்மொழிக் குடும்பத்தில் மூத்தது, தமிழ் என்று வரையறுத்தார்.
ஆரிய, சமஸ்கிருத பார்ப்பன மொழி பண்பாட்டுக்கு நேர் எதிரான ‘திராவிடம்’ – ‘திராவிடர்’ என்ற கருத்தாக்கம் வேர் பிடித்து, இனஉரிமைக்கான சிந்தனைகள் முகிழ்விடத் தொடங்கியதற்கு கால்டுவெல் ஆய்வு அடித்தள மிட்டது என்று கூறலாம்.
மொழி ஆய்வையும் தாண்டி, தமிழ் இலக்கிய உருவாக்கப் போக்குகளில் சமூகப் பார்வையை அவர் முன் வைத்தார். இது மிகவும் முக்கியமானது. பார்ப்பனிய எதிர்ப்புகளி லிருந்து தமிழ் இலக்கியம் உருவாக்கம் பெற்றதையும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான “பறையர்”, “சாணார்” குறித்த சமூக நிலையையும் இந்து மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதையும் கால்டுவெல் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 1913இல் அவரது ஒப்பிலக்கண நூலை பாடத் திட்டமாக ஏற்ற சென்னை பல்கலைக்கழகம், அவரின் இந்த பார்ப்பனிய ஜாதி எதிர்ப்பு கருத்துகளை நீக்கி விட்டது. தமிழ் மரபாக சைவத்தை முன்னிறுத்திய சைவர்கள், வடமொழி எதிர்ப்பை மட்டும் எடுத்தாண்டனர். கால்டுவெல் எடுத்துக் காட்டிய பார்ப்பனிய இந்துமத ஜாதி ஒடுக்குமுறைகளோடு சமஸ்கிருதப் பண்பாட்டை எதிர்த்து நின்றது – அச்சூழலில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தான் என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியும்.
‘திராவிட’ எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போதும் திராவிட மொழி வழி அடிப்படையிலான முரண்பாடுகளை மட்டுமே முன்னிறுத்துகிறார்கள்.
பெரியாரியலுக்கு அதில் மாறுபாடு இல்லை. ஆனாலும், பார்ப்பனிய-சமஸ்கிருத பண்பாடு வலியுறுத்தும் ஒடுக்கு முறைக்கு எதிரான குறியீடாக ‘திராவிட’த்தை அவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்.
மொழியியலை – சமூகப் பார்வையோடு இணைத்து ஆய்ந்தவர் என்ற பார்வையில் கால்டுவெல்லை நன்றியோடு நினைவு கூர்வோம்!
பெரியார் முழக்கம் 15052014 இதழ்